
‘அவெஞ்சர்ஸ் : எண்டு கேம்’, ‘தி லயன் கிங்’, ‘கேப்டன் மார்வெல்’, ‘ஸ்பைடர் மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம்’, ‘அலாவுதின்’ என இவ்வருடம் ஹாலிவுட் திரைத்துறை ஆடிய முதல் இன்னிங்ஸ் சீரும் சிறப்புமாக இருந்தது.
வசூல்ரீதியாகவும் இப்படங்கள் வெற்றி. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் வெளிவரவிருக்கும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்!
ஜோம்பிலேண்டு : டபுள் டேப் Zombieland
இப்படத்தின் முதல் பகுதி 2009-ல் வெளியானது. பத்து வருடங்கள் கழித்து அதே படக்குழுவோடு இவ்வருடம் களமிறங்குகிறது, ‘ஜோம்பிலேண்டு : டபுள் டேப்.’ முதல் பாகத்தை இயக்கிய ரூபன் ஃப்ளெச்சர் இப்பாகத்தையும் இயக்குகிறார்.

மொத்த அமெரிக்காவையும் ஜோம்பிக்கள் ஆக்கிரமிக்க, அதிலிருந்து தப்பிக்கும் நான்கு பேர், உயிர் பிழைக்க ஓடுகிறார்கள். கூச்ச சுபாவம் கொண்ட கல்லூரி மாணவன், இரண்டு சகோதரிகள், ஜோம்பிக்களைக் கொன்று குவிக்கும் கோபக்காரர் எனத் தனித்தனியே பயணிக்கும் இவர்கள் ஒருகட்டத்தில் சந்திப்பதோடு, சாமர்த்தியமாக ஜோம்பிக்களிடமிருந்து தப்பிப்பதே மீதிக் கதை. வுட்டி ஹாரெல்ஸன், ஜெஸ்ஸி ஐஸன்பெர்க், எம்மா ஸ்டோன், அபிகெய்ல் ப்ரெஸ்லின் போன்றவர்கள் நடித்திருக்கும் இப்படம், அக்டோபரில் வெளியாகிறது.
இட் சேப்டர் 2 IT Chapter 2
1986-ல் ஸ்டீஃபன் கிங் எழுதிய ‘இட்’ நாவலைத் தழுவி 2016-ல் எடுக்கப்பட்ட படம், ‘இட்.’ இதன் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பரில் வெளியாகிறது. ஒரு சிறுவன் அடைமழையில் காகிதக் கப்பல் விடும் சமயத்தில் ஒரு கோமாளியால் கடத்தப்படுகிறார். அவரைத் தேடும் வேட்டையில் இறங்குகிறார்கள் அவரின் நண்பர்கள்.

இறுதியில் அதற்குத் தீர்வு காண்பதுதான் முதல் பாகத்தின் கதை. முதல் பாகத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள், இப்பாகத்தில் இளைஞர்கள். 27 வருடங்கள் கழித்துப் பயணிக்கிறது இரண்டாம் பாகக் கதை. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மிரட்டலாக இருந்தது. முந்தைய பாகத்தோடு தொடர்புகொள்ளும் விதமாகச் சில காட்சிகளைப் பக்காவாகக் கோத்திருந்தார்கள். முதல் பாகத்தை இயக்கிய ஆண்டி முச்செட்டி, இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.
ஸ்டார் வார்ஸ் : தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்
Star Wars : The Rise Of Skywalker
ஒரிஜினல் டிரையாலஜி, ப்ரீகுவெல் டிரையாலஜி, சீக்வெல் டிரையாலஜி, இவையன்றித் தனிக் கதைகள்... என ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 1970-களின் இறுதியில் தொடங்கப்பட்ட இந்தத் தொடரின் மூன்றாவது டிரையாலஜியின் கடைசிப் படம் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது.

எப்படி மார்வெலுக்கு ‘எண்டு கேம்’ மிக முக்கியமான படமோ, ‘ஸ்டார்வார்ஸ்’ படத்தொடரில் இந்த ‘தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’. ஒட்டுமொத்தத் தொடரில் 11-வது படமான இது, ‘ஸ்டார் வார்ஸ்’ஸின் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தொடங்குவதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன் இந்தப் படத்தொடரில் வெளியான ‘தி லாஸ்ட் ஜெடி’ படத்தின் வசூல் கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் டாலர் என்பதால், இந்தப் படத்தின் வசூல் இரண்டரை பில்லியன் டாலரைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோக்கர் Joker
சூப்பர் ஹீரோக்களின் கதைகளைவிட, சூப்பர் வில்லன்களின் கதைகளில்தான் அதிக சுவாரஸ்யம் இருக்கும். குடும்பத்தை, ஊரை, உலகத்தை என ஏதொவொன்றைக் காப்பாற்றவேண்டும் என்ற முனைப்பே சூப்பர் ஹீரோ உருவாகும் கதையாக இருக்கும். வில்லனுக்கோ, அவன் வில்லனாவதற்கு முன், வலி, துரோகம், இழப்பு, அவமானம், ஆசை என நீண்டநெடிய வரலாறு இருக்கும்.

அப்படித்தான் வாழ்வில் தோற்று முடங்கிப்போன ஒரு ஸ்டாண்ட்அப் காமெடியன், எப்படிப் பிறரின் துன்புறுத்தலால், துரோகத்தால் ‘ஜோக்கர்’ என்ற சூப்பர் வில்லனாகிறான் என்பதை இந்தப் படம் சொல்லும். அடிப்படையில் ‘பேட்மேன்’ கதாபாத்திரத்தின் வில்லனான ஜோக்கர், இந்தப் படத்தில் ஹீரோவாக இருந்து, ஆன்ட்டி ஹீரோவாக மாறுவான். டி.சி காமிக்ஸ் நிறுவனத்தின் கதாபத்திரம் என்றாலும், அக்டோபரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை, தன் படத்தொடரின் பகுதியாக இல்லாமல், தனித்த படமாகவே டி.சி வெளியிடுகிறது.
ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்
Jumanji : The Next Level
வீடியோ கேம், ‘ஸத்தூரா’, ‘ஜுமான்ஜி’, மல்யுத்த வீரர் ‘தி ராக்’ இவை அனைத்துக்கும் 90’ஸ் கிட்ஸுக்கும் மிகப்பெரிய பிணைப்பு இருக்கிறது. வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென அதற்குள் நாமும் சென்றுவிட்டால் எப்படியிருக்கும் என்பதுதான், ‘ஸத்தூரா’ படத்தின் கான்செப்ட். 1995-ல் ‘ஜுமான்ஜி’யாகவும், 2005-ல் ‘ஸத்தூரா’வாகவும் வெளியானது.

இரண்டாவதாக வெளிவந்த ‘ஸத்தூரா’ மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததால், இதன் படத்தொடர் டிராப் ஆனது. இதைத் தொடர்ந்து 2015-ல் தி ராக் என்றழைகைப்படும் டுவெயின் ஜான்சனை நடிக்க வைத்து ‘ஜுமான்ஜி’யாக மீண்டும் தூசி தட்டினார்கள். படம் பல கோடி ரூபாய் வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து ‘ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்’ வரும் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது.
ராம்போ : லாஸ்ட் ப்ளட்
Rambo : Last Blood
சில்வஸ்டர் ஸ்டோலனை விட்டால் இன்னும் பத்தாண்டுகளுக்கு ராம்போவாகவும், ராக்கியாகவும் நடிப்பார். கடந்த ஆண்டு ‘ராக்கி’ படத்தொடரின் ‘க்ரீடு 2’ வெளியானதைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம், ‘ராம்போ : லாஸ்ட் ப்ளட்.’

அதிரடி சாகசங்கள், ரத்தம் தெறிக்கும் ராவான காட்சியமைப்புகள், மனித இனத்தால் பயன்படுத்த முடிகிற எல்லா வகையான ஆயுதங்களின் பயன்பாடுகள் என... மாவீரன் ராம்போ கதைகளின் சிறப்பம்சங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வரிசையில், இப்போது வரவிருக்கும் ‘லாஸ்ட் ப்ளட்’ படத்தில் ராம்போ மெக்ஸிசிகோவுக்குச் சென்று கடத்தப்பட்ட தன் நண்பனின் மகளைக் காப்பாற்றப் போகிறான். இதன் முன்னோட்டம் ஏற்கெனவே வெளியாகி, படத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துவிட்டது.