Published:Updated:

நீதிமன்றத்தின் கண்டிப்பு, அப்பாவோடு சண்டை, மத அடையாளம் - விஜய்யை வட்டமடிக்கும் சர்ச்சைகள்!

'மாஸ்டர்' விஜய்
'மாஸ்டர்' விஜய்

‘’நின்னா தேரு, நடந்தா ஊர்வலம், கண்ணசைச்சா கட்டளை’’ என ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் விஜய்யைப் பற்றி ஒரு வசனம் வரும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரீல் வசனம் ரியலாகி வருகிறது.

‘நின்னா தலைப்புச் செய்தி, உட்கார்ந்தா டிஆர்பி, நடந்தா ட்ரெண்டிங்’ என விஜய்தான் இப்போது தமிழ்நாட்டின் வைரல் மனிதன். கொரோனா பற்றிய செய்திகளை விட விஜய் பற்றிய செய்திகள் தான் தமிழர்களுக்கு மின்னல் வேகத்தில் போய் சேருகிறது. விஜய்யும், அப்டேட் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஓயாமல் கன்டென்ட் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.

‘காவலன்’ முதல் ‘தலைவா’ வரை பட ரிலீஸின் போதெல்லாம் சர்ச்சைகளை சந்தித்த விஜய் இப்போது சர்ச்சைகளில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறார். படத்தைத் தாண்டி அவருடைய பர்சனல் விஷயங்களும் சர்ச்சையாக ஆரம்பித்திருக்கின்றன. அதில் சமீபத்திய சம்பவம்தான் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம். கடந்த 4 ஆண்டுகளில் விஜய் சந்தித்த சர்ச்சைகள் என்ன, அதற்கான எதிர்வினைகள் என்னென்ன?!

‘மெர்சல்’ படத்தை ஹிட் ஆக்கிய தமிழிசை, ஹெச்.ராஜா!

மெர்சல்
மெர்சல்

2017 தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ரிலீஸ் ஆனது . ‘’ரசிகர்கள் பெரிதாக ரசிக்கவில்லை’’, ‘’படத்தின் நீளம் அதிகம்’’, ‘’ ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி’’ என ரிலீஸான அன்றைய தினம் நெகட்டிவ் விமர்சனங்களே வர படத்துக்கான பரபரப்பே அமுங்கிபோனது. அட்லி இடிந்துபோய் உட்கார்ந்திருந்த அந்த நேரம்தான் அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை பரபர பிரஸ்மீட்டை கூட்டினார். ‘மெர்சல்’ படத்தில் மோடி அரசின் ஜிஎஸ்டி-யை விமர்சித்து விட்டார்கள் என தமிழிசை சொல்ல, அடுத்து ஹெச்.ராஜா தன் பங்குக்கு ‘ஜோசப் விஜய்’ என மதச்சாயம் பூச ‘மெர்சல்’ படத்துக்கு உலகளாவிய பப்ளிசிட்டி கிடைத்தது. சுமாராகப் போயிருக்க வேண்டிய ‘மெர்சல்’ மிகப்பெரிய ஹிட் ஆனது. மத அடையாளத்தை மறைப்பார் விஜய் என எல்லோரும் எதிர்பார்க்க படம் ரிலீஸாகி ஒருவார கலெக்‌ஷன் முடிந்ததும் ‘ஜோசப் விஜய்’ சிவப்பு வண்ணத்தில் தன்னுடைய முழுப் பெயரையும் போல்ட் செய்து ‘மெர்சல்’ படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்தவர்களுக்கு நன்றி’’ என அறிக்கை வெளியிட்டு இன்னும் தன்னுடைய மாஸை அதிகப்படுத்திக் கொண்டார்.

இலவச சர்ச்சையில் ‘சர்கார்’!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ படம் 2018-ல் வெளியானது. ‘மெர்சல்’ படத்துக்கு பா.ஜ.க பப்ளிசிட்டி தந்ததால், இந்த முறை ‘ஆட்டம் எங்களுடையது’ என களத்தில் இறங்கியது அ.தி.மு.க. விஜய் பட போஸ்டர்களைக் கிழிப்பது, ரசிகர்களை மிரட்டுவது என ஆளும் கட்சியான அ.தி.மு.க-வே சில சம்பவங்கள் செய்து பார்த்தது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இன்னொரு பக்கம், ‘’போலீஸ் என்னை கைது செய்யத்தேடுகிறது’’ என்று ட்வீட் தட்டி பப்ளிசிட்டியைக் கூட்ட முயற்சி செய்தார். ஆனால், இவ்வளவு செய்தும் ‘சர்கார்’ படத்தின் மேக்கிங் மிகவும் சுமாராக இருக்க இந்தச் சர்ச்சைகள் படத்துக்கு சன் பிக்சர்ஸ் எதிர்பார்த்த வெற்றியை தேடித் தரவில்லை. ஆனால், விஜய்யின் கிராஃபோ ‘ஆளும்கட்சியையே விமர்சிச்சுட்டார்பா’ என எகிற வைத்தது.

விஜய் செல்ஃபி
விஜய் செல்ஃபி
Twitter/@ActorVijay

2020 ‘மாஸ்டர்’ ரெய்டு!

2020 பிப்ரவரியில் ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங்கிற்காக நெய்வேலியில் இருந்த விஜய்யை முற்றுகையிட்டது வருமான வரித்துறை. ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அலுவலகம், விஜய்யின் நீலாங்கரை வீடு, அலுவலகம், ‘பிகில்’ பட ஃபைனான்சியர் வீடு எனப் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டது. நெய்வேலியில் இருந்து விஜய் சென்னை கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், இந்த முறையும் விஜய்க்கு இலவசமாக விளம்பரமே கிடைத்தது. ‘’விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணமோ, நகைகளோ கைப்பற்றப்படவில்லை’’ என வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட நெய்வேலியில் பேருந்து மேல் ஏறி நின்று, தனக்காகக் காத்திருந்த ரசிகர்களை இணைத்து செல்ஃபி எடுத்தார் விஜய். அந்த ஆண்டு ட்விட்டரில் அதிக லைக்ஸ் குவித்த வைரல் படமானது அந்த செல்ஃபி.

அப்பாவோடு மோதல்!

குடும்ப கருத்து மோதல் யூடியூப் கன்டென்ட் ஆனது. 2021 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ எனக் கட்சி தொடங்கி அதைப் பதிவு செய்ய முயற்சிகள் எடுக்க அதிர்ந்து போனார் விஜய். ‘’என் தந்தை அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என ஊடகங்கள் மூலம் செய்தி அறிந்தேன். அந்தக் கட்சிக்கும் எனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என கையெழுத்தில்லாமல், அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இல்லாமல் ஒரு அறிக்கை விஜய் தரப்பில் இருந்து வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதும் எஸ்.ஏ.சந்திரசேகர் எல்லா மீடியாக்களுக்கும் எமோஷனல் பேட்டி தட்ட, ‘’விஜய்யும்- எஸ்.ஏ.சி-யும் பேசியே சில ஆண்டுகள் ஆகின்றன’’ என ஷோபா சந்திரசேகர் சொல்ல குடும்ப சண்டை கவர் ஸ்டோரிகளானது.

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்
வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்

சைக்கிளில் வாக்களிக்க வந்த விஜய்!

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சைக்கிளில் வாக்களிக்க வீட்டிலிருந்து கிளம்பிய விஜய், வரும் வழியில் ஓர் ஊரையே கூட்டிக்கொண்டு வர நேஷனல் மீடியாக்கள் அலர்ட் ஆகின. வழக்கமாக சினிமாவில் மட்டுமே குறியீடு கண்டுபிடித்துகொண்டிருந்த சமூக வலைதள சகோதரர்கள் இந்த முறை சைக்கிளில் குறியீடு கண்டுபிடித்தார்கள். ‘கறுப்பு சிவப்பு வண்ண சைக்கிளில் வந்ததன் மூலம் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்’, 'பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிளில் வந்து நூதன முறையில் போராட்டம்' என ஆளுக்கு ஒரு பக்கம் ஊத, தன்னுடைய பிஆர்ஓ-விடம் சொல்லி ஒரு அறிக்கை வெளியிட்டார் விஜய். ‘’நீலாங்கரை வாக்குச்சாவடிக்குச் செல்லும் வழியில் இடநெருக்கடி அதிகம் இருப்பதால்தான் சைக்கிளில் வந்தேன். மற்றபடி இதில் வேறு எந்த குறியீடும் இல்லை’’ என்று சொல்லி பஞ்சாயத்தை முடித்துவிட்டார் விஜய்.

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்!

விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ்
விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ்

2012-ல் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்தான் சமீபத்திய பரபரப்பு. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி வரிகள் உள்பட அனைத்து வரிகளையும் கட்டி வாங்கும் காருக்கு நுழைவுவரி கூடாது என எல்லா ரோல்ஸ் ராய்ஸ் வாடிக்கையாளர்களையும் போலவே விஜய்யும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்புதான் நேற்று வெளியாகி இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது. விஜய்யைப் பற்றியும், நடிகர்களைப் பற்றியும் நீதிபதி வெளியிட்ட கருத்துகள் விவாதத்துக்கு உள்ளாகி வருகின்றன. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அத்தனை டீடெய்ல்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன.

ஆனால், இதுபற்றியெல்லாம் எந்தவிதமான பதற்றமும் இன்றி இன்று காலையும் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் எதிரே நடக்கும் ‘பீஸ்ட்’ ஷூட்டிங்கிற்கு ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரில் போய் இறங்கியிருக்கிறார் விஜய்!
அடுத்த கட்டுரைக்கு