Published:Updated:

"ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாரோ இல்லையோ, நான் அவர் பக்கம்தான்!" - 'லொள்ளு சபா' ஜீவா

ஜீவா
ஜீவா

''குருவி' படம் வந்தபோது நடந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதது. படத்தில் விவேக் சார்கிட்ட இருந்து பேக்கை திருடிட்டு ஓடிடுவேன். அதன்பிறகு என்னை கண்பிடிச்சு அடிச்சு துவம்சம் பண்ணிடுவாங்க. அந்த படம் வெளியான பிறகு, ஒரு சூப்பர் மார்கெட்டுக்குப் போனேன்.''

''என்னையும் அறியாமல் சின்ன வயதிலிருந்தே ரஜினி ஸ்டைலில் இருந்திருக்கிறேன்போல! நான் சின்ன பையனா இருந்தப்போ, எடுத்த போட்டோக்களைப் பார்த்தாலே தெரியுது, அதில் ரஜினி மாதிரியே ஸ்டைலா போஸ் கொடுத்திருக்கேன்'' என ஆரம்பிக்கிறார் 'லொள்ளு சபா' ஜீவா. தற்போது 'கொம்பு ', 'அறை எண் 66' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

'' 'நையாண்டி தர்பார்' என்ற பெயரில் ஆரம்பமான நிகழ்ச்சிதான், பிறகு 'லொள்ளு சபா' ஆனது. 14 வருடம் அந்த நிகழ்ச்சியில் இருந்தேன். மறைந்த பாலாஜிதான் 'நாரதர் சபா' என்ற பெயரில் அந்த நிகழ்ச்சியை நடத்தினார். பிறகு, 'ஒருபடப் பாடல்' என்ற பெயரில் இருந்தது.

ஜீவா
ஜீவா

அப்போதெல்லாம் கலாய்க்கிற மாதிரியான தரமான சினிமா வந்தது. அதை இப்போதுவரை விமர்சிக்க முடிகிறது. இப்போது வெளிவரும் பெரும்பாலான படங்கள், படங்களைக் கலாய்க்கும் 'லொள்ளு சபா' மாதிரிதான் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட் ரைட்டராக, உதவி இயக்குநராகப் பல வருடங்கள் இருந்திருக்கிறேன்'' என்றவர், தொடர்ந்தார்.

''அப்போது, டி.வி-யிலிருந்து சினிமாவுக்கு நடிகர்களை அழைப்பது, அரிதுதான். ஒருகட்டத்தில் எங்களைப் போன்ற காமெடி நடிகர்களை சினிமா அரவணைத்தது. இன்னும் சொல்லப்போனால், அந்த டிரெண்டை செட் செய்ததே நாங்கள்தான்! அப்போது 'லொள்ளு சபா'வில் நடித்த எங்களுடைய சீன்களை இப்போதுவரை யூடியூபில் பார்க்கலாம்.

ஜீவா
ஜீவா

சந்தானம், சுவாமிநாதன், மனோகர், நண்டு ஜெகன், யோகிபாபு, மதுமிதா, சிவகார்த்திகேயன், மா.கா.பா, தீனா எனப் பலரும் சினிமாவுக்கு வந்துட்டாங்க. காமெடி என்கிற தளம் எவர்கிரீன். இன்றைக்கு வருகிற பல காமெடி ஷோக்களுக்கு அடிப்படை 'லொள்ளு சபா'தான். டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் முதலில் வந்த வீடியோக்கள், 'லொள்ளு சபா'வுடையதுதான். யூடியூபின் மூதாதையர்கள்னுகூட எங்களைச் சொல்லலாம்" எனச் சிரிக்கிறார்.

''எப்போலிருந்து என்னை மாதிரி பண்ற'னு கேட்டார். ஐந்து வயசுல இருந்து தலைவா'னு சொன்னேன். 'ஹே... அப்படியா'னு ஆச்சரியப்பட்டு கட்டி அணைச்சுக்கிட்டார்.''
ஜீவா
ஜீவா
ஜீவா

''நான் எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி, மெளலி, கிரேஸி மோகன் இவர்களுடைய நாடகத்தை விரும்பிப் பார்ப்பேன். இப்போகூட அந்த நாடகங்களைத்தான் பெரும்பாலும் பார்ப்பேன். அதில் இருக்கிற ஒரு சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. ஒவ்வொருமுறையும் பார்க்கும்போது, புதிதாகவே இருக்கும். எனக்கான சினிமா வாய்ப்பை எஸ்.வி.சேகர் சார்தான் கொடுத்தார்.

'வேகம்'தான் என் முதல் படம். எஸ்.வி.சேகர் சார் பையன் அஷ்வின் அதில் ஹீரோ. அவர் அவ்வளவு திறமையான நடிகர். இப்போ அவர் என்ன சொன்னாலும் அதைக் கலாய்க்கிறாங்க; திட்டுறாங்க. ஆனா, ட்ரோலைப் பார்த்து பயந்து ஓடுபவரைத்தான் நீங்கள் ட்ரோல் பண்ணணும். எஸ்.வி.சேகர் சார் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். என் தலைவர் ரஜினிக்குப் பிறகு, நான் அதிகம் மதிக்கும் நபர் அவர். பிறகு, 'குருவி, 'நினைத்தாலே இனிக்கும்', 'மதராசப்பட்டினம்', 'ஆண்மை தவறேல்', 'களவாடிய பொழுதுகள்', 'இது என்ன மாயம்' என 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.

ஜீவா
ஜீவா

'குருவி' படம் வந்தபோது நடந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதது. படத்தில் விவேக் சார்கிட்ட இருந்து பேக்கைத் திருடிட்டு ஓடிடுவேன். பிறகு என்னைக் கண்டுபிடிச்சு, அடிச்சுத் துவம்சம் பண்ணிடுவாங்க. அந்தப் படம் வெளியான பிறகு, ஒரு சூப்பர் மார்கெட்டுக்குப் போனேன். அங்கே வேலை பார்த்துக்கிட்டிருந்த சின்ன பசங்க நான் எந்த சந்துக்குப் போனாலும், என் பின்னாடியே வந்தாங்க. 'ஏன்டா என்னை இப்படி ஃபாலோ பண்றீங்க'னு கேட்டேன். 'நீங்கதான் பேக்கைத் திருடிட்டுப் போயிடுவீங்களே!'னு சொன்னாங்க. எனக்கு ஷாக் ஆகிடுச்சு. சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்'' என்றவர், ரஜினி ரசிகராக மாறிய கதையைச் சொன்னார்.

''அது எனக்கே தெரியலைங்க! எனக்கு 5 வயது இருக்கும்போதே, என்னை அறியாமல் ரஜினி ரசிகனாகிட்டேன்போல. என்னையே அறியாமல் சின்ன வயதில் அவருடைய ஸ்டைலில்தான் இருப்பேன். இடுப்பில் கை வெச்சு நிற்கிறது, அவரை மாதிரியே ஸ்டைலான போஸ்... இப்படி சின்ன வயசு போட்டோக்களையெல்லாம் எடுத்துப் பார்த்தா, அப்படித்தான் இருந்திருக்கேன். 'கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு டூப் போடப் போனேன்.

ஜீவா
ஜீவா

அப்போ தலைவரே, 'எப்போ இருந்து என்னை மாதிரியே பண்ற'ன்னு கேட்டார். 'அஞ்சு வயசுல இருந்து தலைவா'னு சொன்னேன். ஆச்சர்யப்பட்டு கட்டிப் பிடிச்சுக்கிட்டார். அதைவிட எனக்குப் பெரிய விஷயம், அவர் கையால் என் முதல் படத்தை லாஞ்ச் பண்ண வெச்சது. மத்தவங்கெல்லாம் பிழைப்புக்காக ரஜினி ரசிகர்கள்; நான் பிறந்ததிலிருந்தே ரஜினி ரசிகன்'' எனக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறார் ஜீவா.

''அவருடைய ரசிகனான என்னை, 'நம்ம பையன் நல்லா வரணும்'னு ஆசீர்வதிச்சார் பாருங்க... அந்த ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும்னு நினைக்கிறேன். 2017-ம் ஆண்டு நான் முதன்முதலாக நடித்த 'ஆரம்பமே அட்டகாசம்' ஆடியோ வெளியீடை தலைவர் வீட்டுலதான் நடத்தினோம்.

ஜீவா
ஜீவா

அந்த நேரத்தில் 'பாகுபலி' படம் ரிலீஸ். லாரி பக்கத்துல சைக்கிளை விட்டமாதிரி ஆகிடுச்சு. அதனால, அந்தப் படம் வெளியானதே பலருக்குத் தெரியல. இப்போ, 'கொம்பு'ங்கிற படத்தில் ஹீரோவா நடிக்கிறேன். திஷா பாண்டே எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. பொள்ளாச்சி பிரச்னையை மையமாகக் கொண்ட கதை. சைக்கோ த்ரில்லரா எடுத்திருக்கோம்" என்பவரிடம், ரஜினி கட்சி ஆரம்பிக்கும் விஷயத்தைக் கேட்டேன்.

''அவர் எப்போ ஆரம்பிச்சாலும், நான் அவருக்கு உறுதுணையாக நிற்பேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே ரஜினி ரசிகர் மன்றத்திலும் இருந்திருக்கிறேன். அவர் கட்சி ஆரம்பித்தாலும், இல்லையென்றாலும் அவருடன்தான் இருப்பேன்'' என்று முடிக்கிறார் ஜீவா.

அடுத்த கட்டுரைக்கு