Published:Updated:

7 சேனல் ஃப்ளாப்.. சற்றும் மனம் தளராத 7 பேர்! - `Finally' கிருஷ்ணா ஷேரிங்ஸ்

அஸ்வினி.சி

யூ டியூப் சேனல் ஆரபிக்குறோம்ன்னு வேலையையும் விட்டுடோம். எங்க வீட்ல கொஞ்சம் பயப்பட ஆரம்பிச்சிடாங்க.

Finally டீம்
Finally டீம்

இது யுடியூபர்ஸின் காலம். ஒரு சின்சியரான டீம்.. வித்யாசமான கான்செப்ட்... இதுதான் யூ டியூப் சேனல்களின் தாரக மந்திரம். கூடவே விடா முயற்சி. சேனல் தொடங்கி முதல் வீடியோவிலேயே யாராலும் ட்ரெண்டாகி விட முடியாது. தொடர்ச்சியாக புதுப்புது கான்செப்டில் வீடியோ போட்டுக் கொண்டே இருந்தால், திடீரென ஒரு வீடியோ வைரல் ஆகும். யூ டியூப் ட்ரெண்ட்ஸில் இடம்பெறும். ஆயிரத்தில் இருக்கும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஒரே நாளில் லட்சங்களாகும்.

Finally டீம்
Finally டீம்

ஆனால் இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் பொறுமையாக இருக்க வேண்டும். நிறைய யூ டியூப் சேனல்கள் திடீரென ட்ரெண்டாகி சில மாதங்களில் தடமே தெரியாமல் காணாமல் போய்விடும். ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ், ட்ரெண்டு, வைரல் ஃபார்முலா என அனைத்தையும் மனதில் வைத்து படைப்புகளை உருவாக்கி, புகழைத் தக்கவைத்திருக்கும் யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவற்றில் ``Finally'' -யும் ஒன்று.

அப்பாவித்தனமான ஒரு கேரக்டரை சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து செம ஃபன்னான ஒரு கான்செப்டை கொடுத்தது தான் ஃபைனலியின் ரீச்சுக்கு முக்கியக் காரணம். நட்பு, காதலுக்குள் நடக்கும் சின்ன சின்ன சலசலப்புகளை காமெடி கலந்து ரசிகர்களுக்கு தருகிறார்கள். Finally பிஜிஎம், பரத்தின் ரிங் டோன் இவையெல்லாமே மக்களை அதிகம் ரசிக்க வைத்தது.

அண்மையில் வெளியான Dating with machan வீடியோ வாட்ஸ் அப், ட்விட்டர் என செம வைரல். Finally வீடியோக்களில் அப்பாவித்தனமான பரத் கேரக்டரால் அதிகம் கடுப்பாவது கிருஷ்ணா தான். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்...

ஃபைனலி என்னும் யூ டியூப் சேனல் எப்படி உருவானது என்பதை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக விவரித்தார்.

ஃபைனலி கிருஷ்ணா
ஃபைனலி கிருஷ்ணா

``என் சொந்த ஊர் தூத்துக்குடி. படிச்சது வளர்ந்தது எல்லாமே கோவையில் தான். எல்லா யூ டியூபர்ஸ் மாதிரியும் நானும் இன்ஜினியரிங் தான் படிச்சேன். படிச்சு முடிச்சதும் என் அண்ணனோட நண்பர் பரத்துக்கு போன் பண்ணி அவரோடு சேர்ந்து வீடியோஸ் பண்ணனும்னு கேட்டேன். அப்புறம் சென்னைக்கு வந்து தனியார் ஊடக நிறுவனத்துல சேர்ந்து வீடியோவும் பண்ணினோம். முதலில் `BE tv’ -ன்னு ஒரு யு டியூப் சேனல் ஆரம்பிச்சோம். செம ஃப்ளாப்.

அப்புறம் Lollu factory, popcorn dappa இப்படி அடுத்தடுத்து ஒரு 7 சேனல் ஆரம்பிச்சோம்ங்க. எல்லாமே ஃப்ளாப். யூ டியூப் சேனல் ஆரம்பிக்குறோம்ன்னு வேலையையும் விட்டுட்டோம். எங்க வீட்ல கொஞ்சம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க. எங்க டீம்ல எல்லாருக்கும் இதே நிலை தான். ஃப்யூச்சர்.. கேரியர்ன்னு எங்களுக்கே ஒரு சின்ன பதற்றம் வந்துடுச்சு. அப்புறம் ஃபைனலா ஒரு ட்ரை கொடுத்து பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணி தொடங்கியதுதான் இந்த Finally டியூப் சேனல்.

ஃபைனலி கிருஷ்ணா
ஃபைனலி கிருஷ்ணா

கொஞ்ச நாள் இதுவும் சுமாரா தான் போச்சு. அப்புறம் செம பிக் அப். இப்போ எங்க டீம்ல 7 பேர் இருக்கோம். எங்க தேவைக்கு போதுமான அளவு வருமானம் வருது. ரசிகர்களுக்கு போர் அடிக்காத மாதிரி புது புது கான்செப்ட் யோசிக்கணும். எங்களுக்கு சோசியல் மெசஜ் சொல்லணும்ன்னு எந்த ஐடியாவும் இல்ல. ஒருவாட்டி அரசியல் சம்பந்தமா வீடியோ போட்டோம். ரசிகர்கள் கமென்ட்ல ``ஏன்யா நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க..உங்களுக்கு செட் ஆகலை’’ அப்படின்னு அட்வைஸ் பண்ணிணாங்க.

அதனால் எப்பவுமே ஜாலியான வீடியோ பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்’’ என்று கூலாக சொன்னவரிடம் சினிமா ஆசை இருக்கா என்று கேட்டோம்.

``கண்டிப்பா இருக்கு. நடிப்பு மேல இருக்க ஆசைல தான் இந்த யூ டியூப் சேனல் ஆரம்பிச்சது. வில்லன் ரோல் பண்ணனும்னு ஆசை. சில வாய்ப்புகள் தேடி வருது. பார்ப்போம்’’ என்றார் நிதானமாக.

ஆல் தி பெஸ்ட் கிருஷ்ணா!

அஸ்வினி.சி

Aspiring Journalist :)