`குவாரன்டைன்' முதல் `கன்டாசியன்' வரை! - வைரஸ் அவுட்-பிரேக் பற்றிய 8 படங்கள்

எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில், இந்தப் படங்களின் சீன்களை கட் செய்து, எடிட் செய்து, இத்தாலியின் உண்மை நிலை, இந்தோனேஷியாவின் உண்மை நிலை என வாட்ஸ் அப்பில் வதந்தி வீடியோ பரப்பிவிடுவார்கள். அதற்காகவே இந்தப் படங்களை தெரிந்துவைத்துக்கொள்ளலாம். Nothing Spreads like Fear!
இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே பொழுதைக் கழிக்க சினிமாதான் சிறந்த சாய்ஸ். அதனால், `வைரஸ்' சம்பந்தபட்ட படங்களைத் தொகுத்து ஒரு ப்ளே-லிஸ்ட் ஒன்றை உருவாக்கியிருக்கோம். பார்த்து பயம்பெறுங்கள்...ஸாரி, பயன்பெறுங்கள் மக்களே. இந்தப் படங்களில் வருவதுபோல நிலைமை நிஜத்தில் ஏற்படும் என பயம்கொள்ள வேண்டாம். இவற்றில் பெரும்பாலானவை வெறும் அதீத கற்பனையே! ஆனால், நோயின் தீவிரத்தை உணராதவர்கள், இவற்றில் புள்ளி சதவிகிதமேனும் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள், மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் செய்யுங்கள்...

எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில், இந்தப் படங்களின் சீன்களை கட் செய்து, எடிட் செய்து, இத்தாலியின் உண்மை நிலை, இந்தோனேஷியாவின் உண்மை நிலை என வாட்ஸ் அப்பில் வதந்தி வீடியோ பரப்பிவிடுவார்கள். அதற்காகவேனும் இந்தப் படங்களை தெரிந்துவைத்துக்கொள்ளலாம். Nothing Spreads like Fear!
வைரஸ் (Virus) - மலையாளம் - 2019

கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்கள், மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்கிறது. `நிஃபா' எனப்படுகிற கொடிய வைரஸ் ஒன்றுதான் அதற்கு காரணமென அரசு உறுதிசெய்ய, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஒன்று சேர்ந்து அதைச் சமாளித்தார்கள். இந்த உண்மைச் சம்பவத்த்தை, பரபரப்பான திரைக்கதையில் த்ரில்லராக சொன்ன படமே, `வைரஸ்'. அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.
கன்டாசியன் (Contagion) - ஆங்கிலம் - 2011

இன்றைய தேதியில் ஒட்டுமொத்த உலத்திற்கும் ஒற்றை அச்சுறுத்தலாக இருக்கும் கோவிட்-19 வைரஸும், அது உண்டாக்கிவரும் அத்தனை உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளையும் பற்றி முன்கூட்டியே கணித்து, கதை சொன்ன படம் `கன்டாசியன்'. பறவை காய்ச்சலைப் போன்ற MEV-1 எனும் கொடிய வைரஸ், சீனாவில் தோன்றி உலகம் முழுக்கத் தொற்றுநோயாகப் பரவுவதுதான் படத்தின் கதை. ஏற்கெனவே, கொரோனா பீதியில் இருப்பவர்கள் இதைப் பார்க்காதீர்கள். கொரோனா பற்றிய பயமற்று இருப்பவர்கள், இதைப் பார்த்து சீரியஸ்னஸை உணருங்கள். அமேசான் ப்ரைமில் படம் காணக் கிடைக்கிறது.
குவாரன்டைன் 1 & 2 (Quarantine 1 & 2) - ஆங்கிலம் - 2008, 2011

குவாரைன்டன் எனும் வார்த்தையை இப்போது அதிகம் கேள்விப்படுகிறோம் இல்லையா. ஒரு நிருபரும் கேமராமேனும் தீயணைப்பு வீரர்களைப் பற்றி கவர் ஸ்டோரி செய்ய போய், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தக் குடியிருப்போ, சுகாதாரத்துறையால் தனிமைப்படுத்தப்பட, அதில் உள்ள மனிதர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு ஜாம்பிகளாக மாறுகிறார்கள். அவர்களிடமிருந்து இருவரும் தப்பித்தார்களா என்பதே கதை!
28 டேஸ் லேட்டர் (28 Days Later) - ஆங்கிலம் - 2002

அறிவியல் சோதனைகளுக்காக உட்படுத்தபட்ட சிம்பன்ஸிகளை விடுவிக்கும் நோக்கத்துடன், சில விலங்கு ஆர்வலர்கள் ஒரு ஆய்வகத்துக்குப் படையெடுக்கிறார்கள். அங்கிருக்கும் சிம்பன்ஸிகளோ வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அது தெரியாமல் அவர்கள் அவற்றை விடுவிக்க, ஊருக்குள் புகுந்து வைரஸைப் பரப்புகின்றன சிம்பன்ஸிகள். 28 நாள்களுக்குப் பிறகு, கைவிடப்பட்ட மருத்துவமனையிலிருந்து கோமாவில் கிடந்த நாயகன் கண் விழிக்கிறான். வெறிச்சோடிக் கிடக்கும் லண்டனிலிருந்து, வைராஸ் பாதிக்கப்பட்ட ஜாம்பிகளிடமிருந்து நாயகன் தப்பித்தானா, இல்லையா என்பதே படத்தின் கதை!
வேர்ல்ட் வார் ஜீ (World War Z) - ஆங்கிலம் - 2013

முன்னாள் யு.என்.புலனாய்வாளரான நாயகனும் அவனது குடும்பத்தினர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றனர். திடீரென்று, நகரம் மொத்தமும் பெரும் குழப்பத்தில் வெடிக்க, அவனது சந்தேகங்கள் உறுதியாகின்றன. ஒரு கொடிய வைரஸ் ஆரோக்கியமான மக்களை எல்லாம் சிந்திக்க முடியாத மிருகங்களாக மாற்றுகிறது. அதற்கான மருந்தை, நாயகன் கண்டுபிடிக்கும் கதைதான் படம். அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.
கேரியர்ஸ் (Carriers) - ஆங்கிலம் - 2009

ஒரு வைரஸ் மனிதகுலத்தையே மெல்ல அழித்துக்கொண்டிருக்கையில், நான்கு பேர் மட்டும் தொற்றில் இருந்து தப்பித்து பாதுகாப்பான இடத்துக்கு காரில் செல்ல முயல்கிறார்கள். செல்லும் வழியில், ஒருவரின் கார் எரிவாயு இல்லாமல் நடுவழியில் நிற்கிறது. அதில் பயணித்து வந்த குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில், அவர்களையும் பயணத்தில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்போதுதான் தெரிய வருகிறது அவரது குழந்தைக்கு வைரஸ் தொற்று என. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை! நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படத்தைக் காணலாம்.
ஃப்ளூ (Flu) - கொரியன் - 2013

நகருக்கு அருகில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் இறந்த உடல்கள் ஒரு கன்டெய்னரில் போலீசாரால் கண்டுபிடிக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு மத்தியில் ஒருவர் உயிரோடு இருக்கிறார். அதுவும் பயங்கரமான வைரஸ் ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே அவர் உயிர் பிழைத்திருக்க முடியும் என்பதையும் கண்டறிகிறார்கள். ஆனால், அந்த வைரஸோ பயங்கர வேகத்தில் பரவத் தொடங்குகிறது. அதற்கு எப்படி மருந்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை!
ட்ரெயின் டூ பூசன் (Train to Busan) - கொரியன் - 2016

சிறுமி ஒருத்தி அவள் பிறந்தநாளன்று அவளுடைய அம்மாவைப் பார்க்க ஆசைப்படுவதாக, தந்தையிடம் கேட்கிறாள். மறுநாள், தந்தை, மகள் இருவரும் சியோல் ரயில் நிலையத்திலிருந்து பூசன் நகருக்குச் செல்ல ரயில் ஏறுகின்றனர். ரயில் புறப்படுவதற்குச் சில நிமிடங்கள் முன்பு, ஜாம்பி ஒன்று அந்த ரயிலுக்குள் ஏறிவிடுகிறது. ரயிலுக்கு வெளியிலோ, ஒட்டுமொத்த மனிதர்களும் ஜாம்பியாக மாறிவிடுகிறார்கள். அந்த ஜாம்பிக்களிடமிருந்து, ரயிலில் உள்ள பயணிகள் தப்பித்தார்களா என்பதே படத்தின் கதை. நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படத்தைக் காணலாம்!