Published:Updated:

நதியா டு ஜோதிகா... ஹீரோயின்கள் கம்பேக் கொடுக்க காரணம் என்ன?!

Jyothika
Jyothika

தமிழ் சினிமாவில் 35-45 வயது வரையிலான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க மிகப்பெரிய அளவில் நடிகைகளுக்கான தேவை இருக்கிறது.

சினிமாவில் முன்னணி கலைஞர்களாக இருந்தவர்களுக்கு, `கம்பேக் மூவி' என்பது அவர்களுடைய கரியரில் நிச்சயம் முக்கியமானது. அப்படி முன்னணியில் இருந்து கம்பேக் கொடுத்த ஹீரோயின்கள் லிஸ்ட் இது!

சிம்ரன்

Simran
Simran

நடிப்பு, நடனம், படங்கள் தேர்வு என 90'ஸ் களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமர்ஷியல் ஹீரோயினாக மட்டுமல்லாமல் தன் திறமைக்குத் தீனி போடும் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்ததும் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்ததற்கு முக்கியக் காரணம். `விஐபி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்தடுத்து `துள்ளாத மனமும் துள்ளும்', `ப்ரியமானவளே', `பம்மல் கே சம்பந்தம்', `கன்னத்தில் முத்தமிட்டால்' என இவர் நடித்த பெரும்பாலான படங்கள் செம ஹிட். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். பிறகு 2008-ல் `சேவல்' படம் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனால் `வாரணம் ஆயிரம்' படமும், அதில் அவர் நடித்த மாலினி கேரக்டரும்தான் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. `சீமராஜா', `பேட்ட' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் மாதவனுடன் `நம்பி விளைவு, விக்ரமுடன் `துருவ நட்சத்திரம்' எனத் தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் சிம்ரன் செம பிஸி!

ஜோதிகா

Jyothika
Jyothika

துறுதுறு நடிப்பு, க்யூட் ரியாக்‌ஷன்கள் எனத் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைக் கொண்டிருந்தவர் ஜோதிகா. காதல், கமர்ஷியல், காமெடி என ஆல்ரவுண்டராக இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். `குஷி', `வாலி', `டும்டும்டும்', `சந்திரமுகி' எனத் தான் நடித்த படங்களின் கதைகளிலும் தனக்கான கதாபாத்திரங்களின் தேர்விலும் வெரைட்டி காட்டினார் ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து சின்ன ப்ரேக் எடுத்தார். பிறகு `ஹவ் ஓல்ட் ஆர் யூ?' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான `36 வயதினிலே' படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தவரை `வாடி ராசாத்தி' என வாரியணைத்துக் கொண்டது தமிழ் சினிமா. `36 வயதினிலே', `காற்றின் மொழி', `ராட்சசி' என இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா.

நதியா

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி நதியா. `பூவே பூச்சுடவா' படம் மூலம் அறிமுகமானவர் ரஜினி, பிரபு என 80-களில் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் பல ஹிட் படங்களைத் தந்தார்.

Jayam Ravi and nadhiya
Jayam Ravi and nadhiya

முன்னணியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகியவர் பத்து வருடங்களுக்குப் பிறகு `எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி' படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக ரீஎன்ட்ரி கொடுத்தார். படம் வெளியான சமயத்தில் இந்த ஜாலியான அம்மா-மகன் கூட்டணிக்குப் பல லட்சம் ஹார்ட்டீன் விழுந்தது. அதற்குப்பிறகு `தாமிரபரணி', `சண்டை' என அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார் நதியா.

மஞ்சு வாரியர்

Manju Warrier
Manju Warrier

மலையாளத்தில் 90-களில் லீடிங் லேடி மஞ்சு வாரியர். தமிழ்ப்பெண். திருமணம், விவாகரத்து என தனது பர்சனல் பக்கங்களிலிருந்து மீண்டுவந்தவர், 15 வருடங்களுக்குப் பிறகு `ஹவ் ஓல்ட் ஆர் யூ?' மலையாள படத்தின் மூலம் தனது கம்பேக்கை கொடுத்தார். `வில்லன்', `லூசிஃபர்' என மீண்டும் தனது இடத்தை தக்கவைத்திருப்பவர், இந்த வருடம் `அசுரன்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

நதியா டு ஜோதிகா வரை அனைவருமே திறமையான நடிகைகள் என்பது ஒரு பக்கம் இருக்க, தமிழ் சினிமாவில் 35-45 வயது வரையிலான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க மிகப்பெரிய அளவில் நடிகைகளுக்கான தேவை இருக்கிறது. இன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களில் அதிகபட்சமானோர் இந்த 35-45 வயதைச் சேர்ந்தவர்கள்தான். அதனால்தான் இந்த வயது கேரக்டர்களில் முன்னணி நடிகைகள் நடிக்கும்போது பெரிய வரவேற்பு இருக்கிறது. கமர்ஷியலாகவும் படங்கள் ஓடுகின்றன. அதனால்தான் கம்பேக் கொடுக்கிறார்கள் முன்னாள் முன்னணி ஹீரோயின்கள். அவர்களைத் தமிழ் சினிமா ரசிகர்களும் வெற்றியோடு வரவேற்கிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு