Published:Updated:

தனிமையிலே இனிமை காண முடியுமே!

தனிமை வாழ்க்கை அனுபவம்.
பிரீமியம் ஸ்டோரி
News
தனிமை வாழ்க்கை அனுபவம்.

தனிமையில் வாழும் 60-களின் மூத்த கிளாஸிக் நடிகைகள்

கொரோனா ஊரடங்கு வாழ்க்கைமுறை தவிப்பையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகப் பலரும் கூறுகிறார்கள். ஆனால், தனிமையில் வாழும் 60-களின் மூத்த கிளாஸிக் நடிகைகள் சிலரின் வாழ்க்கைமுறைக்கும் ஊரடங்கு காலத்துக்கும் வித்தியாசமே இல்லை. பல ஆண்டுகளாகவே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட வாழ்க்கைமுறைக்குப் பழகிவிட்டார்கள். தனிமை வாழ்க்கை அனுபவம் குறித்து அவர்களிடம் பேசினேன்.

கே.ஆர்.விஜயா

“இளமைக்காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்கூட நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்த நிலை சினிமாவுக்கு வந்த பிறகு மாறியது. ஒருகட்டத்தில் திருமணம், குழந்தை எனக் குடும்பப் பொறுப்புகளை கவனிக்க மட்டுமே ஆசைப்பட்டேன். பலமுறை சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்தும், சினிமா வாய்ப்புகள் என்னை விட்டபாடில்லை. பரபரப்பாக நடித்தாலும், வாரத்தில் ஒருநாள்தான் எனக்கானதாக இருக்கும். எங்களுடைய ‘பொனான்ஸா(bonanza)’ ரக விமானத்தில் கணவரும் நானும் வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்வோம். அப்போது எங்களுடைய பிரமாண்டமான வீட்டில் நிறைய சொந்த பந்தங்கள் எப்போதும் இருப்பார்கள். வீட்டுக்குள் பெரிய தியேட்டர் இருந்தது. அந்த வீட்டைப் பராமரிக்க முடியாமல் விற்றுவிட்டோம். நிறைய புகழ் கிடைத்தாலும், வீட்டுக்குள்ளேயே இருக்கிற எளிமையான வாழ்க்கையைத்தான் நான் எப்போதும் எதிர்பார்த்தேன். கணவர் இறந்து ஐந்தாண்டுகளாகிறது. ஒரே மகள் கணவர், குழந்தை என மகிழ்ச்சியாக இருக்கிறாள். சொந்த பந்தங்களும் யாருமே உடனில்லை.

கே.ஆர்.விஜயா
கே.ஆர்.விஜயா

இப்போது நான் தனிப்பறவை. வசதி வாய்ப்புகளுக்குக் குறை ஏதுமில்லை. எப்போதாவது கோயில்களுக்குச் செல்வது தவிர, வேறு எங்கும் செல்லமாட்டேன். காலம் முழுக்க யாருமே உடன் இருக்க மாட்டார்கள். இந்த அடிப்படை உண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டதால் தனிமை வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்கிறேன். கேரளாவில் சொந்தத் தொழில்நிறுவனம் இருக்கிறது. அதன் கணக்குகளை வீட்டில் இருந்தபடியே கவனித்துக்கொள்வேன். தவிர, சினிமா பார்ப்பது, வீட்டு வேலைகள் என நேரத்தை வீணாக்காமல் மகிழ்ச்சியாகக் கழிக்கிறேன்!”

விஜயகுமாரி

ன் கணவர் லட்சிய நடிகர் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) அரசியலிலும் இருந்ததால் தினமும் எங்கள் வீட்டில் கட்சிக் கூட்டம் நடக்கும். அதில், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் உட்பட பெரிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கெல்லாம் உணவு ஏற்பாடு செய்வது, சினிமா வேலை, கோயிலுக்குப் போவது தவிர வெளியுலகம் எதுவுமே எனக்குத் தெரியாது. இந்த நிலையில்தான் திடீரெனத் தனிமையாக்கப்பட்டேன். என் கணவரைப் பிரிந்தேன். ‘இனியும் வாழணுமா?’ என்று கலங்கி நின்றபோது, முதல்வராக இருந்த அண்ணாவும் என் மாமியாரும்தாம் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். 1968 முதல் என் மகனுடன் தனியாக வாழ்ந்துகொண்டே சினிமாவிலும் தொடர்ந்து நடித்தேன்.

விஜயகுமாரி
விஜயகுமாரி

எம்.ஜி.ஆர் அண்ணன், சிவாஜி அண்ணன் வீட்டுக்குத் தவிர வேறு எங்கேயும் அதிகம் செல்ல மாட்டேன். எந்த உறவு முறைக்கும் ஓர் அளவுகோல் இருக்கிறது. அதனால் மகனுக்குத் திருமணமான பிறகு, சந்தர்ப்பச்சூழலால் சென்னைப் பாலவாக்கத்தில் இப்போது வசிக்கும் வீட்டுக்குக் குடியேறினேன். கடந்த 20 ஆண்டுகளாகத் தனியாகவே, ஊரடங்கு போன்ற வாழ்க்கை முறையில்தான் வாழ்கிறேன்.

மறப்போம் மன்னிப்போம் என்பதே என் குணம். அன்பு மட்டும்தான் எல்லோரிடமும் எதிர்பார்ப்பேன். ஆனால், என் நெஞ்சிலும் முதுகிலும் குத்தியவர்கள் பலர் உண்டு. அதனால் தனிமையில் அழுவது தவிர, யாரையும் காயப்படுத்திக்கூடப் பேச மாட்டேன். என் கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டேன். ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடல் எனக்காகவே எழுதப்பட்டதுபோல நினைத்துக்கொண்டு சமாதானம் அடைவேன். ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்று அண்ணா சொல்வார். அந்தப் பக்குவத்துக்கு மாறிவிட்டதால் தற்போது மனவருத்தங்கள் ஏதுமில்லாமல் சந்தோஷமாக வாழ்கிறேன்.

திருப்பதி திருமால் தவிர வேறு மால் (வணிக நிறுவனங்கள்) எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. 60 ஆண்டுகளுக்குமேல் வசிக்கும் சென்னையில் சில இடங்களை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். வீட்டிலும் என் பெட் ரூமில்தான் எப்போதும் அடைந்திருப்பேன். டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது, சமையல் செய்வது, போன் உரையாடல்கள்தான் என் பிரதான வேலைகள். ஆர்டர் செய்தால் தேவையான பொருள்கள் வீட்டுக்கே வந்துவிடுகின்றன. வெளியே செல்வதற்கான அவசியம் இருப்பதில்லை. என் கணவர் இறந்தபோது 46 ஆண்டுகள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுவே கடந்த 20 ஆண்டுகளில் மறக்க முடியாத நிகழ்ச்சி!”

காஞ்சனா

“நல்லா வாழ்ந்த குடும்பம்தான். ஆனால், அப்பாவின் தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட அதிகமான கடன் சுமைகளும் பாரங்களும் என்மேல் விழுந்தன. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருந்தேன். அப்போதுதான் சினிமா வாய்ப்புகளும் தேடிவர, புகழுடன் நிறைவான பணமும் சம்பாதித்தேன். எல்லாக் கடன்களையும் அடைத்தேன். பெரிய இடங்கள் பலவற்றிலிருந்தும் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால், சொந்த உறவுகளுக்குள் இருந்த சிலரே அதையெல்லாம் தடுத்தார்கள். என் சினிமா வருமானம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. என் பணத்தை எனக்கே தராமல், மீண்டும் கடன் சுமைகளைத்தான் கொடுத்தார்கள். என் பெற்றோர்கூட அந்தச் சூழ்ச்சிகளை உணரவில்லை. நிம்மதியில்லாமல் இருந்தேன். ‘மனசுக்குள்ள இவ்வளவு வேதனைகளை வெச்சுக்கிட்டு எப்படி மகிழ்ச்சியா நடிச்சே?’ன்னு பின்னாள்களில் பல ஜாம்பவான்கள் என்னிடம் கேட்டார்கள்.

நானே கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்பேன் என்று எம்.ஜி.ஆர், சிவாஜி, நடிகர் சங்கத்தினர் உட்பட பலரும் எதிர்பார்த்தார்கள். அப்படிச் செய்திருந்தால் உடனே தீர்வும் கிடைத்திருக்கும். ஆனால், குடும்ப விஷயம் பொதுவெளிக்கு வருவதை நான் விரும்பவில்லை. என்மேல் அன்புகொண்ட பிரபலங்கள் பலரும், ‘நல்ல பையன் யாரையாச்சும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டு மகிழ்ச்சியா இரு’ என்று சொன்னார்கள். அதற்கு என் மனம் பக்குவப்படவில்லை. ஒருகட்டத்தில் அதுதான் சரியான தீர்வு என உணரும்போது எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. உரிய பருவத்தைத் தாண்டிக் கிடைக்கும் விஷயங்கள் பயன்தராது. குடும்பத்திலும் பிரச்னைகள் குறையவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போய் வீட்டிலிருந்து வெளியேறி பெங்களூரில் தங்கை வீட்டுக்குச் சென்றேன். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகமாகி, கோயில் கோயிலாகச் சுற்றினேன். மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், சட்டப் போராட்டத்தில் அதிக கவனம் செலுத்தினேன். வெற்றி கிடைத்தாலும் ஓரளவுக்குத்தான் சொத்துகள் கிடைத்தன. அதில் பல கோடி ரூபாய் சொத்துகளைத் திருப்பதி கோயிலுக்கு தானம் செய்துவிட்டோம்.

காஞ்சனா
காஞ்சனா

இப்போது என் தங்கையுடன் சென்னையில் வசிக்கிறேன். வீடும் என் அறையும்தான் எனக்கான உலகம். எனக்கு 81 வயதாகிறது. இனி வெளியுலகத்தோடு ஒன்றி இருக்கவோ, வெளியிடங்களுக்குப் போகவோ விருப்பமில்லை. ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ரஷ்யன் உட்பட எட்டு மொழிகள் எனக்குத் தெரியும். எனவே, பல மொழி ஆன்மிகப் புத்தகங்கள் படிப்பது, இசை கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என்று என் அன்றாடப் பணிகளுக்கு நேரம் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதனால் தனிமை வாழ்க்கை நிறைவையும் நிம்மதியையும் தருகிறது!”

செளகார் ஜானகி

“குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் இல்லற வாழ்க்கையும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சிங்கிள் பேரன்ட்டாக மூன்று குழந்தைகளையும் வளர்த்துக்கொண்டு, பல மொழி சினிமாவிலும் நடித்துப் புகழ் பெற்றேன். ஆனால், குடும்ப உறவுகள் உட்பட யாரிடமிருந்தும் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் யாரும் முன்வரவில்லை. எப்போதாவது சின்னச் சின்ன மகிழ்ச்சி கிடைக்குமே தவிர, என் வாழ்க்கையில் பெரும்பாலும் கஷ்டங்களும் ஏமாற்றங்களும் வலிகளும்தான் நிறைந்திருந்தது. அதையெல்லாம் நம்பிக்கையுடன் கடந்துவந்தேன். எல்லா நிலையிலும் ஒழுக்கமான வாழ்க்கை முறையைத்தான் கடைப்பிடித்தேன். சினிமாவிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அமெரிக்காவிலுள்ள என் இரண்டாவது மகள் வீட்டில் ஒன்றரை ஆண்டுகள் தங்கினேன். ஆனால், அந்த வாழ்க்கையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

என் விருப்பத்துக்கு ஏற்ற வாழ்க்கைக்கு அமைதியான இடத்தைத் தேடினேன். அதுதான் பெங்களூரில் தற்போது வசிக்கின்ற குப்பலாலா பகுதி. கடந்த 21 ஆண்டுகளாகவே தனிமையும் அமைதியுமாக வாழ்கிறேன். ‘ஐயோ பாவம்’ என்று என்னைப் பார்த்து பிறர் பரிதாபப்படுவது எனக்குப் பிடிக்காது. என் பிள்ளைகளுக்குக்கூட எந்த வகையிலும் பாரமாக இருக்க விரும்பமாட்டேன். நான் வாழும் காலம் முழுக்கவே என் உழைப்பால் சேர்த்த பணத்தில்தான் வாழ்வேன். பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்து இப்போதுவரை எனக்கான சமையலை நானேதான் செய்வேன். மற்றவர்களுக்கு அன்பாகச் சமைத்துப் பரிமாறுவேன். ஆனால், எனக்கான உணவைப் பிறர் சமைக்க அனுமதிக்கமாட்டேன். நான் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்கள் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் நானேதான் கழுவுவேன். என் துணிகளையும் நானே துவைத்துக்கொள்வேன்.

வீட்டைச் சுத்தம் செய்ய மட்டும் வேலையாள் ஒருவர் வருவார். அவரையும் இந்தக் கொரோனா சமயத்தில் வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். இப்போது வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்துகொள்கிறேன். பழக்கப்பட்ட வாழ்க்கை முறை என்பதால், இந்த ஊரடங்கு காலமும் எனக்கு வழக்கமான நாள்களாகவே இருக்கின்றன. தினசரி நான்கு மணிநேரத் துக்கம்தான். விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். பகலிலும் தூங்க மாட்டேன். தினமும் ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பேன். டிவி-யில் பல மொழி செய்திகள் பார்ப்பேன். யூடியூப்பில் உலக நிகழ்வுகள், சமையல் விஷயங்களைத் தெரிந்துகொள்வேன். நானே மெயில் செய்வேன். எனக்கு 89 வயதாகிறது. இப்போதும் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயனுள்ள, பிடித்த விஷயங்களைத்தான் செய்கிறேன். அதனால் எனக்குப் பிடித்த இந்தத் தனிமை வாழ்க்கையும் இனிமையாகவே இருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் யாருமே கிடையாது. உதவிக்குக்கூட யாரையும் கூப்பிட மாட்டேன். இனி வாழும் காலம் கடவுள்விட்ட வழி!”