காலத்திற்கேற்ப பேய்களும் அப்டேட்டாகி பங்களாவிலிருந்து தங்கள் ஜாகையை லிப்ட்டிற்கு மாற்றிக்கொண்டால்? அதுதான் இந்த ‘லிப்ட்.’
பெங்களூரிலிருந்து பணியிட மாற்றம் காரணமாகச் சென்னைக்கு ஐ.டி நிறுவனத்தின் டீம் லீடராக வருகிறார் கவின். வந்த முதல்நாளே எக்கச்சக்க வேலை. அதனால் ஷிப்ட் முடிந்தும் நள்ளிரவு வரை அலுவலகத்திலேயே உட்கார்ந்து தீயாய் வேலை செய்கிறார். வேலை முடிந்து கிளம்பும் நேரம் அமானுஷ்யமாகச் சில விஷயங்கள் நடக்க, அவரை உயிர்ப்பயம் தொற்றிக்கொள்கிறது. நள்ளிரவில் தொடங்கும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் பிழைத்திருக்க அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் பலனளித்ததா என்பதே மீதிக்கதை.
கவினுக்கு காமெடி, சோகம், பயம் என எல்லாமே இயல்பாகக் கைவருகின்றன. படத்தின் பெரும்பகுதி அவரைச் சுற்றியே நிகழ்வதால் கொஞ்சம் மிஸ்ஸானாலும் அலுப்புத் தட்டிவிடும் நிலை. ஆனால் திறம்பட சமாளித்திருக்கிறார். அவருக்கு இணையாக வரும் அம்ரிதா ஓரளவிற்குக் கைகொடுக்கிறார்.
ஹாரர் படங்கள் என்றாலே இப்படித்தான் என தமிழ் உலகில் டெம்ப்ளேட்டாகிவிட்ட ஒளிப்பதிவு முறையை மாற்றி வித்தியாசம் காண்பித்திருக்கிறார் யுவா. திகில் கூட்டும் லைட்டிங்கின் வழி அவர் நிகழ்த்தும் ஒளி விளையாட்டு கவனிக்க வைக்கிறது. அதற்கு நியாயம் சேர்க்கிறது பிரிட்டோ மைக்கேலின் இசை. ராஜீவ் காந்தி சாலையின் பளபள கண்ணாடிக் கட்டடத்தையும் அதன் சூழலையும் நமக்குக் கடத்துகிறது மாதவனின் கலை இயக்கம்.

முதல் பாதி முழுக்க எதை நோக்கி நகர்கிறது எனத் தெரியாமல் நகரும் மர்மமே எதிர்பார்ப்பை ஏற்றி படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. ஆனால் முதல்பாதியின் அத்தனை பில்டப்பும் இரண்டாம் பாதியில் வீணடிக்கப்பட்டிருப்பது தான் சிக்கல்.
ஐ.டி உலகை ஓரளவிற்கு அருகிலிருந்து படம்பிடித்துக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் வினீத் வரபிரசாத். ஐ.டி வாழ்க்கை என்பது பொதுப்புத்தியில் பதிந்திருப்பதுபோல முழுக்க வண்ணங்களால் ஆனதல்ல என அதன் நிலையற்றதன்மை குறித்துப் பேச நினைத்தது சரி. ஆனால் அதற்காக, துளியும் நம்பமுடியாத கதையைப் பின்னணியில் செருகியிருப்பது அவரின் அத்தனை முயற்சிகளையும் போக்கடிக்கிறது. ‘ஜஸ்ட் லைக் தட்’ கொலைகளும் அதை நியாயப்படுத்தும் வசனங்களும் ‘இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு’ ரகம். வித்தியாசமாய் ஏதோ சொல்ல வருகிறார்கள் என நம்ப வைத்து, ‘கார்ப்பரேட்னாலே வில்லன்கள்தான்’ என வழக்கமாய்ப் பேசும் மற்றொரு சினிமாவாகிறது லிப்ட்.

மேக்கிங்கில் மெனக்கெட்ட அளவிற்கு பின்கதையிலும் மெனக்கெட்டிருந்தால் லிப்ட் அடுத்தடுத்த தளங்களுக்குப் பயணப்பட்டிருக்கும்.