Published:Updated:

விஜய் முதல் விஜய் சேதுபதி வரை... ஒரே வருடத்தில் டபுள் ஹிட் கொடுத்த நடிகர்களின் படங்கள்!

தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்கள், ஒரே வருடத்தில் இரண்டு மூன்று ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஹிட் லிஸ்ட்டின் தொகுப்பு... 

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களுக்கு, வருடத்திற்கு ஒரு படம் ஹிட் கொடுப்பதே மிகப்பெரிய டாஸ்க். ஆனால், விஜய் முதல் விஜய் சேதுபதி வரையிலான ஹீரோக்கள், அவர்களின் கரியரில் ஒரே வருடத்தில் இரண்டு, மூன்று ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

1
vijay

விஜய்

1992-ம் ஆண்டு வெளியான `நாளைய தீர்ப்பு’ படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், தனது முதல் டபுள் ஹிட்டை 1997-ம் ஆண்டு கொடுத்தார். `லவ் டுடே’ மற்றும் `காதலுக்கு மரியாதை’ என இரண்டு காதல் படங்களின்மூலம் தனது முதல் டபுள் ஹிட்டைக் கொடுத்தவர், 2000-ம் ஆண்டு `குஷி’ மற்றும் `பிரியமானவளே’ படங்கள் மூலம் இரண்டாவது டபுள் ஹிட்டையும் கொடுத்தார். இதற்கு அடுத்த ஆண்டே, `ப்ரண்ட்ஸ்’, `பத்ரி’, `ஷாஜகான்’ என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார். 2005-ம் ஆண்டு பொங்கலுக்கு, `திருப்பாச்சி’, தீபாவளிக்கு `சிவகாசி’ என ஒரே இயக்குநரின் இயக்கத்தில் இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தார். விஜய்யின் கரியரில் 2012-ம் ஆண்டு ரொம்பவே முக்கியமானது. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் இருவரான ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து `நண்பன்’, `துப்பாக்கி’ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். 

2
Ajith

அஜித்

அஜித், தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆண்டிலிருந்தே வருடத்திற்கு ஒரு ஹிட் எனத் தொடர்ந்து கொடுத்தவர், 1998-ல் தனது முதல் இரட்டை ஹிட்டை கொடுத்தார். `காதல் மன்னன்’, `அவள் வருவாளா’ என வெளியான இரண்டு லவ் படங்களுமே ஹிட். அடுத்த ஆண்டே, `வாலி’, `அமர்க்களம்’ எனத் தனது அடுத்த டபுள் ஹிட்டை இரு வேறு கதாபாத்திரங்களின்மூலம் வெரைட்டியாகக் கொடுத்தார். அதேபோல், 2001-ம் ஆண்டிலும் `தீனா’, `சிட்டிசன்’ என்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின், 2019-ல் தனது அடுத்த டபுள் ஹிட்டைக் கொடுத்திருக்கிறார். இந்த வருடம் வெளியான `விஸ்வாசம்’, `நேர்கொண்ட பார்வை’ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தவர், 2020 தீபாவளியை `தல’ தீபாவளியாக மாற்ற வேண்டும் என ‘வலிமை’யோடு உழைத்துக்கொண்டிருக்கிறார்.

3
Surya ( Anjaan Movie )

சூர்யா

விஜய் நடித்த `நேருக்கு நேர்’ படத்தின்மூலம் அறிமுகமான சூர்யா, அதே விஜய்யோடு சேர்ந்து நடித்த `ப்ரண்ட்ஸ்’ மற்றும் பாலாவின் இயக்கத்தில் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு நடித்த `நந்தா’ ஆகிய இரண்டு படங்களின்மூலம், 2001-ம் ஆண்டு தனது முதல் டபுள் ஹிட்டைக் கொடுத்திருக்கிறார். இதற்கு அடுத்த ஆண்டே, `உன்னை நினைத்து’ மற்றும் `மெளனம் பேசியதே’ படங்கள் மூலம் அடுத்த இரட்டை சதத்தை அடித்தவர், ஹாட்ரிக் அடிக்கவும் தவறவில்லை. தொடர்ந்து, 3-வது ஆண்டாக 2003-ல் `காக்க காக்க’ மற்றும் `பிதாமகன்’ படங்களின்மூலம் தனது கரியரின் மூன்றாவது டபுள் ஹிட்டைக் கொடுத்தார். 2004-ம் ஆண்டு,`பேரழகன்’ எனும் ஹிட் படத்தைத் தொடர்ந்து, 2005-ல் `ஆறு’, `கஜினி’ படங்களின் மூலமும் 2009-ல் `அயன்’, `ஆதவன்’ படங்களின் மூலமும் தனது தொடர் டபுள்ஸைக் கொடுத்திருக்கிறார். 

4
Vikram ( Irumugan Movie )

விக்ரம்

`சேது’ படத்திற்குப் பிறகு வருடத்திற்கு ஒரு ஹிட் படம் எனத் தொடர்ந்து கொடுத்துவரும் விக்ரம், ஒரே வருடத்தில் மூன்று ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். 2003-ம் ஆண்டு `தூள்’, `சாமி’, `பிதாமகன்’ என ட்ரிபிள் ஹிட்டில் வெரைட்டி காட்டினார். `தூள்’ படத்தில் அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் கிராமத்தானாகவும், `சாமி’ படத்தில் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்கும் போலீஸ் அதிகாரியாகவும், `பிதாமகன்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து, அசரடித்தார்.

5
Dhanush

தனுஷ்

அறிமுகமான அடுத்த ஆண்டிலேயே தனது டபுள் ஹிட் கணக்கை தொடங்கியவர், தனுஷ். 2003-ம் ஆண்டு `காதல் கொண்டேன்’, `திருடா திருடி’ எனத் தனது முதல் டபுள் ஹிட்டிலேயே வெரைட்டி காட்டினார். அடுத்ததாக, 2006-ம் ஆண்டிலும் `புதுப்பேட்டை’ மற்றும் `திருவிளையாடல் ஆரம்பம்’ படங்களிலும் வெரைட்டி காட்டினார். ரிலீஸான சமயத்தில் `புதுப்பேட்டை’ படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அதன் பிறகு பலரும் படத்தை சிலாகித்துவருகின்றனர். 2011-ம் ஆண்டு `ஆடுகளம்’ மற்றும் `மயக்கம் என்ன’ படங்களின் மூலம், தனது வெரைட்டி டெம்ப்ளேட்டைத் தொடர்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான `அசுரன்', இதைத் தொடர்ந்து `பட்டாஸ்', கார்த்திக் சுப்புராஜ் படம் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் வெரைட்டி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

6
Simbu

சிம்பு

குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் ஹீரோவானார் சிம்பு. 2004 -ம் ஆண்டு, `கோவில்’ மற்றும் `மன்மதன்’ படங்களின்மூலம் டபுள் ஹிட்டைக் கொடுத்தார். தனது வழக்கமான துள்ளல் நடனம் மற்றும் காஸ்ட்யூம்ஸில் இருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு, கிராமத்து இளைஞனாக நடித்த `கோவில்’ படமும், இளைஞர்களைக் கவர்ந்த `மன்மதன்’ படமும் இன்றுவரை சிம்புவின் கரியரில் தனித்துத் தெரிகின்றன. 

7
Karthi

கார்த்தி

தனுஷைப் போல், சினிமாவுக்கு அறிமுகமான அடுத்த ஆண்டே தொடர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், கார்த்தி. 2010-ம் ஆண்டு `ஆயிரத்தில் ஒருவன்’, `பையா’, `நான் மகான் அல்ல’ என மூன்று ஹிட் படங்களை வெரைட்டியாகக் கொடுத்தார். `புதுப்பேட்டை’ படத்தைப் போல் `ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கும், ரிலீஸான சமயத்தில் தகுந்த வரவேற்பு கிடைக்காவிட்டாலும், அதன்பிறகு அந்தப் படத்தின் தன்மையை மக்கள் புரிந்துகொண்டனர். `பருத்திவீரன்’ மற்றும் `ஆயிரத்தில் ஒருவன்’ படங்களின் கெட்டப்களில் இருந்து முற்றிலும் மாறி, ஒரு ஸ்டைலிஷ் சிட்டி இளைஞனாக `பையா’ படத்தில் வந்திருந்தார். அதேபோல, `நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மிடில் க்ளாஸ் சென்னை இளைஞனாக நம் மனத்தில் பதிந்தார்.

8
Jayam Ravi ( Comali )

`ஜெயம்’ ரவி

தனது முதல் படமான `ஜெயம்’ படத்திலிருந்தே ஹிட் லிஸ்ட்டை தொடங்கிய ரவி, 2015-ம் ஆண்டு மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார். `ரோமியோ ஜூலியட்’, `தனி ஒருவன்’, `பூலோகம்’ என ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ஜானரில் கொடுத்து அசத்தினார். `ரோமியோ ஜூலியட்’ படத்தில் காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், `தனி ஒருவன்’ படத்தில் வில்லனுக்கும் ஹீரோவுக்குமான `டாம் அண்ட் ஜெர்ரி’ சண்டை, `பூலோகம்’ படத்தில் பாக்ஸிங்கில் இருக்கும் பாலிடிக்ஸ் என வெவ்வேறு களத்தை ஏற்று நடித்திருந்தார். `ஜெயம்’ ரவியின் கரியரில் 2015-க்கு எப்போதுமே சிறப்பு மரியாதை இருக்கும்.

9
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன்

2012-ம் ஆண்டு, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், அறிமுகமான அடுத்த ஆண்டே `எதிர் நீச்சல்’ மற்றும் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களின் மூலம், தனது முதல் டபுள் ஹிட்டை பதிவுசெய்துவிட்டார். முதல் டபுள் ஹிட்டிலேயே சிட்டி, வில்லேஜ் என வித்தியாசம் காட்டியவர், 2016-ம் ஆண்டும் `ரஜினிமுருகன்’ மற்றும் `ரெமோ’ படங்களின் மூலம் அடுத்த டபுள் ஹிட்டைக் கொடுத்தார். இதிலும் சிட்டி, வில்லேஜ் கான்செப்ட்டையே கையாண்டிருப்பார்.

10
Vijay Sethupathi

விஜய் சேதுபதி

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் நடித்திருந்த விஜய் சேதுபதி, ஹீரோவானதுக்குப் பின் 2012-ம் ஆண்டு தனது முதல் இரட்டை ஹிட்டைக் கொடுத்தார். `பீட்சா’ மற்றும் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்கிற இரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களின்மூலம் டபுள் ஹிட் கொடுத்தவர், அடுத்த ஆண்டே `சூது கவ்வும்’ மற்றும் `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களின்மூலம் அடுத்த டபுள் ஹிட்டையும் கொடுத்திருந்தார். விஜய் சேதுபதியின் கரியரில் 2016-ம் ஆண்டில் மட்டும் `சேதுபதி’, `காதலும் கடந்து போகும்’, `இறைவி’, `தர்மதுரை’, `ஆண்டவன் கட்டளை’, `றெக்க’ என மொத்தம் 6 படங்கள் ரிலீஸாகின. இதில், ’காதலும் கடந்துபோகும்’, ’இறைவி’, ’ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்கள் வித்தியாசமான கதையம்சத்தால் தனித்துத் தெரிந்தன.

``என்னால பிரச்னை வரக்கூடாதுன்னு தொடரிலிருந்து விலகிட்டேன்!’’ - `திருமணம்’ புகழ் ப்ரீத்தி ஷர்மா