Published:Updated:

``இனி நடிக்க மாட்டேன்; இது எனக்கு நானே கொடுத்துக்கிட்ட தண்டனை!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

``அந்த நடிகை பேசின அருவருப்பான வார்த்தைகளால், நடிகைனு சொல்லிக்கவே எனக்கு வருத்தமா இருக்கு. அந்தக் கசப்பான நிகழ்வால் ரொம்பவே உடைஞ்சுபோனேன்." - லட்சுமி ராமகிருஷ்ணன்

``இனி நடிக்க மாட்டேன்; இது எனக்கு நானே கொடுத்துக்கிட்ட தண்டனை!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

``அந்த நடிகை பேசின அருவருப்பான வார்த்தைகளால், நடிகைனு சொல்லிக்கவே எனக்கு வருத்தமா இருக்கு. அந்தக் கசப்பான நிகழ்வால் ரொம்பவே உடைஞ்சுபோனேன்." - லட்சுமி ராமகிருஷ்ணன்

Published:Updated:
லட்சுமி ராமகிருஷ்ணன்
மிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், ஜீ தமிழ் `சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிதான் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது. அதே நிகழ்ச்சியால் எதிர்மறை விமர்சனங்கள், ட்ரோல், மீம்ஸ் உள்ளிட்ட சங்கடங்களை எதிர்கொண்டாலும், சமூக நிகழ்வுகள் பலவற்றுக்கும் துணிச்சலுடன் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை வனிதாவுக்கும் லட்சுமிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் வார்த்தை மோதலாக வெடித்தது. கொரோனா பிரச்னைகளைத் தாண்டி, அந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது.
லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

அந்த நிகழ்வால் மிகுந்த மனவேதனையடைந்த லட்சுமி, தற்போது சினிமா பணிகளில் மீண்டும் பிஸியாகிவிட்டார். `ப்ளூ இங்க் - இந்த நீலம் சிவப்பு’ என்ற பெயரில் புதுப்படத்தை இயக்கவிருக்கிறார். இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம். தற்போதைய சினிமா பணிகள் தவிர, `அந்த வாக்குவாதம்’ குறித்தும் மனம்விட்டுப் பேசினார்.

``எந்தப் பின்புலமும் இல்லாமதான் சினிமா துறைக்குள் வந்தேன். அதுவும் 40 வயசுக்குப் பிறகு. ஒரு படத்தையாவது இயக்கணும். அந்தப் படம் ஒரு தியேட்டரில் ஒரு காட்சியாவது ஓடணும். இதுதான் என் ஆசையா இருந்துச்சு. எதிர்பாராத வகையில், நிறைய படங்கள்ல நடிச்சேன். கூடவே, இயக்குநராகும் இலக்கையும் சரியா திட்டமிட்டேன். இதுவரை நாலு படங்களை இயக்கியிருக்கேன். அவை விமர்சன ரீதியா நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கு. பெரிய இயக்குநராகணும், பெரிய நடிகர்களை வெச்சு படம் இயக்கணும், பணம் மற்றும் புகழ் சம்பாதிக்கணும்னு இதுவரை நான் நினைச்சதில்லை.

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

சமூகத்துக்குப் பயனுள்ள கருத்துகளைச் சொல்ற மாதிரி, நிஜ வாழ்க்கையில நடக்கும் கதைகளை மையப்படுத்திதான் படம் எடுக்க ஆசைப்படறேன். நான் எடுக்கிறது பெரிய நடிகர்கள் இல்லாத, சாமான்ய மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் படங்கள் மட்டும்தான். நான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் தியேட்டர்ல ரிலீஸுக்குக் கொண்டுவர்றதே பெரிய போராட்டம்தான். ஆனாலும், இயக்குநர் பணி ஆத்ம திருப்தியைக் கொடுக்குது. கடைசியா நான் இயக்கின `ஹவுஸ் ஓனர்’ படம் எதிர்பார்த்தபடி தியேட்டரில் ஓடலை. ஆனாலும், அந்தப் படத்துக்குச் சமீபத்தில் மத்திய அரசின் அங்கீகாரம் கிடைச்சதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

இந்த அங்கீகாரத்தால் கிடைச்ச வரவேற்பைத் தொடர்ந்து, ஓ.டி.டி தளத்துலகூட `ஹவுஸ் ஓனர்’ படத்துக்கு நல்ல ஆஃபர்ஸ் வந்துச்சு. ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட வியாபார விஷயங்களை முன்பே முடிச்சுட்டதால, அந்த வாய்ப்பைச் சரியா பயன்படுத்திக்க முடியலை. இந்த நிலையில, முன்பே ஒப்புக்கொண்டபடி புதுப்படத்துக்கான வேலைகளைத் தொடங்கிட்டேன். `இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’னு கணவர் ஊக்கம் கொடுத்தார். கேரளாவுல சில மாதங்களுக்கு முன்பு மூணு பெண்களால் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வுதான் படத்தின் மூலக்கதை. அந்தப் பெண்களுக்குள் இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான் அந்தச் சிவப்பு நிறத்துக்கான அர்த்தம். அதனாலதான், `இந்த நீலம் சிவப்பு’ன்னு டைட்டிலில் குறிப்பிட்டிருக்கேன்.

சமூகத்தில் சில விஷயங்களைப் பேச மறுக்கிறோம்; மறைக்கிறோம். அந்த வகையில், மூணு பெண்கள் செய்த ஒரு விஷயம் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துச்சு, அதைச் சமூகம் எப்படிப் பார்த்துச்சு, அந்த நிகழ்வு குறித்த என் பார்வை உள்ளிட்ட விஷயங்களைத்தான் அந்தப் படம் பேசும். பிரபலமான மூணு நடிகைகளிடம் கதையைச் சொன்னேன். மூவருமே உடனே நடிக்க ஒப்புகிட்டாங்க. மத்த விஷயங்களை இப்போதே சொல்றது சரியா இருக்காது” என்றவரின் பேச்சு, அந்த `வைரல் வாக்குவாதம்’ குறித்துத் திரும்பியது.

``என் கணவர் வெளிநாட்டுல 22 வருஷங்கள் வேலை செஞ்சார். நானும் தொழில்முனைவோராகச் செயல்பட்டேன். பொருளாதாரத் தேவையில் ஓரளவுக்குத் தன்னிறைவு அடைஞ்ச பிறகு, பிடிவாதத்துடன் கணவரைச் சம்மதிக்க வெச்சு சென்னைக்கு வந்தோம். அதனால, சினிமாவில் சம்பாதிச்சுதான் வாழணும்னு எனக்கு அவசியம் இல்லை. எனவே, சமரசம் இல்லாம ரொம்பவே ஈடுபாட்டோடு சினிமாவில் வேலை செய்றேன். சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சப்போ, என் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. `சினிமாவுக்குள் மற்ற துறைகளில்கூட வேலை செய். ஆனா, நடிக்க வேண்டாம். சிலரது தவறான பார்வையில் மாட்டிப்பே’ன்னு பலரும் சொன்னாங்க.

கணவருடன் லட்சுமி ராமகிருஷ்ணன்
கணவருடன் லட்சுமி ராமகிருஷ்ணன்

அதை ஏற்க மறுத்து, `நாம சரியா இருந்தா எதுவும் தவறா நடக்காது’ன்னு சொல்லி நடிக்க ஆரம்பிச்சேன். தவிர, மக்கள் பிரச்னைக்கும் என்னால் இயன்ற பங்களிப்பைக் கொடுக்கிறேன். அந்த வகையில, என்னைத் தேடி வந்த ஒரு பெண்ணோட பிரச்னைக்குக் குரல் கொடுத்தேன். தனி நபர் தாக்குதல் இல்லாம கண்ணியத்துடன்தான் அந்த நடிகைகிட்ட பேச ஆரம்பிச்சேன். ஆனா, அவங்க என்னை எப்படியெல்லாம் பேசினாங்கன்னு பலரும் பார்த்திருப்பாங்க. பொறுமை இழந்து நான் சில வார்த்தைகள் பேசுற அளவுக்கு அவங்க தரக்குறைவா நடந்துகிட்டாங்க.

சினிமா குடும்பத்துல பிறந்து வளர்ந்த ஒரு நடிகையே, `நானும் இந்தத் துறையிலதான் இருக்கேன். எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி’ன்னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியலை. `அந்த நடிகைகளே இப்படித்தான்’னு போற போக்குல பலரும் சொல்வாங்க. ஆனா, ஒரு நடிகையே சக நடிகைகளைக் கீழ்த்தரமா பேசுறதை எப்படி ஏத்துக்க முடியும்? அந்த நடிகை பேசின அருவருப்பான வார்த்தைகளால், நடிகைனு சொல்லிக்கவே எனக்கு வருத்தமா இருக்கு. அந்தக் கசப்பான நிகழ்வால் ரொம்பவே உடைஞ்சுபோனேன்.

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

`சமூகப் பார்வையில் இருந்து நீ பேசிய, செய்த ஒரு விஷயம் தவறான அனுபவத்தைக் கொடுத்துடுச்சு. இதுக்காக வருத்தப்பட்டு நேரத்தை வீணடிக்காம உன் வேலைகளைத் தொடர்ந்து செய்’னு கணவரும் மகள்களும் நம்பிக்கை கொடுத்தாங்க. அதனாலதான், உடனே புதுப்பட வேலைகளைத் தொடங்கினேன். ஆனா, ஒரு நடிகையா அந்த நிகழ்வை எளிதா என்னால கடந்து போக முடியலை. இனி நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இது எனக்கு நானே கொடுத்துக்கும் தண்டனை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எனக்கு வந்த மூணு பட வாய்ப்புகளை மறுத்துட்டேன். இனி இயக்குநர் பணியை மட்டுமே செய்யலாம்னு இருக்கேன். அந்தக் கசப்பான நிகழ்வின் தாக்கத்திலிருந்து இன்னும் என்னால முழுமையா மீள முடியலை.

சமீபத்தில், `சூரரைப் போற்று’ படம் பார்த்தேன். இயக்குநர் சுதா கொங்கராவின் உழைப்பையும் திறமையையும் பார்த்து அசந்துபோனேன். ஆண்கள் சூழ்ந்த சினிமா துறையில், எங்களை மாதிரியான பெண் இயக்குநர்கள் செயல்படறதும், படத்தை ரிலீஸ் பண்றதும் எவ்வளவு பெரிய சவால்னு எங்களுக்குத்தான் தெரியும். குடும்பத்தினர் ஆதரவு இல்லைன்னா, எங்களால நிம்மதியா சினிமா வேலைகளைக் கவனிக்கவே முடியாது. அந்த வகையில், என் கணவருக்குத்தான் முதல் நன்றியைச் சொல்லணும்” என்று முடித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.