Published:Updated:

``ஜோதிகா மனசு வெச்சா `சம்சாரம் அது மின்சாரம் -2' வரும்!" - விசுவின் கடைசிப் பேட்டி

`சம்சாரம் அது மின்சாரம்' படத்தில்.
`சம்சாரம் அது மின்சாரம்' படத்தில்.

இதுதான் விசு, அவரது சினிமா பயணம் குறித்து அளித்திருந்த கடைசிப் பேட்டி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடும்பக் கதைகளை மட்டுமே இயக்கி, தமிழ் சினிமாவில் அழியாத தடம் பதித்த இயக்குநர்கள் வரிசையில் விசுவுக்குத் தனி இடம் உண்டு. கூட்டுக்குடும்பத்தின் மேன்மைகளையும் அதில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் சிறப்பாகக் கையாண்டு பல வெற்றிப் படங்களைத் தந்தவர் விசு.

விசு
விசு

தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் எனப் பன்முகத்தன்மையுள்ளவர். அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தமிழகம் முழுவதும் பயணித்தவர். இவர் இயக்கிய `சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம், இந்திய அளவில் 1986-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேர்வு செய்யப்பட்டு தங்க மயில் விருது பெற்றது. உடல்நலக்குறைபாடு காரணமாக தனது 75-வது வயதில் நேற்று மரணமடைந்த விசுவை சில மாதங்களுக்கு முன்பு விகடனுக்காகப் பேட்டியெடுத்திருந்தோம். இதுதான் விசு, அவரது சினிமா பயணம் குறித்து அளித்திருந்த கடைசிப் பேட்டி. அது அப்படியே இங்கே!

``நம் தமிழ்க்குடும்பங்களின் முகமாற்றம் குறித்து உங்கள் கருத்தென்ன?"

விசு
விசு

``முதல்ல ஒரு விஷயத்துல ரொம்ப சந்தோஷம். தமிழக அரசியல்வாதிங்க எங்களைத் தமிழ்க்குடும்பம்னு ஒப்புக்கலை. நீங்க எங்களைத் தமிழ்க்குடும்பம்னு ஒப்புக்கொண்டதுக்கு நன்றி. கைபர் கணவாய், போலன் கணவாய் வழியா வந்தவங்கனு இப்போ புதுசா பேசிக்கிட்டிருக்காங்க. தமிழுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடுன தலைவர்களை சாதி ரீதியா பிரிச்சு ஆளுக்கொருத்தரா எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. இனி என்னஆகணும்னு தெரியலை. இது சமூக மாற்றம். குடும்பங்களோட முகமாற்றத்தைக் கேட்கவே வேண்டியதில்ல."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கூட்டுக்குடும்பத்தோட அருமையை ஒவ்வொரு படத்துலயும் சொல்லியிருப்பீங்க. இப்போ அந்தக் குடும்பங்கள்லாம் உதிரிப்பூக்களா பிரிஞ்சு இருக்கு. இதை எப்படிப் பார்க்கிறீங்க?"

விசு
விசு

``நான் ரொம்பக் கேவலமா, மோசமா பார்க்குறேன். அது கிராமமா இருந்தாலும் சரி, நகரமா இருந்தாலும் சரி. எல்லாமே இன்னிக்கு ஒரே மாதிரிதான் இருக்கு. அப்போதெல்லாம் கிராமத்து வீட்டுத்திண்ணையில காலை நீட்டிக்கிட்டு தாத்தாவோ பாட்டியோ உட்கார்ந்து பழைய கதைகள் பேசிக்கிட்டிருப்பாங்க. அவங்க ஒண்ணும் தண்டமா இல்ல. அவங்கதான் அந்த வீட்டுக்கு செக்யூரிட்டி. அவங்கதான் அந்த வீட்டுக்கு நியூஸ் ஏஜென்சி. எல்லாக் காலத்துலயும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, பதினாறு டு இருபத்தி நாலு டர்ட்டி ஏஜ். அதைக் கடந்துதான் வந்தாகணும். அவங்க எங்க போறாங்க, என்ன பண்றாங்கனு கவனிச்சுக்கிறதே இந்தத் தாத்தா பாட்டிங்கதான். அவங்கதான் அந்த வீட்டையே நெறிப்படுத்துவாங்க. அந்தக் கண்காணிப்பு இப்போ இல்ல. அதனால பல குடும்பங்கள்ல அமைதி இல்ல. அந்தத் தாத்தா பாட்டியெல்லாம் இப்போ ஓல்ட் ஏஜ் ஹோம்ல இருக்காங்க."

``மாதா, பிதா, குரு, தெய்வம்... இப்ப இந்த மரியாதைகள் எல்லாம் எப்படியிருக்கு?"

விசு
விசு

``மாதாவுக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கு. ஆனா, சில பிதாக்கள் தப்பா இருக்கிறதாலயும், சில இளைய தலைமுறை நடிகர்கள் பிதாக்களை மட்டம் தட்டி காமெடி பீஸா காண்பிக்கிறதாலயும் பிதாக்களோட விலாசம் காணாமலே போயிடுச்சு. மாதா, பிதாவோட இடமே ஆட்டம் கண்டு இருக்கிறதால குருவோட இடம்னு ஒண்ணே கிடையாது. ஏன்னா குருவோட அருமையைச் சொல்றதுக்கே ஆளில்லை. எல்லோரையும் சொல்லலை. அத்திப் பூத்தமாதிரி அங்கொருத்தர் இங்கொருத்தர் இருக்கலாம். குருவே இல்லைங்கிறபோது தெய்வங்கிறதே இல்லாம போயிடுச்சு. தெய்வங்கிறதையே அரசியல்வாதிங்க சாகடிச்சிட்டாங்க. இன்றைய சமூகத்துக்கு தெய்வம் இல்லைங்கிறது சௌகரியமா இருக்கு."

``மனித மதிப்பீடுகள் குறைஞ்சுக்கிட்டே போறது பற்றி என்ன நினைக்கிறீங்க?"

விசு
விசு

``என் பொண்ணைப் பார்க்க அமெரிக்காவுப் போயிருந்தேன். அந்தச் சமயத்துலதான் சிவாஜி இறந்துபோயிட்டார். எனக்கு துக்கம் தாங்கலை. வாய்விட்டு அழ ஆரம்பிச்சிட்டேன். சாயங்காலம் தண்ணி அடிக்கலாமானு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். குழந்தைங்ககூட என்னப்பா இதெல்லாம்னு கேட்டாங்க. சிவாஜி நடிச்ச ஒரு படத்தைக் காண்பிச்சு உங்க பெரியப்பா இப்படி இருப்பார்னு சொல்லுவேன். இன்னொரு படத்தைக் காண்பிச்சு உங்க மாமா இப்படித்தான் இருப்பார்னு சொல்லுவேன். ஒரு திருவருட்செல்வரை வெச்சு பத்து தெய்வங்களோட கதையைக் குழந்தைங்களுக்குச் சொல்லுவேன். ஒரு வீர பாண்டிய கட்டபொம்மனை வெச்சு பத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் பத்திச் சொல்லுவேன். இப்போ அப்படி யாரைச் சொல்ல முடியும். மனித உறவுகளே குறைஞ்சுகிட்டே போகுது. பெரும்பாலும் ஒரு குழந்தையோடதான் இருக்காங்க. உறவுகளுக்குப் பெயர்போன நம்ம தமிழ்ச்சமூகத்துல சித்தி, சித்தப்பா, மாமா அத்தை உறவுகளெல்லாம் இனி ரொம்பவே குறைஞ்சு போயிடும். ஆனால், இந்த நிலைமை இப்படியே இருக்காது, நிச்சயம் மாறும்."

`என் நாயகிகள் எல்லோருக்கும் ஏன் நான் `உமா'ன்னே பேர் வெச்சேன் தெரியுமா?' - விசு நினைவலைகள்! #VikatanOriginals

``உங்களுடைய பசங்க என்ன பண்றாங்க?"

விசு
விசு

``எனக்கு மூணு பொண்ணுங்க. மூணு பேருமே அமெரிக்காவுல செட்டிலாயிட்டாங்க. வருஷம் ஒரு முறை வந்துட்டுப்போவாங்க. இங்கேயே வந்துடுங்கன்னா, கேட்க மாட்டேங்கிறாங்க."

`` `சம்சாரம் அது மின்சாரம்' இரண்டாம் பாகம் கதை ரெடி பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னீங்க... அதோட கதை என்ன?"

விசு
விசு

`` `சம்சாரம் அது மின்சாரம்' க்ளைமாக்ஸ்ல மனமாச்சார்யங்களோடு சேர்ந்திருக்கிறதைவிட ஒரே ட்ரெயின்லயே தனித்தனி கம்ப்பார்ட்மென்ட்டுல பயணிப்போம்... தனிக்குடித்தனம் போறது நல்லதுனு சொன்னேன். ஆனா, இன்னிக்கு ஒரு வீட்டுக்குள்ளேயே தனித்தனி ஆளா போயிட்டோம். இது நல்லதில்லைனு சொல்லப்போறேன். என்ன ஒண்ணு என்னை ஆதரிக்கிற என் குருநாதர் கே.பிசார் இப்போ இல்லை. `சாரி சார் படம் இப்போதைக்கு எடுக்கலை'னு சரவணன் சார் சொல்லிட்டார். கே.ஆர்.ஜி இல்லை. ஜோதிகா ஆபீஸ்ல கதையைக் கொடுத்திருக்கேன். அவங்க மனசுவெச்சா `சம்சாரம் அது மின்சாரம்-2' வரும்னு நினைக்கிறேன். இறைவனோட அருள் இருந்தால் நிச்சயம் அந்த வாய்ப்பு விரைவில் கைகூடும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு