Published:Updated:

’’ரஜினி சொன்ன ஒன்லைன்; கமல் காட்டிய ’இந்தியன்’ ஃபர்ஸ்ட் லுக்..!’’ - கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார், கமல் மற்றும் ரஜினியுடன் பணி புரிந்ததைப் பற்றி பேசுகிறார்

``நான் நடிக்க ஆரம்பித்தது ஒரு விபத்து. முதன்முதலில் 'புரியாத புதிர்' படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரை ஒரு காட்சியில் நடிக்க வைக்கத்  திட்டமிட்டிருந்தேன்  திடீரென சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்புக்கு அவர் வரவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் ராம்போ நடிக்க இருந்த வேடத்தில் நான் நடித்து முடித்தேன். 'புரியாத புதிர்' படத்தின் ரஷ்ஷை பார்த்த தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, 'ரவி. நீ நல்லாத்தான் நடிச்சிருக்கே' என்று பாராட்டினார். அன்றுமுதல் நான் ஒரு காட்சியில் நடித்தால் அந்தப் படம் சென்டிமென்ட்டாக ஹிட்டாகிவிடும் என்று எல்லோரும் நம்பினார்கள்.

என் நண்பர் சுந்தர்.சி போன்றவர்கள் அவர்கள் இயக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தனர். நான் உதவி இயக்குநராக 10 ஆண்டுகள் இருந்தபோது, 'நீ ராசி இல்லாதவன், நீ வேலை செய்த படம் ரிலீஸாகாது, பாதியிலேயே டிராப் ஆகிவிடும்' என்று எந்த சினிமா உலகம் என்னைப் பார்த்து பரிகாசம் செய்ததோ அதே சினிமாதான் இப்போது 'நீ ஒரு காட்சியில் தலையைக் காட்டினால் போதும் சென்டிமென்ட்டாக அந்தப் படம் வெற்றிப்படமாகும்' என்று என்னை வாழ்த்திக்கொண்டு இருக்கிறது. இப்போது ஏழெட்டுப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்...’’ எனப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.

’’சினிமாவில் எது செய்ய வேண்டும் என்பதைவிட என்ன செய்யக் கூடாது என்ற படிப்பினையைத் தெளிவாகத் தெரிந்துகொண்டேன். ஒரு படத்துக்காக நம்மை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும், நஷ்டத்தைத் தரவே கூடாது என்கிற தாரக மந்திரத்தை மனசுக்குள் பச்சைக் குத்திக்கொண்டேன். கடந்த காலத்தில் நான் உதவி டைரக்டராக இருந்தபோது என் மீது பழி சுமத்திய சென்டிமென்ட் குற்றச்சாட்டை என் இரண்டாவது படத்திலேயே உடைத்துவிட விரும்பினேன்... 

'பருத்தி வீரன்' சரவணன் முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் ஃபிளாப் ஆனது. அதனால் அவரைக்கண்டு பலபேர் விலகினர் ஹீரோவாக நடிக்க வைக்க யோசித்தனர். அப்போது வேண்டுமென்றே சரவணனை என் படத்துக்கு ஹீரோவாக ஒப்பந்தம் செய்தேன். அதேபோல் ரஞ்சிதா நடித்த முதல்படம் 'நாடோடித் தென்றல்' பெரிதாகப் பேசப்பட்டாலும் வணிகரீதியாகத் தோல்வியைச் சந்தித்தது. அந்தப் படத்தில் நாயகியாக நடித்த ரஞ்சிதாவையே ஹீரோயினாக நடிக்கவைக்க பலபேர் தயங்கினர். அந்த ரஞ்சிதாவை செலக்ட் செய்து சரவணனுக்கு ரஞ்சிதாவை ஜோடியாக  நடிக்கவைத்து 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' திரைப்படத்தை இயக்கினேன். முதல் படத்திலேயே தோல்வி அடைந்த சரவணன், ரஞ்சிதா நடித்த 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' திரைப்படம்  நூறுநாளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

எனது 10-வது படம் 'நாட்டாமை'யின் பட்ஜெட் 55 லட்சம். எனக்கு 5, சரத்குமாருக்கு 5, கவுண்டமணிக்கு 5 என்று மூன்று பேருக்கே 15 லட்சம் போய்விட்டது. மீதமுள்ள 40 லட்சத்தை வைத்து குஷ்பு, மீனாவுக்குச் சம்பளம் கொடுத்துப் படத்தை முடித்துக் கொடுத்தேன். அப்போது 'பாட்ஷா' படத்தில் நடித்துக்கொண்டு இருந்த ரஜினி சார் 'நாட்டாமை' படம் ரொம்பவும் பிடித்துப்போய் இம்ப்ரஸ் ஆகிவிட்டார். ஒருநாள் என்னை அழைத்தார். 'ரவி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்துல வேலை பார்க்கணும்' என்று வாய் வார்த்தையாகச் சொன்னதோடு நிற்கவில்லை. கேரளாவில் வெளிவந்த 'தேன் மாவின் கொம்பத்து' மலையாள படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வைத்து இருப்பதாகச் சொன்னார். 'அழகான ஒரு ஹீரோயினை முதலாளி, தொழிலாளி இருவருமே காதலிக்கிறார்கள் என்பதே அந்த மலையாள படத்தின் கதை. 'என்கிட்டே இருக்குற மலையாள படத்தோட ஒன்லைன் ஸ்டோரியை மட்டும் வச்சுக்கிட்டு உங்கள் விருப்பத்துக்குத் திரைக்கதையை நீங்களே தயார் செய்யுங்க ரவி' என்று சொல்லிவிட்டார்.

ரஜினி - கே.எஸ் ரவிக்குமார்
ரஜினி - கே.எஸ் ரவிக்குமார்

அப்போது ரஜினிசார் நடித்து வெளிவந்த 'பாட்ஷா' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதையும் தாண்டி ரஜினி சாருக்கு வெற்றிப் படத்தைத் தர வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டேன்.

Vikatan

ரஜினி, ரகுவரன், சரத்பாபு, மீனா, சுபா, ராதாரவி, ஜெயபாரதி, செந்தில், வடிவேலு என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க வெளிவந்த திரைப்படம்தான் 'முத்து.' ரஜினி சார் நடித்த 'பாட்ஷா'வைப் போலவே என் இயக்கத்தில் உருவான 'முத்து' திரைப்படமும் பெரும் வெற்றி பெற்றது.

சிவாஜி சாருக்கும் ஜெயலலிதா மேடத்துக்கும் விக் மேக்கராக இருந்த ரவிக்கு, கமல் சாரின் கால்ஷீட்டை வாங்கிக் கொடுத்து இருந்தார் சிவாஜி சார். அந்தப் படத்தை ரவியும் தயாரிப்பாளர் ஹெச்.முரளியின் அப்பாவும் இணைந்து தயாரிக்க முடிவு செய்தனர். கமல் சார் நடிக்க ஒரு டைரக்டர் இயக்கிய அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் மட்டுமே நடந்தது. அதன் பிறகு, ஏனோ படப்பிடிப்பு ரத்தானது. அப்போது என்னை அழைத்து கமல் சாரின் படத்தை இயக்கித் தரும்படி கேட்டனர்.

அவ்வை சண்முகியுடன் கே.எஸ். ரவிக்குமார்
அவ்வை சண்முகியுடன் கே.எஸ். ரவிக்குமார்

தினசரி நானும் கமல் சாரும் நாங்கள் எடுக்கப்போகும் படத்தைக் குறித்து விவாதம் செய்துகொண்டிருந்தோம். ஒரு நாள் கமல் சார் ஒரு போட்டோவைக் காண்பித்து இது யார் என்று தெரிகிறதா, கண்டுபிடியுங்கள் என்று என்னைக் கேட்டார். 'யாரோ வெள்ளைக்கார தாத்தா மாதிரி இருக்கு' என்று நான் பதில் சொல்ல', `இல்லை இது நான்தான் 'இந்தியன்' படத்தோட தாத்தா கெட்டப்' என்று அவர் சொல்ல அவ்வளவுதான் அசந்துவிட்டேன். இதுமாதிரி கெட்டப் மாற்றி நாங்கள் ஒரு படத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

மாமனார் வீட்டில் இருக்கும் தன் பெண் குழந்தைக்காக ஹீரோ பெண் வேடம் போட்டு நடிக்கும் ஆங்கில படத்தின் ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு உருவான திரைப்படம்தான் 'அவ்வை சண்முகி'. ஜெமினி கணேசன், நாகேஷ், நாசர், டெல்லி கணேஷ், மணிவண்ணன், மீனா என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க கமர்ஷியல் மேளா படமாக அமைவதற்குக் காரணமாகிவிட்டது. 'அவ்வை சண்முகி' திரைப்படத்துக்காக அமைத்த கமல் சாரின் டான்ஸ் மாஸ்டர் வேடம், காமெடி கலக்கலான மணிவண்ணன் கேரக்டர், இறந்துபோன மனைவி போலவே 'அவ்வை சண்முகி' இருப்பதாக நினைத்து உருகும் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் என்று ஒவ்வொரு கேரக்டரின் நேர்த்தியும் நடிப்பும் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.

Vikatan

ஒரு காலத்தில் சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரஜினி சார், கமல் சாரின் படங்களைப் பார்த்துப் பிரமித்து விசிலடித்து வியந்து இருக்கிறேன். சினிமா உலகின் அந்த இரு துருவங்களையும் இயக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் ஆரம்பத்தில் எப்படி உதவி இயக்குநராகச் சேர்வதற்கும் டைரக்டராக ஆவதற்கும் வாய்ப்பு கேட்கவில்லையோ அதுபோல ரஜினி சாரிடமும் சரி, கமல்சாரிடமும் சரி நானாகப்போய் சான்ஸ் கேட்கவில்லை. அவர்களாக அழைத்து என்னை இயக்கச் சொன்னதை என் வாழ்வில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகப் பார்க்கிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு