Published:Updated:

"அந்தப் பெரியப்பாவுக்கும் நிறைய பேருக்கும் உங்களைப் பிடிக்கும் சூர்யா..!" - ஒரு ரசிகனின் கடிதம்

`காக்க காக்க' அன்புச்செல்வன்
`காக்க காக்க' அன்புச்செல்வன்

"என்னை இப்போ எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. நீங்கள் என்ன பண்ணினாலும் பிடிக்கும்னு சொல்ற வார்த்தைகள் காதில் வந்து விழுது. இதில் இருந்து இனி இறங்கக் கூடாது. மேலே மேலே போகணும்'' - 'வாரணம் ஆயிரம்' பட வெற்றிக்குப் பிறகு ஆனந்த விகடன் பேட்டியில் நீங்கள் இப்படிச் சொல்லியிருந்தீர்கள்.

அன்பான சூர்யாவுக்கு,

அன்பான ரசிகர்களில் ஒருவன் எழுதும் கடிதம். உங்களின் ரசிகனாக மாறியதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் பெயரும் ஒரு காரணம். சூர்யா... என் பெயரும் அதுதான்!

`நேருக்கு நேர்' சூர்யா
`நேருக்கு நேர்' சூர்யா

எத்தனையோ நடிகர்களுக்கு மத்தியில் உங்கள் பெயரும் முகமும் மனதில் பதிந்ததற்கான அர்த்தமும் அதுதான். ''அவள் வருவாளா...'' பாடலில்தான் உங்களை முதலில் பார்த்தேன். ''இதுதான் சிவகுமார் பையன்'' என வீட்டில் பேசிக்கொண்டார்கள். ''யார் சிவக்குமார்'?'' எனக் கேட்க, சில நாள்களிலேயே டிவியைக் காட்டி "இவர்தான் சிவக்குமார். இவர் பையன்தான் சூர்யா'' என்றார்கள். ''சூர்யா அப்பா சிவக்குமார் இவர்தானா'' என மனதில் ஏற்றிக்கொண்டேன். "இந்த ஹீரோவுக்கு டான்ஸே ஆட வராது... ஒண்ணு கை ரெண்டையும் நீட்டி வா வா...ன்னு கூப்பிடுவான். இல்லைன்னா, ஹீரோயின் பின்னாடியே திடுதிடுன்னு ஓடுவான்" என்கிற கமென்ட்டை எப்போது உங்கள் பாடல் ஒளிபரப்பானாலும் வார்த்தை மாறாமல் ஒப்புவிப்பார் என் பெரியப்பா.

நாள்கள் நகர்ந்தன. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' வெளியானது. பாடல்கள் எல்லாம் ஹிட். டிவி, ரேடியோ எனத் திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் பதின்பருவத்தினரின் பாட நோட் அட்டைகளில் நீங்கள் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். லாங்-சைஸ் நோட் என் வகுப்புக்கு தேவையே இல்லாதபோதும், அடம் பிடித்து ஒரு நோட்டை வாங்கினேன். `ஃப்ரெண்ட்ஸ்', `நந்தா', `உன்னை நினைத்து', `மௌனம் பேசியதே' என அடுத்தடுத்து படங்கள் ஹிட்டாகின்றன. பத்திரிகைகளில், டிவிக்களில், ரேடியோக்களில் எல்லாம் உங்களின் நடிப்பை மெச்சுகிறார்கள். எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத கதைக்களங்கள், கதாபாத்திரங்கள். எப்படி அநாயசமாக நடிக்கிறார் என்ற ஆச்சர்யம் எனக்கும் ஏற்பட்டபோதுதான் உங்கள் நடிப்புக்கு ரசிகன் ஆனேன். `மௌனம் பேசியதே'வில் வருவதுபோல் பில்லியன் சீட் இல்லாத புல்லட் வாங்க வேண்டுமென்பதை லட்சியமாகவும் கொண்டிருந்தேன்.

`காக்க காக்க' அன்புச்செல்வன்
`காக்க காக்க' அன்புச்செல்வன்

பிறகுதான் வந்தது, `காக்க காக்க.' வாவ்..! முழங்கைக்கு மேல் மடித்துவிட்ட சட்டையும் முறுக்கு மீசையும், கையில் காப்பும் , கண்களில் காதலுமாக வந்துநின்ற அன்புச்செல்வன், இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறார் சூர்யா. படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட மனனம் ஆகும் அளவுக்கு அந்தப் படத்தை அத்தனை முறை பார்த்திருக்கிறேன். அதற்கு ஒரே காரணம் நீங்கள் மட்டுமே. என்னவோ என் பெரியப்பாவுக்கு மட்டும் உங்களைப் பிடிக்கவே இல்லை. "உயிரின் உயிரே..." பாடலைப் பார்த்துவிட்டும் அதே கமென்டைத்தான் சொன்னார். "இன்னும் ஹீரோயின் பின்னாடியே திடுதிடுன்னு ஓடிட்டுதான் இருக்கான்..."

`பிதாமகன்' வந்தது. "விழாது... உருட்டு அப்படி..." காட்சியின்போது உரக்கச் சிரித்துக்கொண்டிருந்த அதே பெரியப்பா, கோணிப்பைக்குள் நீங்கள் முகம் சிதைந்து கிடக்கும் காட்சி வந்தபோது அழுதுவிட்டார். அவருக்கு `பிதாமகனை'யும் சக்தியையும் ரொம்பப் பிடித்துப்போனது. சக்தி இறந்துபோனதாலேயே`பிதாமகன்' அப்போது பிடிக்கவில்லை. பிறகு, `பேரழகன்' வெளியானது. பெரியப்பா உங்களின் ரசிகராகவே மாறிவிட்டார். அவர் மட்டுமல்ல, குடும்பத்தினர் பலரும். சின்னா (எ) பிரேம்குமாராக நடித்தது நீங்களே இல்லை என்று சந்தேகப்பட்டிருக்கிறேன். 'கஜினி'யில் எங்கள் எல்லோரையும் கலங்கடித்தீர்கள் சூர்யா. 'எப்படியிருக்கீங்க' என நலம் விசாரித்துவிட்டு, அடுத்த கேள்வியே `சில்லுனு ஒரு காதல்' பார்த்துட்டீங்களா' என அத்தைகளும் அம்மாக்களும் கேட்பதை பார்த்திருக்கிறேன். `சில்லுனு ஒரு காதல்' உங்களை எல்லாத் தரப்பு ரசிகர்களிடமும் கொண்டுபோய் சேர்த்தது... சரிதானே சூர்யா! `மௌனம் பேசியதே' புல்லட் லட்சியத்தை`சில்லுனு ஒரு காதல்' ஸ்டார் சிட்டி வந்து மாற்றிவிட்டது.

`சில்லுனு ஒரு காதல்' கௌதம்
`சில்லுனு ஒரு காதல்' கௌதம்

`சில்லுனு ஒரு காதல்' படத்துக்குப் பிறகு, உங்கள் ரசிகர்களின் பொற்காலம் எனலாம். டபுள் ஆக்‌ஷனில் நடித்த `வேல்' வெளியானது. உடன் வெளியான படங்கள் எல்லாவற்றையும் ஓரம்கட்டி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்து தனித்து நின்றது. அந்த சந்தோஷம், வேற லெவல்! அடுத்ததாக `வாரணம் ஆயிரம்'. லட்சோபலட்ச ரசிகர்களை உங்களுக்காகத் திரட்டிய படம். ''யாருமே இப்படி ஒரு அழகைப் பார்த்திருக்க மாட்டாங்க'' என்கிற வசனம் உங்களுக்குத்தான் நிரம்பப் பொருந்தியிருக்கும். கிட்டார் வாங்கணும், சிக்ஸ் பேக்ஸ் வைக்கணும், காதலியைத் தேடி வெளியூர் போகணும், ஆர்மியில் சேரணும், கிரிக்கெட் விளையாடணும், முக்கியமாக மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கணும் என ஆசைகள் ஆயிரம், அந்தப் படத்தால்.

`அயன்' வெளியானது. சூர்யா ரசிகனாக `அயன்' தந்த அனுபவங்களைக் கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லை. இன்றும் `அயன்'தான் எங்களுக்கான ஒப்பீட்டு அலகு. அதன்பின், `ஆதவன்' வந்தது. எங்களை ஏமாற்றவில்லை. `சிங்கம்' வந்தது, மாஸ் ஹிட்டானது. `ரத்த சரித்திரத்'தில்தான் எல்லாம் மாறிப்போனது சூர்யா. சிலருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பலருக்குப் பிடிக்கவேயில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு, ரசிகனாக ஒரு சறுக்கல். `ஏழாம் அறிவு' எல்லோருக்குமே பிடித்திருந்தது. ஆனாலும், என்னவோ ஒன்று மிஸ்ஸிங். மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் `மாற்றான்' நடித்தீர்கள். FDFS-ல் ரசிகர்கள் அடித்த விசில் சத்தம், இன்று நினைத்தாலும் காதுகளுக்குள் ஒலிக்கிறது. படம் முடிந்தபின், பிடித்திருக்கு, பிடிக்கவில்லை என ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாத பெருங்குழப்பம். அதன்பின்,`சிங்கம் 2' வந்தது. மக்களுக்குப் பிடித்திருந்ததுதான். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

`அயன்' தேவா
`அயன்' தேவா

`அஞ்சான்' எங்களை நிறையவே காயப்படுத்தியது சூர்யா. `அஞ்சான்' அப்போது பெரிய பேசுபொருள் ஆனது. யானைக்கு சறுக்கிய அடியாகத்தான் எல்லோருமே நினைத்தார்கள். அதனால்தான், அந்தக் கொண்டாட்டம் அத்தனை சத்தமாய் கேட்டது. சமீபமாக, அந்தளவு சத்தத்தை உங்களால் கேட்கமுடிகிறதா? எங்களாலேயே கேட்கமுடியவில்லை. சறுக்குவது வழக்கமான பிறகு, அவர்கள் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்கள். நாம் அங்கேயேதான் இருக்கிறோம்... அப்படியே.

`அஞ்சான்' படத்தில் ஆரம்பித்து வரிசையாக 8 படங்கள். அதில் `24' தவிர வேறெதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக்கூட பூர்த்தி செய்யவில்லை. `நந்தா', `பேரழகன்', `காக்க காக்க', `வாரணம் ஆயிரம்', `அயன்' போன்ற படங்களைப் பார்த்து ரசித்து, உங்கள் ரசிகர்களாக மாறியவர்கள் நாங்கள். எங்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் சூர்யா. மாஸ்... கிளாஸ் என இரண்டு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த உச்சநட்சத்திரம் நீங்கள். கமல்ஹாசனுக்குப் பிறகு இப்படி ஒரு ரசிகர்கூட்டம் உங்களுக்குத்தான் திரண்டது. இது தமிழ் சினிமாவில் அதிசயமாக நடக்கும் நிகழ்வு. ஆனால், உங்களுக்கு நடந்திருக்கிறது.

`24' மணிகண்டன்
`24' மணிகண்டன்

"கேட்டதைவிட, நினைச்சதைவிட எல்லாமே அதிசயமா அடுத்தடுத்து நடந்துட்டே இருக்கு. இந்த வெற்றி ஆரம்பத்தில் எனக்கு வரலை. அப்படி வராமல் இருந்தது நல்லதுதான்னு இப்போ தோணுது. என்னை இப்போ எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. நீங்கள் என்ன பண்ணினாலும் பிடிக்கும்னு சொல்ற வார்த்தைகள் காதில் வந்து விழுது. இதிலிருந்து இனி இறங்கக் கூடாது. மேலே மேலே போகணும்'' - 'வாரணம் ஆயிரம்' பட வெற்றிக்குப் பிறகு ஆனந்த விகடன் பேட்டியில் நீங்கள் இப்படிச் சொல்லியிருந்தீர்கள். ஆமாம்... சூர்யா நீங்கள் கீழே இறங்கவே கூடாது. மேலே மேலேதான் போகணும். உங்களைக் கொண்டாட நாங்கள் இருக்கிறோம் சூர்யா.

"உங்காளு நல்லாதான நடிச்சுட்டு வந்தான். டான்ஸ்லாம் பிச்சு உதறினான். பாடி பில்டராயெல்லாம் வந்து நின்னானே. இப்போ ஏன்டா ஓடமாட்டேங்குது" எனப் பெரியப்பா இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறார். "அது சும்மா பதுங்கியிருக்கோம். சிங்கம் இனிமேல்தான் பாயும்" எனப் பதில் சொல்லியிருக்கிறேன். சிங்கம் மீண்டும் பாயும் எனும் நம்பிக்கையில்...

`வாரணம் ஆயிரம்' சூர்யா கிருஷ்ணன்
`வாரணம் ஆயிரம்' சூர்யா கிருஷ்ணன்

நிச்சயம் நீங்கள் பாய்வீர்கள் சூர்யா... 'சூரரைப் போற்று'... சூர்யாவைப் போற்றும்... ரசிகர்களைக் கூட்டும்!

அடுத்த கட்டுரைக்கு