Published:Updated:

`ப.பாண்டி' முதல் `கே.டி' வரை... நரை கூடிய வாழ்க்கையின் காதலைச் சொன்ன படங்கள்!

அதிகம் பேசவேண்டிய முதியவர்களின் கதையை தமிழ் சினிமா, எப்போதாவதுதான் கையில் எடுக்கும். அப்படித் தமிழில் முதியவர்களை மையமாக வைத்து வெளிவந்த படங்களின் சிறு தொகுப்பே இந்தக் கட்டுரை.

1
ப.பாண்டி

ப.பாண்டி

தன் கடமைகள் அனைத்தையும் 64 வயதில் செய்து முடித்துவிட்ட பாண்டி, குடும்பத்துக்கு நாம் சுமையாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு பயணத்தை மேற்கொள்வார். இலக்கே இல்லாத இப்பயணத்தில், தன் முதல் காதலியைச் சந்திக்கிறார் `பவர் பாண்டி’. பின், அந்தக் காதலியின் மகள் சம்மதத்துடன், தனக்குத் துணையாகவும் அழைத்து வருகிறார். வயதான பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதை, இயக்குநராக தன் முதல் படத்திலேயே சொல்லியிருப்பார், தனுஷ். ராஜ்கிரணும் `பவர் பாண்டி’ என்ற ஸ்டன்ட் மாஸ்டர் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியுடன் செய்திருப்பார்.

2
தலைமுறைகள்

தலைமுறைகள்

திடீர் திருப்பங்கள், பாடல்கள், காமெடிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என எதுவுமே இல்லாமல், எளிய மனிதர்களின் வாழ்க்கையை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படமே `தலைமுறைகள்'. பட்டணத்தில் இருந்து வந்திருக்கும் பேரனுக்கும், படிக்காத தாத்தாவுக்கும் இடையேயான உறவுதான் படத்தின் கதை. பாலு மகேந்திராவே இப்படத்தை இயக்கி நடித்திருப்பார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுள் ஒருவரான பாலு மகேந்திராவுக்கு, நடிகராக இதுவே முதல் படம். தாத்தா - பேரன் பாசத்தை மட்டுமல்லாமல், நல்வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளை இந்தத் தலைமுறையினருக்கு, தனது `தலைமுறைகள்’ வாயிலாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். 

3
ஒன்பது ரூபாய் நோட்டு

ஒன்பது ரூபாய் நோட்டு

வில்லனாகவே இருந்தாலும், அப்படிப் பேசியிருக்கக் கூடாது கெளதம்! - `எனை நோக்கி பாயும் தோட்டா’ ப்ளஸ்/மைனஸ்... ப்ளீஸ்!

செல்வச் செழிப்புடன் பிள்ளைகளை வளர்த்து, கடைசியில் செல்லாக் காசாகும் பெரும்பாலான பெற்றோர்களின் பிரதிநிதியாக, `ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தின் மாதவப் படையாச்சி கதாபாத்திரத்தை கட்டமைத்திருப்பார், இயக்குநர் தங்கர் பச்சான். மாதவப் படையாச்சியாக நடித்திருக்கும் சத்யராஜ், அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அன்பான கூட்டுக் குடும்பத்தில் வாரிசுகளால் சொத்துப் பிரிவு ஏற்பட்டு, அது பிரச்னையில் முடிய, மனைவி அர்ச்சனாவுடன் `விதிவிட்ட வழி' என பயணம் மேற்கொள்ளும் சத்யராஜின் இந்த வாழ்க்கைப் பதிவு, நமக்குப் பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கும்.

4
அம்மணி

அம்மணி 

`சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் சந்தித்த அம்மணி என்பவரின் வாழ்க்கையையே படமாக்கியிருப்பார், லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தில் குடும்பப் பிரச்னைகளை அதிகம் பதிவு செய்திருந்தாலும், அம்மணி கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பார் லட்சுமி ராமகிருஷ்ணன். சேகரித்த குப்பைகளை விற்றுச் சாப்பிடும் கடின உழைப்பாளியான அம்மணிப் பாட்டிக்கு, சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை. எந்த எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையை சந்தோஷமாக வாழும் அம்மணிப் பாட்டியாக, சுப்புலட்சுமி இப்படத்தில் கலக்கியிருப்பார்.

5
ரெட்டச்சுழி

ரெட்டச்சுழி

`பாதகம் இல்லாமல் நல்ல முடிவை எடுப்போம்'- இளையராஜாவுக்காக போராடிய பாரதிராஜா!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் முறைத்துக்கொண்டு, எதிரும் புதிருமாய் நடித்த படம் `ரெட்டைச்சுழி'. கதர் சட்டை பாலசந்தருக்கும் தோழர் பாரதிராஜாவுக்கும் இடையேயான 40 ஆண்டு காலப் பகை எப்படி தீர்ந்தது என்பதே படத்தின் கதை. எல்லாவற்றிலும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டையிட்டுக்கொண்டிருக்கும் இவ்விருவரையும், அவரது குழந்தைகள் தங்களது வழிக்குக் கொண்டுவருவதே படத்தின் களம். இந்த இரு கம்பீரமான இயக்குநர்களையும் தன்னுடைய அறிமுகப் படத்திலேயே இணைத்ததற்காக இயக்குநர் தாமிராவைப் பாராட்டலாம்.

6
கே.டி

கே.டி (எ) கருப்புதுரை

உடல்நிலை சரியில்லாமல் உயிருக்குப் போராடும் முதியவர்களை, எண்ணெய் தேச்சுக் குளிக்க வைத்து, இளநீரைக் குடிக்க வைத்தால், அவர்களின் உயிர் சீக்கிரமே பிரிந்துவிடும். இதை `தலைக்கூத்தல்’ என்பார்கள். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான், `கே.டி (எ) கருப்புதுரை’. 80 வயதான மு.ராமசாமி, தனக்குத் தலைக்கூத்தல் செய்யப்போவதைத் தெரிந்துகொண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறுவிடுவார். தனது பயணத்தின்போது 8 வயது சிறுவன் ஒருவனைச் சந்திக்கிறார். இவ்விருவருக்குமான பயணமே மீதிப் படம். கிராமத்துக் குசும்பு, எமோஷன் என இரண்டையுமே அழகாய் கையாண்டிருப்பார் இயக்குநர் மதுமிதா.

தமிழ் சினிமாவில் இதேபோல் முதியவர்களின் வாழ்க்கையைச் சொன்ன படங்களுள், உங்களது மனம் கவர்ந்த படம் என்னவென்பதை கமென்ட்டில் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு