Published:Updated:

‘சார்பட்டா’ மாரியம்மாள்களின் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு ஒரு கேள்வியும், கோரிக்கையும்!

பா.இரஞ்சித்தின் 'சார்பட்டா' ஆர்யா - துஷாரா

பா.இரஞ்சித்தின் படங்களில் பெண்கள் தாங்கள் நினைப்பதை அப்படியே யாருக்கும் அஞ்சாமல் பேசுபவர்களாகவும், கோபம், அழுகை, சிரிப்பு, காதல் எல்லாவற்றையும் தயக்கமின்றி வெளிக்காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

‘சார்பட்டா’ மாரியம்மாள்களின் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு ஒரு கேள்வியும், கோரிக்கையும்!

பா.இரஞ்சித்தின் படங்களில் பெண்கள் தாங்கள் நினைப்பதை அப்படியே யாருக்கும் அஞ்சாமல் பேசுபவர்களாகவும், கோபம், அழுகை, சிரிப்பு, காதல் எல்லாவற்றையும் தயக்கமின்றி வெளிக்காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

Published:Updated:
பா.இரஞ்சித்தின் 'சார்பட்டா' ஆர்யா - துஷாரா

பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா’ படம் வெளியாகியிருக்கிறது. இரஞ்சித் படங்களில் பெண்கள் கதாபாத்திரங்கள் எப்போதுமே சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும் என்பதால் ‘சார்பட்டா’வை தவறவிடாமல் உடனே பார்த்தேன்.

தலித் மக்கள் என்றால் அடியாட்களாக இருப்பவர்கள், சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுபவர்கள் போன்ற பிம்பங்களைத்தான் பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் உருவாக்கியிருக்கிறது. அதிலும் தலித் பெண்களை மீன் விற்பவர்கள், குழாயடியில் சண்டையிடுபவர்கள், அலுவலகங்களில் சுத்தம் செய்யும் பணியாளர்கள் என்பதைத் தாண்டி சென்னையின் பூர்வக்குடிகளான தலித் பெண்களின் கதாபாத்திரங்கள் நகரவில்லை.

‘’மெட்ராஸ்காரங்களே இப்படித்தான்’’ என்று பல இயக்குநர்கள் சினிமாவில் உருவாக்கி வைத்திருந்த மிக மோசமான (போலி)சித்திரத்தை உடைத்து, அம்மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக பதிவு செய்த முதல் இயக்குநர் பா. ரஞ்சித் மட்டுமே. ரஞ்சித் ஏற்படுத்திய விழிப்புணர்வால் விளிம்புநிலை மக்களை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்கிற புரிதல் இளம் இயக்குநர்களிடையே உருவாக ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2012-ல் வெளிவந்த பா.இரஞ்சித்தின் முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’யின் முதல் காட்சியில் கதாநாயகன் தன்னுடைய உள்ளாடையை காணவில்லை என்று அம்மாவிடம் கேட்பான். சமைத்துக் கொண்டிருக்கும் அவனது அம்மா (கூத்துப்பட்டறை மீனாட்சி) அதை பிடிதுணியாக பயன்படுத்துவதை பார்த்து கோபப்படுவான்.

”புது ஜட்டியை இப்டி பண்ணி வச்சிருக்க” என்று கேட்பவனிடம் சிரித்துக்கொண்டே அவனது அம்மா, “கோச்சுக்காதடா... அப்பா ஜட்டின்னு நெனச்சேன்” என்று சொல்லிவிட்டு, தன் கணவனிடம் திரும்பி, ”உன் ஜட்டில ஒன்னு அவனுக்கு குடேன்” என்று கேலி செய்வார். அன்பொழுக சாந்தமாக பேசுபவர்களாகவும், எதுவும் தெரியாத முட்டாள்களாகவும் எதார்த்த வாழ்விற்கு சற்றும் பொருந்தாத தமிழ் திரைப்பட அம்மாக்களுக்கு மத்தியில், இயல்பாக மகனை கேலி செய்யும் அம்மாவாக, குடித்துவிட்டு சலம்பும் கணவனை அதட்டி சோறு ஊட்டும் மனைவியாக நம் வீட்டு பெண்களை கண்முன் நிறுத்தி இருப்பார் பா.இரஞ்சித்.

துஷாரா 'சார்பட்டா'
துஷாரா 'சார்பட்டா'

திரைப்படங்களில் நடுத்தர குடும்பத்து பெண்கள் குளித்து, தலை பின்னி, நேர்த்தியாக உடுத்தி எப்போதும் பளிச்சென இருப்பார்கள் என்பதை உடைத்து யதார்த்த வாழ்வில் பெண்கள் நைட்டியிலும், சேலையை தூக்கி இடுப்பில் செருகி வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதை பா. இரஞ்சித்தின் படங்கள் தொடர்ந்து பதிவு செய்கிறது. வெள்ளைத்தோல் எலைட் தமிழ் திரைப்பட நாயகிகள் மத்தியில் மேக்கப் இல்லாத, சாதாரண உடைகளில் ஷேர் ஆட்டோக்களில் நம் அருகில் உரசிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அசலான பெண்களாக வலம் வருகிறார்கள் இரஞ்சித்தின் திரைநாயகிகள்.

அவரது படங்களில் பெண்கள் பெரும்பாலும் சத்தமாக பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். காதலை, அன்பைக்கூட போலிக் கோபத்துடன் உரக்கச் சொல்பவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் தாங்கள் நினைப்பதை அப்படியே யாருக்கும் அஞ்சாமல் பேசுபவர்களாகவும், கோபம், அழுகை, சிரிப்பு, காதல் எல்லாவற்றையும் தயக்கமின்றி வெளிக்காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

’மெட்ராஸ்’ திரைப்படத்தில் கதாநாயகன் கார்த்தியின் அம்மா (ரமா) எந்நேரமும் வீட்டில் சிடுசிடுவென பேசிக்கொண்டே இருப்பார். ஆனால், தன் மகன் காதலிக்கும் பெண்ணிடம் அன்பாக, குழைவாகப் பேசுவார். திருமணம் முடிவாகும்போது வரதட்சணை குறித்து பேசும்போது எல்லோர் முன்னிலையிலும் வரட்சணை வேண்டாம் என்பதை அழகாக தீர்க்கமாக சொல்வார். அந்த இரு பெண்களுக்குமான உறவும், உரையாடல்களும் தமிழ் திரைப்படங்களில் அதிகம் காணாத அதே சமயம் நம் வீடுகளில் மிக இயல்பாக நடக்கும் காட்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படத்தில், கதாநாயகி (கேதரின் தெரேஸா) கதாநாயகனை செல்போனில் அழைத்து, ‘’நான் குழாயாண்ட நிக்குறேன்... இங்க வா’’ என்று வரச்சொல்லி அவனிடம் காதலை சொல்வதும், ”கட்டிக்கிறியா” என்று வெளிப்படையாக கேட்பதும், அவன் வீட்டுக்கு திரும்பி செல்லும்போது சிரிப்பதும் மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்து ரசித்தவை.

ஆர்யா - துஷாரா 'சார்பட்டா'
ஆர்யா - துஷாரா 'சார்பட்டா'

’லவ் ப்ரப்போசல்’ என்றதும் காலம்காலமாக ஆண்தான் முதலில் காதலை சொல்லவேண்டும், பெண் வெட்கத்தில் கால் பெருவிரலால் போர்வெல் போட்டதுபோல் தண்ணீர் வருமளவு பூமியை நோண்டி வெட்கப்படவேண்டும் என்று மனதில் பதிந்திருந்த தமிழ் திரைப்படக் காட்சிகளை அடித்து காலி செய்தது அக்காட்சி.

‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் எந்நேரமும் சத்தமாக பேசுபவராக, ரஜினியை அதட்டுபவராக இருந்தாலும் வீட்டை விட்டு செல்லும் தன் மகனிடம் பேசும் காட்சிகளில் பொறுமையாக அன்பான அம்மாவாக நடிப்பில் மிளிர்வார். தனது பழைய காதலியை பார்த்துவிட்டு வரும் கணவனிடம் ஆதங்கத்துடன், ‘’எட்டாப்பு படிக்கறப்ப தப்படிக்கிற பெருமாள் என் பின்னாடியே திரிஞ்சான். எனக்கு டிக்கெட் போடு நானும் ஒரெட்டு போய் பார்த்துட்டு வந்திர்றேன். உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா” என்று கதாநாயகி கோபித்து சம உரிமை பேசுவது, கதாநாயகன் ரஜினி மனைவி பின்னாடியே சென்று சமாதானம் செய்யும் காட்சிகள் ரஜினியின் திரைப்படங்களில் இதுவரை கண்டிராதது.

இந்த உரையாடல்கள் எல்லா குடும்பத்திலும் சாத்தியமில்லை என்றாலும் கணவன் – மனைவி இடையே இந்த ’ஸ்பேஸ்’ மிக முக்கியமானது என்பதை உணர்த்தியிருப்பார் இயக்குநர் இரஞ்சித். அதேப்போல் ரஜினியின் மகளாக வரும் யோகி (தன்ஷிகா) சுதந்திரமான பெண்ணாக, ஆண்களுக்கு சமமாக சண்டையிட்டு கதாநாயகனையே காப்பாற்றுவளாக காட்டப்பட்டது எந்த சினிமாவிலும் வராத காட்சி.

துஷாரா 'சார்பட்டா'
துஷாரா 'சார்பட்டா'

‘காலா’ திரைப்படத்தில் புயல் (அஞ்சலி பாட்டில்) கதாபாத்திரம் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய இளம்பெண், போராளி. ஒரு போராட்டத்தின்போது அவளை அவமானப்படுத்தும் நோக்கில் மூன்று காவலர்கள் சேர்ந்து புயலின் சுடிதார் பேன்ட்டை உருவி எறிவார்கள். சட்டென்று அதிர்ச்சியில் நிலைக்குலைந்து போகும் புயல் ஆடையை நோக்கி தவழ்ந்து செல்வாள்.

ஆனால், ஆடையை எடுக்காமல் அருகில் இருக்கும் லத்தியை எடுத்து மூவரையும் திருப்பி அடிப்பாள். பெண்ணுக்கு சுயமரியாதை என்பது வலுக்கட்டாயமாக ஆடை களையப்படும்போது ஓடி ஒளிந்து உடலை மறைத்துக்கொள்வது அல்ல... தனக்கு அநீதி இழைத்தவர்களை திருப்பி அடிப்பதில் இருக்கிறது. மேலும், பெண்ணின் உடலில் புனிதம் எதுவுமில்லை என்றும் அவளது உடலுக்கு ஒருவர் தீங்கிழைப்பதால் அவள் அவமானப்படத் தேவையில்லை எனவும் மிக ஆழமான பெண்ணுடல் பற்றிய அரசியலை ஒரு சிறு காட்சியில் அற்புதமாக காட்டியிருப்பார் இரஞ்சித்.

ஷங்கரின் ’எந்திரன்’ திரைப்படத்தில் ரோபோ, தீ விபத்தில் சிக்கிக்கொண்டு ஆடைகள் முழுவதும் எரிந்துபோய் நிர்வாணமாக இருக்கும் இளம்பெண்ணை காப்பாற்றி தூக்கி வரும். தன்னை மற்றவர்கள் அந்த கோலத்தில் பார்த்துவிட்ட அவமானத்தில் அந்தபெண் அவ்விடத்திலேயே தற்கொலை செய்துகொள்வாள். மேற்கொண்டு அடுத்தடுத்த காட்சிகளில்கூட, ’அது ஒரு விபத்து, அதில் அவமானம் ஏதுமில்லை’ என்பதை சொல்லாமல் அப்பெண்ணின் தற்கொலை சரிதான் என்பதுபோல் காட்சிகள் நகரும். இதுதான் வழக்கமான ’தமிழ் சினிமா’ டெம்ப்ளேட்.

ஆடை களையப்பட்டால், வன்புணர்வுக்கு உள்ளானால் பெண்கள் அவமானத்தில் தலைகுனிய வேண்டும், தற்கொலை செய்துகொள்ள வேண்டும், குறைந்தபட்சம் அழவேண்டும் என்றிருந்த தமிழ் சினிமாவில் ‘காலா’ பட புயல் கதாபாத்திரம் மூலம் ’திருப்பி அடி’ எனும் வலுவான வழியை தொடங்கி வைத்தார் இரஞ்சித்.

ஆர்யா, கலையரசன், துஷாரா - 'சார்பட்டா'
ஆர்யா, கலையரசன், துஷாரா - 'சார்பட்டா'

காதல் திருமணமே செய்திருந்தாலும் பெண் முதலிரவு அறைக்குள் வெட்கப்பட்டுக்கொண்டே வரவேண்டும், சிணுங்க வேண்டும், விளையாட்டுக்காவது கணவனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் எனும் ’பழந்தமிழ் சினிமா’ பண்பாட்டின் மீதும் அடித்து ஆடுகிறாள் ‘சார்பட்டா’ மாரியம்மா. திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் வருபவள் வெளியில் கேட்கும் இசைக்கு ஏற்றவாறு குத்தாட்டம் போடுகிறாள், ஆட்டம் முடிந்து கணவன் மேல் பாய்ந்து விழும் மாரியம்மாதான் எக்காலத்துக்குமான நாயகி.

மலையாள திரைப்படங்களில் வருவதைப்போன்று வெளிப்படையாக கட்சி பெயர், தலைவர்கள் படம், கொடி பயன்படுத்தும் பழக்கத்தை சமகாலத்தில் ’சார்பட்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இரஞ்சித் தொடங்கி வைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் இனி வரும் திரைப்படங்களில் முன்நின்று அரசியல் செய்யும் பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்க வேண்டும்.

பா. ரஞ்சித்தின் திரைப் பெண்கள் அசலானவர்கள். கொண்டாட்டமானவர்கள். அவரது திரைப்படங்கள் தொடர்ந்து பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை குறிப்பிட்ட வரையறைக்குள்ளாகவே அவர் சுருக்கிவிடக்கூடாது.

‘அட்டக்கத்தி’ மீனாட்சி, ‘மெட்ராஸ்’ ரமா, ‘காலா’ ஈஸ்வரி ராவ், ‘சார்பட்டா’ மாரியம்மா எல்லோரும் தைரியமாக பேசும் பெண்களாக இருந்தாலும் அவர்கள் குடும்பம், கணவன், பிள்ளைகளைத் தாண்டி யோசிப்பவர்களாக இல்லை. கணவனின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் சினிமாக்களை எதிர்பார்க்கிறோம், கோரிக்கை வைக்கிறோம். ஏனெனில், புரிதல் உள்ளோரிடம் தானே உரிமையாகக் கேட்கவும் முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism