Published:Updated:

பொன்னியின் செல்வன், நரசிம்ம ரெட்டி, மஹாவீர் கர்ணா... இந்திய சினிமாவில் வரிசைகட்டும் வரலாற்றுப் படங்கள்!

'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு, நிறைய வரலாற்றுப் படங்கள் வரவிருக்கின்றன. அந்த வகையில், எதிர்பார்ப்பில் உள்ள வரலாற்றுப் படங்களின் பட்டியல் இது.

ஒரு ஜானர் படம் ஹிட்டானால், அதைத் தொடர்ந்து அதே ஜானரில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகும். அந்த வகையில், 'பாகுபலி', அதைத் தொடர்ந்து வெளியான 'பாகுபலி 2' படங்கள் அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில், பல பீரியட் ஜானர் படங்கள் வரிசைகட்டிவருகின்றன. இதோ, எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்றுப் படங்களின் பட்டியல்.

1
RRR

RRR:

'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து, ராஜமெளலி இயக்கும் அடுத்த படமும் வரலாற்றுப் பின்னணியில்தான் நடக்கிறது. 1920-களில் ஆங்கிலேயர்களையும் பின், நிஜாம்களையும் எதிர்த்துப் போராடிய அல்லூரி சீதராமா, கோமரம் பீமா ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகிரும் இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். தவிர, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூலை ஹீரோயினே இல்லாமல் நடத்தி முடித்துவிட்டனர்.

RRR

இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடியாக எட்கர் டெய்ஸி ஜோன்ஸ் எனும் வெளிநாட்டு நடிகையை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் படத்திலிருந்து விலகினார். பிறகு, வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அகமதாபாத்தில் தொடங்கிய நிலையில், அதில் ஆலியா பட் இணைந்திருக்கிறார். இரண்டு ஹீரோக்களின் இன்ட்ரோ சீனுக்கு மட்டும் 45 கோடி வரை செலவழித்துள்ளனராம். கதை, வசனம் - விஜேந்திர பிரசாத், இசை - கீரவாணி, ஒளிப்பதிவு - செந்தில் குமார் கூட்டணியில் ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை ராஜமெளலி படங்களுக்கு படத்தொகுப்பு செய்த வெங்கடேஸ்வர ராவுக்குப் பதிலாக, ஶ்ரீகர் பிரசாத் இந்தப் பிரமாண்ட கூட்டணியில் இணைந்திருக்கிறார். இப்படத்தை ஜூலை 2020-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

2
மரக்கார் : அரபிக்கடலின்டே சிம்ஹம்

மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம்

'சில சமயங்களில்' படத்திற்குப் பிறகு, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் படம், 'மரக்கார் : அரபிக்கடலின்டே சிம்ஹம்'. மிகப்பெரிய பொருள்செலவில் பிரமாண்டமாகத் தயாராகிவரும் இந்தப் படம், 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடலோரக் காவலர்களான குஞ்சாலி மரைக்காயர்களைப் பற்றியது. அதில் நான்காம் குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் நடிக்கிறார். அவரின் சிறு வயது கேரக்டரில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். மோகன்லாலுக்கு வில்லனாக அசோக் செல்வன் நடிக்கிறார். தவிர, மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரு, ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள சினிமா வரலாற்றில் 100 கோடி செலவில் உருவாகும் முதல் படம் இது. தவிர, அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் வெளிவர இருக்கிறது.

3
சைரா நரசிம்ம ரெட்டி

சைரா நரசிம்ம ரெட்டி:

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான், இந்தப் படம். சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பொருள் செலவில் தயாராகிவருகிறது. அவரது மகனும், நடிகருமான ராம் சரண் தயாரித்துவருகிறார். 'ரேஸுகுர்ராம்', 'துருவா' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் என அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சைரா நரசிம்ம ரெட்டி

ஒவ்வொரு நடிகர்களின் பிறந்த நாளன்று இந்தப் படத்தில் அவர்களின் லுக் என்ன என்பதை வெளியிட்டுவந்தது படக்குழு. கடந்த வருடம் சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22-ம் தேதி படத்தின் டீஸர் வெளிவந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் 22-ம் தேதி படத்தின் டிரெய்லர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் எனப் பிரமாண்டமாக உருவாகிவருகிறது, 'சைரா நரசிம்ம ரெட்டி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகிவரும் இப்படம், அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிரஞ்சீவி படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனதால், இந்தப் படத்திற்கு மெகா ஸ்டார் ஃபேன்ஸ் வெயிட்டிங்!

4
மாமாங்கம்

மாமாங்கம்:

கேரளாவில், திருவாயா என்ற இடத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் விழா, 'மாமாங்கம்'. அந்த விழாவின்போது பல்வேறு மக்கள் வணிகத்திற்காகத் தங்கள் பொருள்களை விற்க இங்கே வருவர். 15-ம் நூற்றாண்டில், இந்த மாமாங்கம் திருவிழாவை வள்ளுவ நாட்டின் அரசனாக இருந்த வள்ளுவக்கோ நடத்தி வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில், குறுநில மன்னன் சாமூதிரி என்பவன் தன் நாட்டின் அருகில் உள்ள பகுதிகளில் சண்டையிட்டு அதை அபகரித்துக்கொகிறான். வள்ளுவக்கோவுக்கு கொடுக்கும் மரியாதை தனக்கு இல்லை எனக் கோபம்கொண்ட சாமூதிரி, அந்த நாட்டின்மீது படையெடுத்து, அதனையும் தன்வசப்படுத்திக்கொள்கிறான்.

மாமாங்கம்

வள்ளுவக்கோ வம்சாவளியில் சேனாதிபதிகளாக இருந்த நான்கு குடும்பத்தினர் மட்டும் சாமூதிரியை மன்னனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அடுத்த மாமாங்கம் விழாவை சாமூதிரி நடத்தத் திட்டமிடும்போது, அதனை வள்ளூவக்கோ வம்சத்தினர் தடுக்கின்றனர். அப்போது, இருவருக்கும் நடக்கும் போரில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதுதான் ‘மாமாங்கம்’ படத்தின் கதை. இதில் மம்மூட்டி, ப்ரச்சி டெஹ்லான், மாளவிகா மேனன், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிக்கின்றனர். போர் காட்சிகளுக்காக 18 ஏக்கரில் செட் அமைத்துப் படமாக்கியுள்ளனர். இப்படத்தை பத்மகுமார் என்பவர் இயக்குகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5
மஹாவீர் கர்ணா

மஹாவீர் கர்ணா:

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கர்ணனுடைய வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றும், அதில் கர்ணனாக விக்ரம் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வந்தபோதே ரசிகர்களுக்குக் கியூரியாசிட்டி அதிகரித்தது.`என்னுநின்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நியூயார்க்கைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இதில் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. படத்திற்கான போட்டோஷூட், புரோமோ ஷூட் ஆகியவை ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டது. படத்தில் மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. 'மஹாவீர் கர்ணா' படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷனுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர்.

6
துறமுகம்

துறமுகம்:

மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்வதில் கெட்டிக்காரர், இயக்குநர் ராஜீவ் ரவி. 'கம்மாட்டிப்பாடம்' படத்திற்குப் பிறகு, 'துறமுகம்' என்ற படத்தை இயக்குகிறார். அதில் நிவின் பாலி, ரஜிஷா விஜயன், பிஜூ மேனன், இந்திரஜித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திங்களில் நடிக்கின்றனர். 1950-களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாகிறது. கொச்சி துறைமுகத்தில் உள்ள தொழிலாளர்கள், அவர்களின் வறுமை நிலை, சுரண்டல்கள், அதனால் ஏற்பட்ட புரட்சி ஆகியவற்றைப் பேசும் படமாக 'துறமுகம்' இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

7
இயக்குநர் மணிரத்னம்

பொன்னியின் செல்வன்:

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தது. அதனை நனவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார், இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தரச் சோழனாக அமிதாப் பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவியாக கீர்த்தி சுரேஷ், ஆதித்ய கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இவர்களில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டும்தான் இந்தப் படத்தில் நடிப்பதை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதை பணிகளில் மணிரத்னத்துடன் சிவானந்த், குமரவேல் ஆகியோர் இணைந்துள்ளனர். 2020 ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.

இவை தவிர, பாலிவுட்டில் கரண் ஜோஹர் இயக்கத்தில் விக்கி கெளஷல், ஆலியா பட் நடிக்கும் 'தக்த்', அர்ஜூன் கபூர் நடிக்கும் 'பானிபட்', அஜய் தேவ்கன், சயீஃப் அலிகான், கஜோல் ஆகியோர் நடிக்கும் 'Taanaji : The Unsung Warrior' உள்ளிட்ட வரலாற்றுப் படங்களும் தயாராகிவருகின்றன.