Published:Updated:

மோகன்லால், நிவின், ஃபகத், துல்கர்... பீரியட் படங்களில் மலையாள ஹீரோக்கள் நடிப்பது ஏன்?

மலையாளத்தில் வெளியாக இருக்கும் பீரியட் படங்கள்
Listicle
மலையாளத்தில் வெளியாக இருக்கும் பீரியட் படங்கள்

மலையாளத்தில் வெளியாகத் தயாராக இருக்கும் பீரியட் படங்களின் லிஸ்ட்.


மலையாளத்தில் வெளியாக இருக்கும் பீரியட் படங்கள்

ஒரு ஹாரர் படம் வந்து ஹிட்டானால் அடுத்தடுத்து ஹாரர் படங்களாக வெளியாகும். அது போல ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஜானர் பாப்புலராக இருக்கும். அப்படி எந்தப் படம் மூலம் அந்த ஜானர் பாப்புலராகிறதோ அதுதான் டிரெண்ட் செட்டர் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் பீரியட் படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு உண்டு. அதே சமயம் கலை இயக்கம், காஸ்ட்யூம் என அதிக வேலைகளும் அதில் உண்டு. அந்த சுவாரஸ்யம்தான் பீரியட் படங்களுக்கு ரசிகர்கள் உருவாகக் காரணம். ஏற்கெனவே மலையாளத்தில் 'பழசிராஜா', 'காயங்குளம் கொச்சுண்ணி', 'மாமாங்கம்', 'கம்மாரசம்பவம்', 'சகாவு' என ஏகப்பட்ட பீரியட் படங்கள் வந்து கவனம் ஈர்த்திருக்கின்றன. மேலே குறிப்பிட்ட படங்கள் வெளியாவதற்கு முன்னரே நிறைய வரலாற்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் பெரும்பாலான முன்னணி மலையாள ஹீரோக்கள் பீரியட் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இந்த மலையாள ஹீரோக்கள் நடித்து தற்போது வெளியாகக் காத்திருக்கும் பீரியட் படங்களின் லிஸ்ட் இங்கே.


துறமுகம்

துறமுகம்

'கம்மாட்டிப் பாடம்' போன்ற ஒரு கல்ட் க்ளாசிக் திரைப்படத்துக்குப் பிறகு, ராஜீவ் ரவி இயக்கும் படம் இது. நிவின் பாலி நாயகனாக நடிக்கும் இந்தப் படமும், ராஜீவின் முந்தைய படத்தைப் போலவே ஒரு மண்ணின் ஒட்டுமொத்த வாழ்வியலைப் பதிவு செய்யும் படமாக இருக்குமாம். இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பீரியட் டிராமாவாக இருக்கும் இந்தப் படம், தொழில் புரட்சி, எப்படி பாரம்பர்ய வாழ்வியல் மீது தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களங்களில், ஆழமான திரைக்கதையும், பல லேயர்களுடன் கதை சொல்வதில் வல்லவரான ராஜீவின் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தப் படத்தில், இந்திரஜித் சுகுமாரனின் மனைவி பூர்ணிமா இந்திரஜித் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெரிய திரைக்கு வருகிறார். 1940 - 1950-களில் இருந்த துறைமுகங்களை இதில் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்களாம். சமீபமாகப் படக்குழு வெளியிட்ட நிவின் பாலியின் தோற்றத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்! இந்தப் படத்துக்குப் பிறகு, 'படவெட்டு' படத்தில் நடித்து வருகிறார் நிவின். இதில் அவருக்கு ஜோடியாக 'அருவி' அதிதி பாலன் நடிக்கிறார்.


குரூப்

குரூப்

'வரனே அவஷ்யமுண்டு', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என இந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படங்கள் இரண்டும் சூப்பர் ஹிட். அடுத்ததாக 'குரூப்' என்ற படத்தைத் தயாரித்து நடித்திருக்கிறார். துல்கர் சல்மானின் முதல் படத்தை இயக்கிய ஶ்ரீநாத் ராஜேந்திரன்தான் இதன் இயக்குநர். 1980-களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. 1984-லிருந்து தலைமறைவாக இருக்கும் சுகுமார குரூப் என்ற கொலையாளியாக துல்கர் நடித்துள்ளார். தவிர, இந்திரஜித், சன்னி வெய்ன், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படத்தை ஏப்ரல் இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இதுவரை துல்கர் நடித்த மலையாளப் படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் இதுதான்.


மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்

மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ஒரு மலையாளப் படம் உருவாவது இதுவே முதல்முறை. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரியதர்ஷன் இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லால், சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன் என நடிகர் பட்டாளமே இருக்கிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் கதை 16-ம் நூற்றாண்டில் நடக்கிறது. போர்ச்சுகீஸியர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தபோது என்னவெல்லாம் நடந்தது என்பதை படமாக எடுத்துள்ளனர். அப்போதைய கடலோரக் காவலர்களாக இருந்த குஞ்சாலி மரைக்காயர் இன மக்கள் குறித்த ஒரு முக்கியமான பதிவாகவும் இந்தப் படம் இருக்கும்.

இதில் மோகன்லால் நான்காம் குஞ்சாலி மரைக்காயராக நடிக்கிறார். மேலும், அவர் மகன் ப்ரணவ் மோகன்லால் சிறு வயது நான்காம் குஞ்சாலி மரைக்காயராக நடிக்கிறார். முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் அசோக் செல்வன். திரு ஒளிப்பதிவு, சாபு சிரிலின் கலை இயக்கம் என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங். 2019 மார்ச் மாதமே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதன்பின், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் குறிப்பாக, விஷுவல் எஃபெக்ட்ஸில் அதிகம் கவனம் செலுத்தி வந்த படக்குழு, மார்ச் 26, 2020 அன்று உலகம் முழுக்க 5,000 திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குள் லாக்டெளன் வந்துவிட்டதால் படம் வெளியாகவில்லை.

படத்தை ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதற்காகப் போட்டி போட்ட நிலையில், என்ன ஆனாலும் படத்தை தியேட்டர்களில்தான் வெளியிடுவோம் என்பதை உறுதியாகச் சொல்லிவிட்டனர். தவிர, இந்தப் படம் வெளியாக இருக்கும் எல்லா மாநிலங்களிலும் நாடுகளிலும் எப்போது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்களோ அப்போது படத்தை வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளது படக்குழு.


மாலிக்

மாலிக்

'டேக் ஆஃப்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் - ஃபகத் பாசில் கூட்டணி, 'மாலிக்' படத்தில் இணைந்துள்ளது. பொலிடிக்கல் த்ரில்லர் ஜானரில் பீரியட் படமாக உருவாகி இருக்கும் இதில், ஃபகத் கேங்ஸ்டராக நடிக்கிறார். இதில் அவரது பெயர் சுலைமான் மாலிக். அவரின் இந்தக் கேரக்டர் 20 வயதிலிருந்து 60 வயது வரை பயணிக்கும் என்கிறார்கள். சிறுவயது கேரக்டருக்காக 20 கிலோ எடை குறைத்து நடித்துள்ளார், ஃபகத். அதேபோல 60 வயது போர்ஷனில் நடிக்க ஃபகத் பாசில் தன் தாத்தா எப்படி இருப்பார் என்பதை ரெஃபரன்ஸாக எடுத்துக்கொண்டு அவரது லுக்கை வடிவமைத்துள்ளனர்.

லீ விட்டேகர் எனும் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் இதில் பணியாற்றி இருக்கிறார். ஏப்ரல் 30-ம் தேதி இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்தப் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தன் நடிப்புக்கு தீனி போடும் கதைகளில் மட்டுமே நடித்துவரும் ஃபகத்துக்கு இந்தப் படம் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.