Published:Updated:

ரஜினியின் ரத்தக் குழாய்களில் பிரச்னையா... எப்படியிருக்கிறார் சூப்பர்ஸ்டார்?!

ரஜினியின் உடல்நிலை பற்றி மருத்துவமனையிலிருந்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

நேற்று இரவு சென்னை காவேரி மருத்துமனையில் ரஜினிகாந்த் திடீரென அனுமதிக்கப்பட்டார். கோடம்பாக்கமே இது குறித்து பரபரப்பான நிலையில், "இது வழக்கமான ஒரு ஹெல்த் செக்கப்தான். பயப்படத் தேவையில்லை" என்ற லதா ரஜினிகாந்த், "வருஷத்துக்கு ஒரு முறை அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி முழு உடல் பரிசோதனைக்காக அனுமதியாகியுள்ள அவர், ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கியிருப்பார். பின் வீடு திரும்புவார்" என்றார்.

தவிர, "சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக டெல்லி சென்று திரும்பினார் ரஜினிகாந்த். அங்கே ஜனாதிபதி, பிரதமர் எனப் பலரையும் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். பயணங்கள் சென்றதால், இந்த ஹெல்த் செக்கப்" என்பதான தகவல்களும் வந்தன.
விருதுகளுடன் ரஜினி, தனுஷ்
விருதுகளுடன் ரஜினி, தனுஷ்

மருத்துவமனையில் ரஜினிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட பல உடல்பரிசோதனைகள் நடந்ததில், எதிர்பாராதவிதமாக அவருக்கு ரத்தக் குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது, ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (Necrosis) எனப்படும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது. ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதயத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வழக்கமான பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரஜினியின் மனைவி தெரிவித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகத்துடன் நாங்களும் பேசினோம். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்" எனக் கூறியிருக்கிறார்.

காவேரி மருத்துவமனை செய்திக் குறிப்பு
காவேரி மருத்துவமனை செய்திக் குறிப்பு

இதனிடையே சற்று முன்னர், ரஜினியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த நேற்று (28-10-2021) தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரிரு நாள்களில் நலமுடன் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு