Published:Updated:

சந்தானம் மட்டுமில்ல... ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் பரத் வரை இந்த லிஸ்ட்ல இருக்காங்க!

ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவந்து மோதிக் கொள்வதென்பது, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு முறைதான் நடந்துள்ளது... அது எந்த நடிகரின் படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமா

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதைக் கடந்த தசாப்தத்தில் பார்த்தோம். ஆனால், ஒரே நடிகர் நாயகனாக நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவந்து மோதிக் கொள்வதென்பது, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே ஒரு முறைதான் நடந்துள்ளது. வருகின்ற ஜனவரி 31-ம் தேதியன்று நடிகர் சந்தானம் நடித்த 'டாகல்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என இரு படங்களின் தயாரிப்பு நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்ற நட்சத்திர நடிகர்கள் கதாநாயகனாக நடித்து ஒரே நாளில் வெளியான தமிழ்ப் படங்களை இங்கே பார்க்கலாம்...

1
தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும் (14 ஏப்ரல், 1979)

கமல் மற்றும் ரஜினி :

இன்றளவும் தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்ற பெருமையைத் தங்கள் வசம் வைத்திருக்கும் நடிகர்கள் என்றால் அது கமல் மற்றும் ரஜினிதான். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படமும் தியாகராஜன் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்த 'தாயில்லாமல் நானில்லை' படமும் 1979-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.

இந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தது கூடுதல் சிறப்பு!
2
தழுவாத கைகள், தர்ம தேவதை (நவம்பர் 1, 1986)

விஜயகாந்த் :

1980-களின் இரண்டாம் பாதியில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர் விஜயகாந்த். அந்தக் காலகட்டத்தில் தொட்டதெல்லாம் வெற்றி என்றிருந்த காரணத்தால் இரண்டு முறை இவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி சாதனை படைத்துள்ளன. 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, விஜயகாந்துக்கு, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 'தழுவாத கைகள்' படமும் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'தர்ம தேவதை' படமும் வெளியாகின. அதேபோல விஜயகாந்த் நடிப்பில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'ராஜநடை' படமும் கே.ரங்கராஜ் இயக்கத்தில் 'தர்மம் வெல்லும்' படமும் 1989-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வெளியாகின. 1987-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு விளையாட்டு' மற்றும் 'உழவன் மகன்' ஆகிய இரண்டு படங்களும் ஒரு நாள் இடைவெளியில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3
வாத்தியார் வீட்டுப் பிள்ளை, திராவிடன் (28 அக்டோபர், 1989)

சத்யராஜ் :

வில்லனாகத் தன் திரைப் பயணத்தைத் தொடங்கிய பின்னர் கதாநாயகனாகப் பல படங்களில் நடித்த சத்யராஜ், தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகர். பி.வாசு இயக்கத்தில் சத்யராஜின் 100-வது படமாக வெளியான 'வாத்தியார் வீட்டுப் பிள்ளை' படமும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான 'திராவிடன்' படமும் 1989-ம் ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி அன்று வெளியாகின.

அக்டோபர் 28, 1989
இந்த நாளில், சத்யராஜ், விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் தலா இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன.
4
காவலுக்குக் கெட்டிக்காரன், நல்ல காலம் பொறந்தாச்சு (14 ஜனவரி, 1990)

பிரபு :

நடிகர் திலகத்தின் மகன் என்பது ஒரு பக்கமிருந்தாலும் வெள்ளை நிறம், கொலு கொலு கன்னம் என 90-களில் 'கன்னி ராசி'காரனாகத் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்தவர் பிரபு. இவர், கலைஞர் கதை வசனத்தில், சந்தான பாரதி இயக்கத்தில் நடித்த 'காவலுக்குக் கெட்டிக்காரன்' படமும் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் நடித்த 'நல்ல காலம் பொறந்தாச்சு' படமும் ஜனவரி 14, 1990 அன்று வெளியாகின.

பிரபு நடித்த இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றன.
5

முரளி :

தனது உருக்கமான நடிப்பால், 'இதயம்' படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர் முரளி. ஏப்ரல் 14, 1990 அன்று இவர் நடிப்பில், இயக்குநர் விக்ரமனின் முதல் படமான 'புது வசந்தம்' வெளியானது. அதே நாளில், நேதாஜி இயக்கத்தில் முரளி நடித்த 'சிலம்பு' படமும் வெளியானது.

10 ஆயிரத்துக்கு வாங்கிய எம்.ஜி.ஆர், திரைக்கதை எழுத மகேந்திரன்!-`பொன்னியின் செல்வன்' பின்னணிக் கதைகள்
6
துருவ நட்சத்திரம், கற்பகம் வந்தாச்சு (15 அக்டோபர், 1993)

அர்ஜுன் :

ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்து 90-ஸ் கிட்ஸைக் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் நடித்து சாய் மோகன் இயக்கிய 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்' படமும் மாதங்கன் இயக்கி அர்ஜுன் நடித்த 'தங்கைக்கு ஒரு தாலாட்டு' படமும் 1990-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் வெளியானது. அதே போல ராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'துருவ நட்சத்திரம்' படமும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'கற்பகம் வந்தாச்சு' படமும் அக்டோபர் 15, 1993 அன்று வெளியானது.

7
புதிய சரித்திரம், வாழ்ந்து காட்டுவோம் (14 டிசம்பர், 1990)

ராம்கி :

'நடிப்புத் தென்றல்' ராம்கி
அட்வென்ட்சர், ஹாரர், காமெடி, லவ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என சினிமாவிலிருக்கும் அனைத்து ஜானர்களிலும் நடித்த ஒரே கதாநாயகன் ராம்கி எனலாம்.

ராம்கி நடிப்பில் முருகானந்தம் இயக்கத்தில் வெளியான 'புதிய சரித்திரம்' படமும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ராம்கி நடித்த 'வாழ்ந்து காட்டுவோம்' படமும் 1990-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அன்று வெளியாகின.

8
அரண்மனை காவலன், கேப்டன் (25 அக்டோபர், 1994)

சரத்குமார் :

வில்லனாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சரத்குமார், `நாட்டாமை', `சூர்ய வம்சம்', `நட்புக்காக' போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிப்பில் செல்வ விநாயகம் இயக்கிய 'அரண்மனை காவலன்' படம் 1994-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியானது. அதே நாளில், கோடி ராமகிருஷ்ணா இயக்கி சரத்குமார் கதாநாயகனாக நடித்த 'கேப்டன்' படமும் வெளியானது.

9
உள்ளத்தை அள்ளித்தா, கிழக்கு முகம் (15 ஜனவரி, 1996)

கார்த்திக் :

நவரச நாயகன், காதல் இளவரசன் எனப் பல செல்லப் பெயர்களோடு கூலாக கோலிவுட்டில் வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் ஜனவரி 15, 1996-ம் ஆண்டு வெளியானது. அதே நாளில், அண்ணாதுரை இயக்கத்தில் கார்த்திக் நடித்த 'கிழக்கு முகம்' படமும் வெளியானது.

10
சென்னைக் காதல், வெயில் (டிசம்பர் 8, 2006)

பரத்

'பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி `வெயில்', `காதல்' ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் பரத். சில காலம் ஃபார்ம் அவுட்டில் இருந்தவர், மீண்டும் 'காளிதாஸ்' படத்தின் மூலம் கவனம் ஈர்க்க ஆரம்பித்திருக்கிறார். இவர், வசந்த பாலன் இயக்கத்தில் நடித்த 'வெயில்' திரைப்படம் 2006-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வெளியானது. அதே நாளில், விக்ரமன் இயக்கத்தில் பரத் நடித்த 'சென்னைக் காதல்' படமும் வெளியானது

11
சந்தானம் படங்கள்

சந்தானம் :

காமெடியனாக கதாநாயகர்களைக் கலாய்த்து வந்தவர், 2014-ம் ஆண்டு முதல் தானே கதாநாயகனாக மாறி சேர்ந்து நடிக்கும் கமெடியன்களைக் கலாய்த்து அப்ளாஸ்களை அள்ளி வருகிறார் சந்தானம். இவரின் நடிப்பில், இயக்குநர் விஜயானந்த் இயக்கத்தில் 'டகால்டி' படம் வருகிற 31-ம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில், சந்தானம் நடித்து ஆனந்த் பால்கி இயக்கிய 'சர்வர் சுந்தரம்' படமும் வெளியாகுமென அந்தப் படக்குழு அறிவித்துள்ளது.

இரு படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு படக்குழுவும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எந்தப் பிரச்னையும் இல்லாமல் இரண்டு படங்களும் ஜனவரி 31-ம் தேதி அன்று வெளியானால் இந்தப் பட்டியலில் சந்தனாத்துக்கும் இடம் கிடைக்கும்.

இந்தப் பட்டியலில் ஏதாவது விடுபட்டிருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள்!
பின் செல்ல