Published:Updated:

நலன் செம நச், கௌதமும் கூல்... ஆனால், வெங்கட் பிரபு, விஜய்?! `குட்டி ஸ்டோரி' - ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்

குட்டி ஸ்டோரி

லாக்டௌனில் ஓடிடி-க்கு உருவான ஆந்தாலஜி படமான 'குட்டி ஸ்டோரி' திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் கைகோத்துள்ளனர். இந்த 'குட்டி ஸ்டோரி' எப்படி இருக்கிறது?

நலன் செம நச், கௌதமும் கூல்... ஆனால், வெங்கட் பிரபு, விஜய்?! `குட்டி ஸ்டோரி' - ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்

லாக்டௌனில் ஓடிடி-க்கு உருவான ஆந்தாலஜி படமான 'குட்டி ஸ்டோரி' திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் கைகோத்துள்ளனர். இந்த 'குட்டி ஸ்டோரி' எப்படி இருக்கிறது?

Published:Updated:
குட்டி ஸ்டோரி

எதிர்பாரா முத்தம் - கௌதம் மேனன்

ஆதியும் மிருணாளினியும் கல்லூரி நண்பர்கள். காதலும் காமமும் கலக்காத நட்பில் திளைப்பவர்கள். ஆனால், ஓர் ஆணும் பெண்ணும் நட்புடன் மட்டுமே இருந்துவிட முடியுமா? கௌதம் மேனன் இயக்கியிருக்கும் 'எதிர்பாரா முத்தம்' எழுப்பும் கேள்வி தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், இதுவரை ஆந்தாலஜி படங்களில் சறுக்கிக் கொண்டிருந்த கௌதம் மீண்டும் தன் பழைய ஃபார்முக்குவர முயற்சி செய்திருக்கிறார். பின்னாளில் நடுத்தர வயது ஆதியும் மிருணாளினியும் தங்கள் வாழ்க்கைப் பயணம் திசைமாறிப் போன பின்னர் சந்தித்துக் கொள்ளும் அந்தக் காட்சியும் அதில் அவர்கள் வெளிப்படுத்தும் முதிர்ச்சியும் அத்தனை அழகு!

எதிர்பாரா முத்தம் | குட்டி ஸ்டோரி
எதிர்பாரா முத்தம் | குட்டி ஸ்டோரி

மனதை தொடுவதற்குத் திரையில் பிரமாண்டங்களைக் காட்சிப்படுத்தத் தேவையில்லை. இருவருக்கிடையேயான ஆத்மார்த்தமான உரையாடல் போதும் என்பதை மீண்டும் எடுத்துரைக்கிறது அந்தக் காட்சியமைப்பு. மிருணாளினியாக உலாவந்த அமலா பாலுக்கு ஸ்பெஷல் பொக்கே! ரோபோ சங்கர் மற்றும் நண்பர்களுடனான கலாட்டா காட்சி ரகளை என்றாலும் அதன் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாம். தூய நட்பு சாத்தியமல்ல என்று சொல்லாமல் அதில் காதல் கலப்பதும், அதை வெளிப்படுத்துவதும் தவறல்ல, அது உண்மையாக இருத்தல்... என்ற கோணத்தில் பார்த்தால் 'எதிர்பாரா முத்தம்' ஓர் எதிர்பாரா சர்ப்ரைஸ்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவனும் நானும் - விஜய்

வயிற்றில் வளரும் கரு எனும் சென்சிட்டிவான டாப்பிக்கை 'தியா'வுக்குப் பின்னர் மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். எதிர்பாரா தருணமொன்றில் கருவுறுகிறார் மேகா ஆகாஷ். கல்லூரி வாழ்க்கை குறுக்கே நிற்க, பின் என்ன முடிவெடுக்கிறார் எனச் சொல்கிறது 'அவனும் நானும்'. 'ஒரு பக்க கதை' படத்தைப் போலவே, மேகா ஆகாஷுக்கு மீண்டும் ஒரு வேடம். ஆனால், அதிலிருந்த எந்த யதார்த்த நடிப்பும் இதில் இல்லை. அந்தச் சூழலில் இருக்கும் ஒரு பெண் குழப்பமான மனநிலையில் இருப்பது இயற்கை. ஆனால், இங்கே படைப்பாளிக்கே குழப்பமான மனநிலைதான் இருக்கிறது.

அவனும் நானும் | குட்டி ஸ்டோரி
அவனும் நானும் | குட்டி ஸ்டோரி

குழந்தை இல்லாமல் இருப்பவர்கள், மரணம், தத்தெடுத்தல் என என்னவெல்லாமோ பேசி குழப்பியடிக்கிறது கதை. அதிலும், சம்பந்தப்பட்ட பெண் முடிவெடுப்பதுபோல காட்சிகள் அமைக்காமல் மற்றவர்களின் நிர்பந்தத்தின் பேரிலேயே முடிவுகள் எடுப்பதாகக் காட்டி, அதையும் நியாயப்படுத்த முயற்சி செய்திருப்பது ஆபத்தான அரசியல் பார்வை. சினிமா என்பது நாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, ஃபேன்டஸி உலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து யதார்த்தம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை மீண்டும் பழைய கிளேஷக்களுக்குள் தள்ளுகிறது 'அவனும் நானும்'.

லோகம் - வெங்கட் பிரபு

லாக்டௌன் சமயத்தில் புதிதாக என்ன சிந்தித்திருக்கிறீர்கள் என யாரேனும் கேட்டால், தயங்காமல் இந்தக் கதையை வெங்கட் பிரபு சொல்லலாம். கொரோனா சீசனில் வித்தியாசமாக கேமர்களை வைத்துக் கதை எழுதியிருக்கிறார். வீடியோ கேம் மூலம் விர்ச்சுவல் உலகில் நண்பர்களாகும் இருவருக்கு இடையே மலரும் காதல்; அவர்கள் கேம் உலகில் செய்யும் சாகசங்கள்... இதுதான் 'லோகம்' படத்தின் கதை. ஆனால், ஹாலிவுட் படத்துக்குத் தமிழ் டப்பிங் எழுதியது போல் இருக்கும் வசனங்களும், மிகை நடிப்புகளும், அமெச்சூர் கிராபிஃக்ஸும் நம்மை அதிகமாகவே சோதிக்கின்றன.

லோகம் | குட்டி ஸ்டோரி
லோகம் | குட்டி ஸ்டோரி

பிரேம்ஜியின் பின்னணி இசை மட்டும் பக்கா. ஸ்பாய்லர் சொல்லக்கூடாதுதான், ஆனாலும், சொல்லியாக வேண்டும். விஷால் அடுத்தமுறை எல்லா தேர்தல்களிலும் வென்று, இந்தப் புற்றுநோயை தமிழ் சினிமாவிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். போதும் பாஸ் முடியல! வெங்கட் பிரபு புதிதாகச் சிந்தித்ததைத் தவிர, இதில் யாதொரு சுவாரஸ்யமும் இல்லை. கிட்டத்தட்ட ஆப்ரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட் மொமன்ட்தான்.

ஆடல் பாடல் - நலன் குமாரசாமி

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' என இரண்டு கவனம் ஈர்த்த படங்களைக் கொடுத்துவிட்டு மறைந்துகொண்ட நலன் குமாரசாமி மீண்டும் இயக்குநர் நாற்காலி ஏறியிருக்கிறார். கணவன் செய்யும் தவறுகளை மனைவி ஏற்கவேண்டும்... ஆனால், அதே தவற்றை மனைவி செய்வது கணவனுக்குத் தெரிந்தால் அவனின் ஈகோ எட்டிப்பார்க்கும். ஆணாதிக்கம் அடாவடி செய்யும். அப்படியான மனோபாவத்தைப் பட்டவர்த்தனமாகப் படம்போட்டுக் காட்டி முகத்தில் அறைகிறது இந்தப் படம்.

ஆடல் பாடல் | குட்டி ஸ்டோரி
ஆடல் பாடல் | குட்டி ஸ்டோரி

ஸ்டார் இமேஜ் விடுத்து இயக்குநரின் நடிகராக மீண்டும் விஜய் சேதுபதி செம ஸ்கோரிங். 'காமாட்சி' யார் எனத் தேடும் காட்சி, மனைவிக்கு டீ போட்டுக்கொடுத்து உண்மையைக் கேட்கத் தடுமாறும் காட்சி என இரண்டிலும் தன் வழக்கமான நையாண்டி நடிப்பில்லாமல் கட்டுப்பாட்டுடன் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார். கிட்டதட்ட அவரின் 'இறைவி' பாத்திரத்தின் நீட்சியாகத்தான் விரிகிறது இந்தப் படம். மனைவியாக 'அருவி' அதிதி பாலன் அருமை. இன்னமும் படங்கள் நடிக்கலாமே அதிதி! வசனங்கள் செம ஷார்ப் என்றால் அதற்கேற்றவாறு இசையும் எட்வின் லூயிஸின் பின்னனி இசை பெரிய ப்ளஸ். ஒரு வீட்டுக்குள்ளேதான் என்றாலும் கணவன் - மனைவி அமர்ந்து பேசும் அந்தக் குடில் அவ்வளவு அழகு... இந்தப் படத்தைப் போலவே! நிறைய படங்கள் எடுங்கள் நலன்... காத்திருக்கிறோம்!