Published:Updated:

விஜய், அஜித், விக்ரம், சூர்யா... 2019 `குட்புக்'கில் இடம்பெறப்போவது யாருடைய படம்?!

இந்த ஆண்டு வெளிவரக் காத்திருக்கும், எதிர்பார்ப்பில் உள்ள கோலிவுட் படங்களின் பட்டியல் இது.

2019 தொடங்கி, அரை ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களில் 80-க்கும் மேற்பட்ட படங்கள் வெற்றி தோல்விகளைச் சந்தித்துள்ளது. சிறு பட்ஜெட் படங்கள் பல வெற்றியடைந்துள்ளன. நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலர் இந்த வருடம் கோலிவுட் உலகில் அறிமுகமாகியிருக்கிறார்கள். இந்த ஆண்டு வெளிவரக் காத்திருக்கும் சில முக்கியமான படங்களைப் பற்றிய பட்டியல் இது.

2
ஆடை ( அமலா பால் )

ஆடை

'மேயாத மான்' படத்திற்குப் பிறகு, ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்திருக்கும் படம், 'ஆடை'. வெள்ளை நிறக் கந்தல் துணியுடன் அமலா பால் கதறி அழுவதுபோல இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால், அந்தச் சுதந்திரத்துக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதை டார்க் ஹியூமர் கலந்த த்ரில்லர் ஜானரில் எடுத்துள்ளார், ரத்னகுமார். இப்படத்தின் டீஸரில் அமலா பால், நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து இயக்குநர், 'கதைப்படி அப்படித்தான் இருக்கும். ஆனால், அவரை திரையில் பார்க்கும்போது நாகரீகமாகத்தான் இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது டிரெய்லரும் வெளியான நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

3
ஆதித்யா வர்மா ( துருவ் விக்ரம் )

ஆதித்யா வர்மா

தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம், 'அர்ஜுன் ரெட்டி'. அந்தப் படத்தை தமிழில் 'வர்மா' என்ற பெயரில் ரீமேக் செய்து, அதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ், மேகா, ரைசா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால், அந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், தனக்கு இந்தப் படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறினார். அதனால், இயக்குநர் பாலா இந்தப் படத்திலிருந்து வெளியேறினார். இதனையடுத்து, துருவ், இசையமப்பாளர் ரதன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரையும் மாற்றியது தயாரிப்பு நிறுவனம். 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கிரிசய்யா, 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் என்பதாலும், துருவ் விக்ரமின் அறிமுகப் படம் என்பதாலும், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

4
நேர்கொண்ட பார்வை ( அஜித் )

நேர்கொண்ட பார்வை

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம், 'பிங்க்'. பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகப் பேசிய இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் அமிதாப் பச்சன் கேரக்டரில் அஜித்தும், டாப்ஸி கேரக்டரில் ஸ்ரத்தா ஶ்ரீநாத்தும் நடித்துள்ளனர். தவிர, வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பு, யுவன் ஷங்கர் ராஜா இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு எனப் பிரமாண்ட கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. அஜித் நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளைத் திரையில் காணக் காத்திருக்கின்றனர், அவரின் ரசிகர்கள்.

5
பிகில் ( விஜய் )

பிகில்

'தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து, அட்லி - விஜய் காம்போவில் தயாராகும் ஹாட்ரிக் படம், 'பிகில்'. 'வில்லு' படத்திற்குப் பிறகு, விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார், நயன்தாரா. விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம், கால்பந்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார், விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். யோகிபாபு, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரிவாசன் இந்தப் படத்திற்கும் வசனம் எழுதுகிறார். சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் 'பிகில்' படத்திற்காக விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்!

6
காப்பான் ( சூர்யா )

காப்பான்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு, அதீத எதிர்பார்ப்போடு வெளியானது சூர்யா - செல்வராகவன் காம்போவில் உருவான 'என்.ஜி.கே'. ஆனால், செல்வராகவன் - சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், 'அயன்', 'மாற்றான்' படங்களுக்குப் பிறகு, மூன்றாவதாக 'காப்பான்' படத்தில் இணைகிறது கே.வி.ஆனந்த் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பாலிவுட் நடிகர் போமன் இரானி எனப் பெரிய நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் டீஸரில் சூர்யா பல கெட்டப்களில் வருகிறார். கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணிக்குத் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படம் தெலுங்கில் 'பந்தோபஸ்த்' என்ற பெயரிலும் வெளியாகிறது.

7
கடாரம் கொண்டான் ( விக்ரம் )

கடாரம் கொண்டான்

'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம், 'கடாரம் கொண்டான்'. இப்படத்தைக் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஹசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் விக்ரமின் லுக் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. ஜிப்ரான் இசையில் விக்ரம் ஒரு பாடலும், ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலும் பாடியுள்ளனர். 'ஸ்கெட்ச்', 'சாமி ஸ்கொயர்' என விக்ரம் சமீபமாக நடித்த இரு படங்களுக்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆகையால், இந்தப் படம் அவருக்கு நல்ல கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8
கடைசி விவசாயி

இவை தவிர, 'இரும்புத்திரை' வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மித்ரன் சிவகார்த்திகேயனை இயக்கி வருகிறார். 'ஹீரோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். அதேபோல, 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார், பாண்டிராஜ். இரண்டு வெற்றி இயக்குநர்களின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதால், இந்த இரு படங்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

வருடத்தில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோ விஜய் சேதுபதி, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்' படத்திலும் 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் 'கடைசி விவசாயி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்து வரும் பல படங்களில் இவ்விரு படங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. தவிர, 'மாநகரம்' லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கைதி', 'மெளனகுரு' படத்திற்குப் பிறகு, சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'மகாமுனி' ஆகிய படங்களும் இந்த வருடம் குட்புக் லிஸ்டில் இடம்பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு