Published:Updated:

``திடீர்னு வரும் போன்; அதிர்ச்சியா அவர் சொன்ன விஷயம்..!" - கே.ஆர்.விஜயாவின் ஶ்ரீகாந்த் நினைவுகள்

ஜெயலலிதாவின் முதல் திரை நாயகன் ஶ்ரீகாந்த் நேற்று காலமானார். திரைத்துறையில் பலருடைய அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமான ஶ்ரீகாந்த் நினைவுகள் குறித்து, அவருடன் பல படங்களில் நடித்த நடிகை கே.ஆர்.விஜயாவிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெயலலிதாவின் முதல் திரை நாயகன் ஶ்ரீகாந்த் நேற்று காலமானார். ஹீரோ, குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பன்முகத்தன்மையுடன் கிளாஸிக் காலகட்ட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம்வந்த ஶ்ரீகாந்த், திரைத்துறையில் பலருடைய அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமானவர். இவருடன் பல படங்களில் நடித்த நடிகை கே.ஆர்.விஜயாவிடம், ஶ்ரீகாந்த் நினைவுகள் குறித்துப் பேசினோம்.

ரஜினியுடன் ஶ்ரீகாந்த்
ரஜினியுடன் ஶ்ரீகாந்த்

``அவர் இறந்த செய்தியைக் கேட்டதிலேருந்து மனசு பாரமா இருக்கு" என்று வருத்தத்தை வெளிப்படுத்தியவர், அவருடனான பழக்கத்தைப் பகிர்ந்தார்.

``சினிமாவுல அவர் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். ஒரே காலகட்டத்துல வளர ஆரம்பிச்சோம். பல்வேறு கமர்ஷியல் படங்கள்லயும், புராணப் படங்கள்லயும் சேர்ந்து நடிச்சோம். ஹீரோ, ஹீரோயினா நாங்க இணைஞ்சு நடிக்கல. அந்தக் காலத்துல எங்களுக்கான கேரக்டர் எதுவா இருந்தாலும், அது பேசப்படுமான்னு மட்டுமே பார்ப்போம். அதனால, ஹீரோவா நடிச்சுகிட்டிருந்த ஶ்ரீகாந்த், அதுக்கப்புறமா செகண்டு ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர்னு வித்தியாசமான ரோல்கள்ல தயங்காம நடிச்சார். சினிமாவுல ஏற்ற, இறக்கம்னு மாறுபட்ட அனுபவங்களைப் பார்த்திருந்தாலும், அவரோட நல்ல குணம் மட்டும் எப்போதுமே மாறல. யாரைப் பத்தியும் குறையேதும் சொல்ல மாட்டார்.

'தங்கப்பதக்கம்' படத்தில்...
'தங்கப்பதக்கம்' படத்தில்...
Vikatan

தன்னைப் பிரபலப்படுத்திக்கவும், பொதுவெளியில தன்னை முன்னிலைப்படுத்திக்கவும் அவர் பெரிசா விரும்ப மாட்டார். இது பத்தி அவர்கிட்ட கேட்டிருக்கேன். `நடிச்சோமா, போனோமான்னு இருந்தாலே போதும்னு நினைக்குறேன் விஜயாம்மா!'ன்னு சிரிச்சுகிட்டே சொல்லுவார். அவருக்கு ஹியூமர் சென்ஸ் அதிகம். நாகேஷ், வி.எஸ்.ராகவன்னு அவரோட நட்பு வட்டாரத்துல நகைச்சுவை நடிகர்கள்தான் அதிகம் இருந்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நடிகர்களோடுதான் ஷூட்டிங் ஸ்பாட்ல அதிகமா பேசி சிரிச்சுகிட்டிருப்பார். அவர் என்னைவிட வயசுல மூத்தவர். ஆனா, `தங்கப்பதக்கம்' படத்துல அவருக்கு அம்மாவா நடிச்சேன். அந்தப் படத்துல நடிக்குறப்போ, `ஆரம்பத்திலிருந்தே நான் உங்களை விஜயாம்மான்னு கூப்பிட்டுப் பழகுனதும் நல்லதா போச்சு'ன்னு சொல்லிச் சிரிக்க வெச்சார்.

கமலுடன் ஸ்ரீகாந்த்
கமலுடன் ஸ்ரீகாந்த்
ஜெயலலிதாவின் முதல் ஹீரோ, ரஜினியின் முதல் வில்லன்… நடிகர் ஶ்ரீகாந்த் மறைந்தார்!

சிவாஜி சாருக்கு ஜோடியா அதிக படங்கள்ல நடிச்சது நான்னு சொல்லுவாங்க. ஆனா, ஷூட்டிங்ல மரியாதை நிமித்தமா அவரும் நானும் சில வார்த்தைகள் பேசிப்போமே தவிர, தனிப்பட்ட பழக்கம்னு எங்களுக்குள் பெரிசா எதுவும் இருக்கல. சொல்லப்போனா, இதே அணுகுமுறையிலதான் எங்க தலைமுறை நடிகர்கள் பலரும் இருந்தோம். அதேபோலத்தான் ஶ்ரீகாந்த் கூடவும் நான் அதிகமா பழகல. அவர் நடிக்குறதைக் குறைச்சுகிட்டதுக்குப் பிறகு, திடீர் திடீர்னு எனக்கு போன் செய்வார். `அது வந்து விஜயாம்மா...'ன்னு ஏதோ முக்கியமான விஷயம் சொல்லுற மாதிரியான மாடுலேஷன்ல குரலை உயர்த்துவார். ஏதாச்சும் ஒரு கோயில் லொக்கேஷனைக் குறிப்பிட்டு, `அது எந்தக் கோயில்? அந்தக் கோயிலுக்கு எப்படிப் போகணும்'னு கேட்பார். `இதுக்கா இப்படி ரியாக்‌ஷன் கொடுத்தீங்க?'ன்னு கேட்டுச் சிரிப்பேன். ரொம்ப நல்ல மனுஷன் அவர். அவரோட ஆன்மா சாந்தியடையணும்" என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு