Election bannerElection banner
Published:Updated:

``பேராண்மை, மைனா, ஏழாம் அறிவு, துப்பாக்கி... பத்தாண்டு தீபாவளி படங்கள் ரீவைண்ட்!’’ #DiwaliMovies

தீபாவளி ரிலீஸ் படங்கள்
தீபாவளி ரிலீஸ் படங்கள்

கடந்த 10 வருடங்களில் தீபாவளிக்கு ரிலீஸான தமிழ் படங்களில், சிறந்த படங்களின் தொகுப்பு இதோ...

`பிகில்’, `கைதி’ என இந்த வருட தீபாவளி களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இதேபோல், கடந்த 10 வருட தீபாவளிக்கு ரிலீஸான தமிழ் படங்களில், சிறந்த படங்களின் தொகுப்பு இதோ...

2009 - ’பேராண்மை’

பேராண்மை
பேராண்மை

`ஜெயம்’ ரவியின் கரியரில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய படங்களில் முக்கியமானது, `பேராண்மை’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், பல அரசியலை முன்வைத்தது. அரசியலைப் பேசிய படமாக இருந்தாலும், ஒரு கமர்ஷியல் சினிமா அளவுக்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டது. பழங்குடியின மக்களில் ஒருவராய், `ஜெயம்’ ரவி வாழ்ந்திருப்பார். மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பதிலிருந்து, ராக்கெட் லான்ச்சை தடுக்க நினைப்பவர்களிடம் போராடுவது வரை சிறப்பாகச் செய்திருப்பார், `ஜெயம்’ ரவி. இதில் பொன்வண்ணன், `ஜெயம்’ ரவியோடு காட்டுக்குச் செல்லும் ஐந்து பெண்கள், ஊர்வசி, வடிவேலு என மற்ற கதாபாத்திரங்களும் படத்துக்கு நன்றாகவே உதவியிருக்கும்.

2009 தீபாவளி அன்று சூர்யா நடித்த `ஆதவன்’ படமும் வெளியானது. `கஜினி’, `ஆறு’, `சில்லுனு ஒரு காதல்’, `வேல்’, `வாரணம் ஆயிரம்’, `அயன்’ எனப் பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சூர்யா பயங்கர பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான `ஆதவன்’ படமும் 2009 தீபாவளியை ஏமாற்றவில்லை. 

2010 - ‘மைனா’ 

பொதுவாகவே தீபாவளி ரிலீஸ் படங்களில் இருக்கும் எந்தவித பிரமாண்டமும் இல்லாமல் வெளியான படம், `மைனா’. தம்பி ராமையாவைத் தவிர அதிகம் பரிச்சயம் இல்லாத பலரே நடித்திருந்தனர். எதிர்பார்ப்பு எதுவுமின்றி இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், ஏமாந்திருக்கமாட்டார்கள். காட்சிக்குக் காட்சி காமெடி, எமோஷனல், த்ரில், சோகம் எனப் படம் முழுக்க அத்தனை விஷயங்கள் பரவிக் கிடந்தன. இயக்குநராக, நடிகராக, நடிகையாக, இசையமைப்பாளராக, ஒளிப்பதிவாளராக தங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனப் போராடிய பலரும் ஒன்று சேர்ந்து எடுத்தபடம் தோல்வியடைய வாய்ப்பே இல்லை என்பதற்கு, `மைனா’ ஓர் உதாரணம்.

சுருளியாக விதார்த்தும், மைனாவாக அமலா பாலும், ராமையாவாக தம்பி ராமையாவும் வாழ்ந்திருப்பார்கள்.  இவர்களோடு படம் முழுக்க வரும் அந்தப் போலீஸ் கேரக்டர், அவரின் மனைவி என மற்றவர்களும் நம் மனதில் பதிந்தார்கள். ஒரே பாடலில் முன்னேறுவதுபோன்ற கனவு, மலையில் தொங்கும் பஸ், க்ளைமாக்ஸ் என இந்தப் படத்தில் முக்கியமான இடங்களைக் குறிப்பிட்டுக்கொண்டே போகலாம். படம் முடிந்து வெளியே வந்த மக்கள், கண்டிப்பாக சோகத்தின் உச்சத்தில்தான் வந்திருப்பார்கள்.

வெளியே வந்த மக்கள், அப்படியே பக்கத்துத் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த `உத்தமபுத்திரன்’ படத்துக்குச் சென்றால், அங்கு அவர்களுக்கு நகைச்சுவை விருந்தே காத்திருந்தது. 

Mynaa
Mynaa

தீபாவளி கொண்டாட்ட மனநிலையோடு தியேட்டருக்கு வரும் மக்களுக்கு ஏற்ற படமாக `உத்தமபுத்திரன்’ இருந்தது. படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே காமெடிக் காட்சிகள் மட்டும்தான். நிறைய வசனங்கள் பேசாமலேயே விவேக் காமெடி செய்திருப்பார். அவரோடு சேர்ந்து தனுஷ் அடிக்கும் லூட்டிக்கும் அளவே இருக்காது. ஒரு பக்கம் மனசு வலிக்கும் அளவுக்கு சோகம், ஒரு பக்கம் வயிறு வலிக்கும் அளவுக்குச் சிரிப்பு எனக் கடந்தது 2010 தீபாவளி.

2011 - `ஏழாம் அறிவு’

ஏழாம் அறிவு
ஏழாம் அறிவு

2009 தீபாவளிக்கு `ஆதவன்’ படத்தை ரிலீஸ் செய்ததைத் தொடர்ந்து, `சிங்கம்’ படத்தின் மூலம் கமர்ஷியலாகப் பெரிய வெற்றியைக் கொடுத்த சூர்யா, 2011 தீபாவளிக்கு ரிலீஸ் செய்த படம்தான், `ஏழாம் அறிவு’. போதி தர்மர் யார் என்பதைப் பலருக்கும் தெரியவைத்த பெருமை இந்தப் படத்துக்கே சேரும். படத்தில் கமர்ஷியல் விஷயங்கள் இருந்தாலும், கன்டென்ட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியிருப்பார், ஏ.ஆர்.முருகதாஸ்.

போதி தர்மாவாகவும், அவரது வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் என்பவராகவும் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார், சூர்யா. படம் முடிந்து வெளியே வரும்போது ஒருவித பாசிட்டிவ் எனர்ஜி நம்மைத் தொற்றிக்கொள்ளும். இதே ஆண்டு தீபாவளிக்குத்தான் விஜய்யின் `வேலாயுதம்’ படமும் வெளியானது. `காவலன்’ படம் மூலம் `காதலுக்கு மரியாதை’யை நினைத்துப் பார்த்த விஜய்யை, மீண்டும் கமர்ஷியலுக்கு அழைத்து வந்தது, `வேலாயுதம்’.

2012 - ‘துப்பாக்கி’

'துப்பாக்கி’
'துப்பாக்கி’

2011 தீபாவளி தனக்கு சுமாராக அமைந்திருந்தாலும், 2012 தீபாவளிக்கு `துப்பாக்கி’யோடு பட்டாசு கிளப்பினார், விஜய். விஜய் - முருகதாஸ் கூட்டணியின் முதல் படமான `துப்பாக்கி’, 2012 தீபாவளியின் சிறப்பான தரமான சம்பவம். மேக்கப், காஸ்ட்யூம், பாடி லாங்குவேஜ் என தன் முந்தைய படங்களின் அடையாளங்கள் எதுவும் இல்லாமல், புது விஜய்யாக இந்தப் படத்தில் இருந்தார்.

சந்தோஷ் சிவனின் கேமரா, ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட் என டெக்னிக்கலாகவும் விருந்து படைத்திருந்தனர். `துப்பாக்கி’ படத்துடன் வெளியான சிம்புவின் `போடா போடி’ படத்தையும் இந்தப் பட்டியலில் கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டும். செம ஜாலியான சிம்புவாக படம் முழுக்க வந்திருப்பார். இளசுகளுக்கு ரொம்பப் பிடித்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது, `போடா போடி’.

2013 - ‘பாண்டியநாடு’

பாண்டியநாடு
பாண்டியநாடு

ஆக்‌ஷன் ஹீரோவான விஷாலை, சண்டைபோடத் தெரியாத ஆளாகக் காட்டி `பாண்டிய நாடு’ என்கிற ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருந்தார், சுசீந்திரன். விஷாலின் கரியரில் வித்தியாசமான படமாகவும், மாஸ் ஹிட்டடித்த படமாகவும் `பாண்டிய நாடு’ இருக்கிறது. பாரதிராஜா, சூரி, விக்ராந்த் எனப் படத்தின் பல கேரக்டர்கள் பலமாக இருந்தது. சண்டைபோடத் தெரியாத, லேசாக திக்கிப் பேசும் கதாபாத்திரத்துக்குப் பக்காவாக பொருந்திப்போயிருந்தார், விஷால்.

தன் மகனைக் கொலை செய்த வில்லனை, தன்னால் முடியாது என்று தெரிந்தாலும் வில்லனைக் கொல்ல முயற்சி செய்யும் தந்தையாக பாரதிராஜா, பக்கா செலக்‌ஷனாக இருந்தார். டி.இமான் இசையில் பாடல்கள் தீபாவளிக்காகவே செய்யப்பட்ட இனிப்புகளைப்போல் இருந்தது.

2013 தீபாவளி `ஆரம்பம்’ பட வெளியீட்டால், தல தீபாவளியானது. `பில்லா’ படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படம் என்பதால், ஸ்டைலிஷுக்குக் குறைவில்லாமல் இருந்தது. நயன்தாரா, ராணா, ஆர்யா, டாப்ஸி எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால், காஸ்ட்டிங்கிலேயே கவனம் ஈர்த்தது.

2014 - `கத்தி’  

Murugadoss-Vijay's Kaththi
Murugadoss-Vijay's Kaththi

2012 தீபாவளி `துப்பாக்கி’ என்றால், 2014 தீபாவளி `கத்தி’. விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மற்றுமொரு தீபாவளி விருந்து. ஆனால், சற்று வித்தியாசமாக! `துப்பாக்கி’ பயங்கர க்ளாஸ், மாஸ் என்றால், `கத்தி’யில் க்ளாஸ், மாஸோடு முக்கியமான பிரச்னையையும் பேசியிருந்தார்கள். முன்னணி ஹீரோ படத்தில் விவசாயிகளின் தற்கொலை, தண்ணீர் பிரச்னை எனப் பல விஷயங்களைப் பேசியிருந்ததால், நல்ல வரவேற்பையும் பெற்றது. விஜய் - அனிருத் என்கிற புதுக் கூட்டணியில் பாடல்கள் அனைத்தும் நல்ல ரீச்.

கதிரேசன் - ஜீவானந்தம் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருந்தார். கதிரேசன் கேரக்டரில் ஜாலி, கோபம் என வெரைட்டி காட்டியவர், ஜீவானந்தம் கேரக்டரில் அமைதியோடு படம் முழுக்க வந்தார். எந்த இடத்திலும் ஜீவானந்தம் கோபப்படமாட்டார். அப்படி ஒரு அமைதியான பாத்திரத்தில் ஒரு மாஸ் ஹீரோவை நடிக்க வைத்து, அதை மக்களுக்கு நம்பவும் வைத்திருப்பார், முருகதாஸ். விஜய்யின் தீபாவளி லிஸ்ட் படங்களில் `கத்தி’க்கு ஒரு முக்கிய இடமுண்டு. 

2015 - `வேதாளம்’ 

வேதாளம்
வேதாளம்

`வீரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் - சிவா கூட்டணியில் இரண்டாவதாக உருவான படம், `வேதாளம்’. தங்கைக்கு நல்ல அண்ணன், ஏரியாவில் மாஸ் காட்டும் ரெளடி என அஜித் இரண்டு கெட்டப்களில் வெரைட்டி காட்டியிருப்பார். அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் சரியான தேர்வாக இருந்தார். `கத்தி’ படத்தில் எப்படி விஜய் - அனிருத் கூட்டணி புதிகாகப் பிறந்ததோ, அதேபோல் இதில் அஜித் - அனிருத் கூட்டணி. 

பாடல்கள் எல்லாமே தெறியாக இருந்தது என்றே சொல்லலாம். அதிலும் `ஆலுமா டோலுமா’ தீபாவளி செலிபிரேஷன் பாடலாகவே இருந்தது. இதே தீபாவளிக்கு கமல் ஹாசன் நடித்த `தூங்காவனம்’ படமும் வெளியானது. த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், சம்பத் எனப் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். `ஸ்லீப்லெஸ் நைட்’ என்கிற பிரெஞ்ச் படத்தின் தழுவலாக இது இருந்தது. 

2016 - `கொடி’

தனுஷ்
தனுஷ்

தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், `கொடி’. அரசியல்வாதியாகவும், அப்பாவியாகவும் நடித்திருப்பார், தனுஷ். தீபாவளிக்கு ஏற்ற கமர்ஷியல் படமாக `கொடி’ இருந்தது என்றே சொல்லலாம். ருத்ரா கேரக்டரில் த்ரிஷா தனது வில்லித்தனம் கலந்த நடிப்பில் மிரட்டியிருப்பார். கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், அனுபமா பரமேஷ்வர், காளி வெங்கட், எஸ்.ஏ.சந்திரசேகர் எனப் பலரும் தங்களது பங்கை சரியாக செய்திருப்பார்கள். இதே தீபாவளிக்கு கார்த்தி நடித்த `காஷ்மோரா’ படமும் வெளியானது. வித்தியாசமான திரைக்கதையில் இந்தப் படத்தை இயக்கியிருப்பார், கோகுல். காஷ்மோரா, ராஜ நாயக் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த கார்த்தி, ராஜ நாயக் கேரக்டரில் நன்றாகவே வித்தியாசம் காட்டியிருப்பார். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் எனப் படத்தின் காஸ்ட்டிங்கும் பெரியதாக இருந்தது.

2017 - `மெர்சல்’

Mersal
Mersal

வெற்றி மாறன், வெற்றி, மாறன் என மூன்று கேரக்டரில் விஜய் நடித்திருந்த படம், `மெர்சல்’. `தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணியில் உருவான படம் என்பதால், பயங்கர எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிலீஸாகி, அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது. வெற்றி மாறன் கேரக்டருக்காகத் தோற்றத்திலும், நடிப்பிலும் வித்தியாசமாகவே தெரிந்தார், விஜய். `அழகிய தமிழ்மகன்’ படத்துக்குப் பிறகு, விஜய்யுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படத்தின் பாடல்களை ஆல்பமாக ஹிட்டாக்கினார். குறிப்பாக, `ஆளப்போறான் தமிழன்’ இன்றைக்கும் பலரது ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.

`மெர்சல்’ படம் கொடுத்த வெற்றிதான், தற்போது விஜய் - அட்லி கூட்டணியில் `பிகில்’ அடிக்க அஸ்திவாரமாக இருந்திருக்கிறது. `மெர்சல்’ படம் பெரிய காஸ்ட்டிங், பயங்கரமான பட்ஜெட் என்றால், `மேயாத மான்’ சிம்பிளாக சிக்ஸர் அடித்தது. முரளி கேரக்டரில் பக்காவாக செட்டாகிருந்தார், வைபவ். சின்னத்திரையில் கலக்கிய பிரியா பவானி ஷங்கர், இந்தப் படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான `மேயாதமான்’, பலரது கவனத்தையும் ஈர்த்தது.

2018 - `சர்கார்’

Sarkar
Sarkar

`துப்பாக்கி’, `கத்தி’ எனத் தங்களது கூட்டணியில் தீபாவளி வெற்றிப் படங்களைக் கொடுத்த விஜய் - முருகதாஸ், சென்ற ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்த படம்தான், `சர்கார்’. `துப்பாக்கி’, `கத்தி’ அளவுக்கு மாஸ் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. `ஆளப்போறான் தமிழன்’ மாதிரி, இதில் விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் - விவேக் கூட்டணியில் `ஒருவிரல் புரட்சி’ பாடல் கவனம் ஈர்த்தது. `சர்கார்’ படத்துக்கு முன் விஜய் படங்களில் ஆங்காங்கே அரசியல் வசனங்களோ, காட்சிகளோ கண்ணில் படும். ஆனால், `சர்கார்’ ஒரு அரசியல் படமாகவே எடுக்கப்பட்டிருந்தது. விஜய் - முருகதாஸ் கூட்டணியில் `சர்கார்’ கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும், உங்களது கூட்டணியில் அடுத்த படத்தைப் பார்க்க, பலபேர் வெயிட்டிங்!

`` `ஏஞ்சல் நயன்தாரா... ஃபேவரிட் ராயப்பன்... 2 சர்ப்ரைஸ் பாடல்கள்!'' - `பிகில்' அட்லி அப்டேட்! #Bigil
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு