கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் விஷயம்!” - லிஜோமோள் ஜோஸ்

லிஜோமோள் ஜோஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
லிஜோமோள் ஜோஸ்

படங்கள்: புதூர் சரவணன்

அதிரும் தொலைபேசி, சிணுங்கும் அலைபேசியைத் தாண்டி மேஜையில் குவிந்திருக்கும் பூங்கொத்துக்களோடு உற்சாகத்துடன் இருக்கிறார் லிஜோமோள் ஜோஸ். எல்லோருக்கும் ஏற்கெனவே அறிமுகம்தான் என்றாலும் இப்போதைய அடையாளம் `ஜெய்பீம்' செங்கேணி. உயிரைக் கொடுத்து இருளர் பெண்ணாய் வாழ்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான நல்வரவு.

‘‘எல்லாப் பாராட்டும் இயக்குநர் த.செ. ஞானவேல் சாருக்குப் போகணும். நானாக எதுவும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. செங்கேணி வாழ்க்கையைப் பத்தியெல்லாம் நினைக்கும்போது இன்னும் நாம் திரும்பிப் பார்க்காத இடம், மனிதர்கள், பிரச்னைகள் நிறையவே இருக்கும்னு தோணுது. கசப்பான உண்மைகளையும் சினிமா காட்டணும்.

“ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் விஷயம்!” - லிஜோமோள் ஜோஸ்
“ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் விஷயம்!” - லிஜோமோள் ஜோஸ்

செங்கேணிங்கிற இருளர் பொண்ணா நடிக்க பயிற்சியெல்லாம் கொடுத்தாங்க. அந்த இடத்திற்கே போயிருந்தேன். எலி பிடிக்கிறதும், விவசாயம் பார்க்கிறதும் இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். அந்த மக்களோட வாழ்க்கை நினைச்சுப்பார்க்க முடியாத அளவுக்குத் துயரமானது. நான் நடிக்கத்தான் போயிருந்தேன். ஆனா அவங்க வாழ்க்கையைப் பத்தி முழுசாத் தெரிஞ்சதும் மனசெல்லாம் கனத்துப்போச்சு” - உற்சாகமாய்ப் பேசியவரின் குரல் கம்முகிறது.

``சூர்யா என்ன சொன்னார்?’’

‘‘அவரும் நானும் சம்பந்தப்பட்ட கோர்ட் சீனில் நடிக்கும்போதுதான் அவரைப் பார்த்தேன். ரொம்ப அமைதியா இருந்தார். அவர்மீது எனக்கு மரியாதை அதிகரிச்சது. படம் முடிஞ்சு ரஷ் பார்க்கும்போதே அவருக்குப் படம் பிடிச்சுப்போச்சு. நான் செங்கேணி கேரக்டரில் இவ்ளோ நல்லா நடிச்சிருக்கேன்னா அதுக்கு சூர்யா சாரும் ஞானவேல் சாரும்தான் காரணம். ஜோதிகா மேடம் சூர்யா சாரிடம், ‘உங்களை விட லிஜோமோள் நன்றாக நடித்திருக்கிறார்’ எனச் சொன்னதாக சூர்யா சாரே என்னிடம் சொன்னார். எனக்கு அது ரொம்பவும் சர்ப்ரைஸ்ஸாக இருந்தது.’’

``ஒரு ஸ்கிரிப்ட்டை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’’

``இயல்பான ஒரு கதை கேட்கும்போதே பிடிச்சுப்போகும். நான் குறைவான படங்கள்தான் நடிச்சிருக்கேன். சில படங்களின் கதை கேட்டு நடிக்க மறுத்திருக்கேன். அதைப்பற்றிப் பெரிசா கவலைப்பட்டதில்லை. ‘ஜெய்பீம்’ கதை கேட்கும்போதே அந்தக் கதை, என் பாத்திரத்துக்கு இருந்த முக்கியத்துவம் பிடிச்சுப்போச்சு. நடிக்க நடிக்க ஒரு முக்கியமான படத்தில் நடிக்கிறோம்கிற நம்பிக்கை அதிகமாச்சு.”

“ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் விஷயம்!” - லிஜோமோள் ஜோஸ்
“ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் விஷயம்!” - லிஜோமோள் ஜோஸ்

``ஹீரோயின் என்றால் கிளாமராகவும் நடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்களே?’’

‘‘எனக்கு அது அவசியமில்லை. என்னளவில் நான் கிரியேட்டிவாக சினிமாவில் ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். இப்படி இருப்பதில்தான் திருப்தி. நான் ரொம்ப விளையாட்டாக சினிமாவில் வந்து சேர்ந்த பொண்ணு. ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துக்குப் புதுமுகம் வேணும்னு ஒரு விளம்பரம் பார்த்தேன். சும்மா எனது புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டாங்க. எனக்கு அவ்வளவு பயமாக இருந்தது. ஆடிஷனுக்கு வந்து, ‘சும்மா அனுப்பிச்சிட்டேன், எனக்கு சினிமா நடிப்புன்னா என்னன்னு தெரியாது’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ‘அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. லைஃப்ல நடக்கிற விஷயம்தான். நாங்க பார்த்துக்கிறோம்’னு மறுபடியும் கூப்பிட்டாங்க. அப்படித்தான் நடிக்க வந்தேன்.

அவங்க பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து, படமும் ஹிட்டாகி, நாலைந்து படங்கள் சேர்ந்த மாதிரி நல்லா வந்துடுச்சு. நானும் சின்னதா ஒரு நல்ல இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன். அப்புறம் சசி சார் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’யில் நடிக்கக் கூப்பிட்டார். ஹீரோவுக்கு அக்கா கேரக்டர்னு நான் யோசிக்கலை. என்னால் எண்ணிக்கைக்காக அதிக படங்களில் நடிக்க முடியாது. நல்ல சினிமாக்களில் நடிக்க ஆசைப்படுறேன். ‘ஜெய்பீம்’ படத்துக்குக் கிடைத்த பாராட்டுக்கள் எனக்கு மகிழ்ச்சியாவும் இருக்கு. இன்னும் கவனமா கதை கேட்கணும், என் கேரக்டரைத் தேர்ந்தெடுக்கணும்கிற நிதானத்தையும் உருவாக்கியிருக்கு!”