Published:Updated:

மணிரத்னம் டு பா.இரஞ்சித்... யார் யார் என்னென்ன ஆந்தாலஜி கதைகளை இயக்குகிறார்கள்?! #OTT

OTT  தளங்கள்!
OTT தளங்கள்!

தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் ஆந்தாலஜிகள்!

தியேட்டர்கள் திறப்பது குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு எடுக்கப்படும், செப்டம்பர் மாதம் தீர்வு கிடைக்கும் என ஒவ்வொரு மாதமும் நகர்ந்துவிட்டது. அடுத்து இப்போது அக்டோபரிலும் தியேட்டர்கள் திறப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், மால்கள் எல்லாம் திறந்து வழக்கம் போல மக்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர். 'இத்தனை மாதங்கள் கழித்து மால் திறந்திருக்கிறார்கள், வழக்கம் போல மக்கள் வருகிறார்களா என்பதை பார்க்கவே ஒரு பெரிய கூட்டம் தினமும் மால் பக்கம் வருகிறது' என்கிறார்கள். தியேட்டர்கள் இருக்கும் ஃப்ளோரைத் தவிர, எல்லாம் சகஜமாகத்தான் இருக்கிறது. அந்தக் கதவுகளையும் திறந்துவிட்டால் நிச்சயம் ஹவுஸ்ஃபுல் ஆகும் என்றே தோன்றுகிறது.

``ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட் அடிக்க அந்த இன்ஸ்பிரேஷன்தான் காரணம்!''- ஜேம்ஸ் வசந்தன்

முறையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு நவம்பரில் ஒருவேளை தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதில் திரையிடுவதற்கு என்ன படம் தயாராக இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி. பூனைக்கு யார் மணி கட்டுவது என எல்லா தயாரிப்பாளர்களும், 'மற்ற படங்கள் தியேட்டரில் வெளியிடட்டும். அதனுடைய ரிசல்டை பார்த்துவிட்டு தியேட்டரா ஓடிடியா என முடிவு செய்யலாம்' எனக் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே சில பஞ்சாயத்துகளும் பேசப்பட்டுவருகிறது. அதனால், 'தியேட்டர்கள் திறக்கும்போது திறக்கட்டும், நாம் நமது வேலைகளைப் பார்ப்போம்' என பல இயக்குநர்கள் ஓடிடி களத்தில் இறங்கிவிட்டனர்.

தியேட்டர்கள்
தியேட்டர்கள்

தமிழ் சினிமாவில் பல ஆந்தாலஜிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆணவக் கொலைகளை மையமாக வைத்து வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கியிருக்கும் ஆவணப்படம் அக்டோபர் ரிலீஸுக்குத் தயாராகயிருக்கிறது. இது நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'குட்டி லவ் ஸ்டோரி' எனும் ஒரு ஆந்தாலஜி உருவாகி வருகிறது. இதை கெளதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இயக்குகின்றனர். காதல்தான் கான்செப்ட். ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இன்னொரு ஆந்தாலஜியை கெளதம் மேனன், பா.இரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன், வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கி இருக்கின்றனர். இந்த ஆந்தாலஜி கதைகள் த்ரில்லர் ஜானரில் உருவாகின்றன. கெளதம் மேனன் கதையில் அர்ஜுன் தாஸ் - ப்ரக்யா மார்டின், பா.இரஞ்சித் கதையில் தினேஷ், குரு சோமசுந்தரம், வெங்கட் பிரபு கதையில் பிரசன்னா - அமலா பால், ராஜேஷ் கதையில் நடராஜ் - பிரியா பவானி ஷங்கர், சிம்புதேவன் கதையில் நாசர் - தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர்.

இவை தவிர, இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் `நவரசா' என்ற பெயரில் ஆந்தாலஜி கதைகள் உருவாக இருக்கிறது. நவரசங்கள்தான் மையப்புள்ளி. ஒன்பது ரசங்களையும் ஒன்பது இயக்குநர்கள் இயக்குகிறார்கள். கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், `180' படத்தை இயக்கிய ஜெயேந்திரா, 'சில்லுக்கருப்பட்டி' படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், நடிகர்கள் அரவிந்தசாமி, சித்தார்த் ஆகியோர் இயக்குகிறார்கள். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'சீமராஜா' படங்களை இயக்கிய பொன்ராமும் இதில் ஒரு கதையை இயக்குகிறார். அரவிந்தசாமி, சித்தார்த் ஆகியோர் இதில் முதல்முறையாக இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இதில் ஒரு கதையை இயக்குநர் மணிரத்னமும் இயக்குகிறார்.

இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம்

பிஜோய் நம்பியார் கதையில் விஜய் சேதுபதி, ஜெயேந்திரா கதையில் சூர்யா, கார்த்திக் நரேன் கதையில் அரவிந்த்சாமி என முன்னணி நடிகர்கள் பலரும் இதில் இருக்கிறார்கள். இதில் நடிப்பவர்களின் பட்டியலில் துல்கர் சல்மான், பார்வதி ஆகியோரின் பெயர்களும் இருக்கின்றன. மணிரத்னம் இந்த ப்ராஜெக்ட்டின் கேப்டன். அவர் வழிகாட்டுதலில்தான் எல்லாம் நடக்கிறது என்கிறார்கள். இதில் வரும் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஃபெப்சி அமைப்பிற்குக் கொடுக்கவிருக்கிறார்களாம். அதற்காகவே இந்த ப்ராஜெக்ட் திட்டமிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

அடுத்த கட்டுரைக்கு