சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

குருதி ஆட்டம் - சினிமா விமர்சனம்

அதர்வா
பிரீமியம் ஸ்டோரி
News
அதர்வா

`ஸ்ரீகணேஷ் படம்' என இயக்குநர்மீதான எதிர்பார்ப்போடு போனால், முதல் சில நிமிடங்கள் மட்டுமே அவரின் தனித்தன்மை திரைக்கதையில் தென்படுகிறது.

சில ஆண்டுகளாய் மதுரை மக்களே மறந்து போயிருந்த வெற்றுக்கூச்சலையும் வெட்டுக்கத்திக் காட்சிகளையும் மீண்டும் படமாய் எடுத்தால் அதுதான் இந்த ‘குருதி ஆட்டம்.'

மதுரை மாநகரையே தன் கண்ணசைவில் ஆட்டிப்படைக்கும் ‘அக்கா’ ராதிகா. உடன்பிறக்காத அண்ணனாய் அவரோடு நின்று உதவும் ராதாரவி. மற்றொருபுறம் கபடிப் போட்டியில் ஹீரோ அதர்வாவுக்கும் ராதாரவியின் மகன் பிரகாஷ் ராகவனுக்கும் நிகழும் உரசல் வளர்ந்து வளர்ந்து காட்டுத்தீயாய்ப் பற்றிக்கொள்கிறது. கோபத்தில் கண்மூடித்தனமாய் பிரகாஷ் சில முடிவுகள் எடுக்க, அதனால் அதர்வா, ராதிகா, ராதிகாவின் மகன் கண்ணா ரவி, இந்தப் பிரச்னைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு சிறுமி என அனைவரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். இதன்பின் நடக்கும் கொலைகளும் தெறிக்கும் ரத்தங்களுமே ‘குருதி ஆட்டம்' படத்தின் கதை.

குருதி ஆட்டம் - சினிமா விமர்சனம்

அழகாய், அடக்கமாய் அதர்வா. நடிப்பில் பக்குவப்பட்டிருந்தாலும் வட்டார மொழி பேசும்போது கொஞ்சம் திணறல் தெரிகிறது. அதற்கும் சேர்த்து சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார். மதுரை வீதிகளில் நம்மைக் கடந்துபோகும் அசல் நகரத்துப் பெண்ணாக வரும் பிரியா பவானிசங்கருக்குத் திரைக்கதைதான் போதுமான இடம் கொடுக்கவில்லை. ஹீரோவுக்காக அழும் வழக்கமான ஹீரோயின்.

ஏற்கும் வேடத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் அசாத்திய திறமை ராதிகாவுக்கு உண்டு. இங்கும் கதை அவருக்கான வெளியைக் கொடுக்காவிட்டாலும் கிடைக்கும் இடங்களில் அனாயாசமாய் ஸ்கோர் செய்கிறார். ராதாரவி வருவது நான்கைந்து காட்சிகள் என்றாலும் தியேட்டரையே கலகலப்பாக்குவது அவர்தான். வில்லன் வத்சன் சக்ரவர்த்தி வரும் காட்சிகளில் அனல். அக்மார்க் மதுரக்காரப் பையனாக கவனம் ஈர்க்கிறார் கண்ணா ரவி.

‘ரங்கராட்டினம்' பாடல் தவிர வேறெங்கும் யுவன் முத்திரையைக் காணோம். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு வழக்கமான ஆக்‌ஷன் படத்திற்கான வேலையாகவே மட்டுப்பட்டுவிடுகிறது.

`ஸ்ரீகணேஷ் படம்' என இயக்குநர்மீதான எதிர்பார்ப்போடு போனால், முதல் சில நிமிடங்கள் மட்டுமே அவரின் தனித்தன்மை திரைக்கதையில் தென்படுகிறது. அதன்பின்னான இரண்டு மணிநேரமும் இதுவரை தமிழ் சினிமா அடித்துத் துவைத்துச் சலித்தேவிட்ட டெம்ப்ளேட் ‘மதுரன்னாலே சம்பவம்தான் மாப்ளேய்' ரக சினிமா. ஆனால் அதில் மண்ணுக்குரிய யதார்த்தமோ வாழ்வியலோ துளியும் இல்லை. வெகு சுலபமாய் யூகிக்கக்கூடிய திரைக்கதை, வலிந்து திணிக்கப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள், இழுத்துக்கொண்டே போகும் க்ளைமாக்ஸ் என படம் மிகச் சாதாரண முயற்சியாகவே முடிந்துவிடுகிறது.

குருதி ஆட்டம் - சினிமா விமர்சனம்

பழக்கப்பட்ட பாதைதான் என்றாலும் பயணத்தில் சுவாரஸ்யம் இல்லாததால் குருதி இருக்கிறது, அட்டகாச ஆட்டத்தைக் காணோம்!