Published:Updated:

``ரஹ்மானின் கற்பனைக்குத் துரோகம் செய்ய முடியாது!’’ - `தள்ளிப் போகாதே' குறித்து இயக்குநர் கெளதம்

லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் `Changing screens & Emerging Media Paradigms' என்ற தலைப்பில் நடந்த `Media con 19' கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் `Changing screens & Emerging Media Paradigms' என்ற தலைப்பில், மாறிவரும் ஊடகத்துறை தொடர்பான கருத்தரங்கம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் பால்கி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் உள்ளிட்ட பல பிரபலங்களும் ஊடகத்துறை சார்ந்த வல்லுநர்களும் பங்கேற்றனர். `மாறிவரும் ஊடகத்துறை இனி எப்படி இருக்கும்' என மாணவர்களுக்கு அவர்கள் வழிகாட்டினர்.

KAMAL
KAMAL

இரண்டாம் நாள் நிகழ்வு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் உரையுடன் தொடங்கியது. ``சமூக வலைதளங்களை இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்" என விவரித்த கமல், ``சமூக வலைதளமும் கத்தியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அதைச் சரியாகப் பயன்படுத்தினால் சமையல் அறையில் பயன்படுத்தலாம். சிலர் தவறாகவும் பயன்படுத்துகின்றனர்” என்றார்.

பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கமல், ``தமிழக அரசியலிலிருந்து குடும்பத்தைப் பிரிக்க முடியாது என்பது உண்மையாக இருந்தால், என்னுடைய குடும்பத்தை நான் பெரிதுபடுத்திக்கொள்கிறேன். இந்த இளைஞர்களே என்னுடைய குடும்பம். இளைஞர்களே நாளைய தலைவர்கள். எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. இந்தியாவில் இந்திதான் கடைசியாகப் பிறந்த மொழி. அப்படிப் பார்த்தால் இந்தி டயபர் போட்டு நடக்கும் குழந்தையைப் போன்றது. அதற்காக இந்தியை வெறுக்க மாட்டோம். ஆனால், திணித்தால் ஏற்க மாட்டோம். மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். எனவே, அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது” என்றார். இறுதியாக, ``எனக்கு வேறு பணிகள் இருப்பதால் இளைஞர்கள் எனது பணியை செய்ய முன்வர வேண்டும்" எனப் பேசி முடித்தார்.

Media con 19
Media con 19

அதைத் தொடர்ந்து `மகாமுனி' படக்குழுவினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், படத்தின் எடிட்டர் சாபு ஜோசப், ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் படம் எடுக்கப்பட்டவிதம் குறித்தும் தங்களின் அனுபவம் தொடர்பாகவும் பேசினர். திரைத்துறையில் சாதிக்க பொறுமை மிக அவசியம் என்ற இருவரும் தாங்கள் கடந்துவந்த பாதையைப் பற்றி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பின்னர் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன் மற்றும் சி.வி.குமார் ஆகியோர், திரைப்படத் தயாரிப்பில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பாகப் பேசினர். அப்போது அவர்கள், ``இனி வரும் காலங்களில் சினிமாவை மட்டும் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வர வேண்டாம். டிஜிட்டல் தளங்களில் பல்வேறு தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைகிறது. அதனால் அதுபோன்ற தொடர்களைத் தயாரிக்கவும் முன் வர வேண்டும். அதற்கு நல்ல எதிர்காலமும் இருக்கிறது” என்றனர். மேலும், தமிழ் சினிமாவில் திறமையான எழுத்தாளர்களுக்கு பஞ்சம் இருப்பதாகவும் தெலுங்கு, இந்தி, மலையாள சினிமாக்களில் கதை எழுதுபவர்களுக்கு நல்ல மதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Media con 19
Media con 19

அதன் பின்னர், திரைக்கதை எழுதுவது தொடர்பாக இயக்குநர்கள் ராஜுமுருகன், நலன் குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், `கதை எழுதுகிறவர்கள் இயக்குநர்கள் ஆக ஆசைப்படுகிறார்கள். அதுதான் உண்மை. நாங்களும் அப்படித்தான். அந்த நிலை மாற வேண்டும் என நினைக்கிறோம். நிச்சயம் வரும் காலங்களில் கதை எழுதுபவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என நினைக்கிறோம். மாணவர்கள் நிறைய கதைகளை எழுத வேண்டும். கதை என்பதும் திரைக்கதை என்பதும் வேறு வேறு. இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் நாவல்களை சிறப்பான திரைக்கதையாக மாற்றுகிறார்கள். மாணவர்கள் நிறையவே பயணம் செய்ய வேண்டும். அதன்மூலம் நிறைய கதைகள் கிடைக்கும்” என்றனர்.

டிஜிட்டல் வீடியோ தளமான யூடியூபில் பணம் சம்பாதிப்பது தொடர்பாகப் பேசிய `ப்ளாக் ஷீப்' சேனலின் சி.இ.ஓ விக்னேஷ்காந்த், ``யூடியூப் மூலம் வரும் வருமானம் என்பது மிகக் குறைவு. தனியாக வீடியோ செய்பவர்கள் மட்டுமே லாபம் பார்க்க முடியும். எங்க டீமில் 88 பேர் இருக்கிறோம். அதனால் அதுபோன்று செய்ய முடியாது. இங்கு ஸ்பான்ஸர்ஸ் முக்கியம். அவர்களுக்காவும் நீங்கள் யோசிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் சவால்கள் நிறையவே இருக்கும். நிமிடத்துக்கு நிமிடம் கிடைக்கும் பெயர்களில் சேனல்கள் வருகின்றன. அதனால் கவனமாக, நமது கன்டென்ட் என்ன... நமக்கு என்ன வரும்... நம்ம டார்கெட் ஆடியன்ஸ் யார்... முதலியவற்றை முடிவு செய்து தெளிவாக இறங்க வேண்டும்” என்றார்.

இறுதியாக மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் வந்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். அவர் பேசும்போது, ``பாடல்கள்தான் என்னை வழிநடத்திச் செல்கின்றன. நான் திரைக்கதையுடன் பாடல்களுக்கான இடத்தையும் சேர்த்தே எழுதுகிறேன். இந்த இடத்தில் பாடல்கள் வேண்டும் எனக் கேட்டு வாங்கி நான் வைப்பதில்லை. `விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் `மன்னிப்பாயா...’ பாடல், ஸ்கிரிப்ட்டில் இருந்தது. அதைத்தான் ரஹ்மான் சார்கிட்ட சொன்னேன். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது” என்றவர், ``எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வரும் நவம்பர் 15-ம் தேதி கட்டாயம் வெளியாகும்" என்றவர்,

Gautham vasudev menon
Gautham vasudev menon

``தள்ளிப் போகாதே பாடல், படத்தில் இடம் பெற்றவிதம் தொடர்பாகப் பலர் கேள்வி கேட்கிறார்கள். ரஹ்மான் சாரிடம் காட்சியைச் சொன்னேன். உடனே `சூப்பர்’ என டியூன் கொடுத்தார், பாடல் வெளியானது. ஹிட் அடித்தது. அப்போது என்னுடன் பணியாற்றியவர்கள், `பாடல் செம ஹிட் சார். ஆனால், படத்தில் விபத்தின்போது பாடல் வருகிறது. அதை மாற்றி, புதிதாக வேறு மாதிரி எடுக்கலாமா?’ எனக் கேட்டார்கள். நான் சொன்னேன், `நிச்சயம் மாற்ற முடியாது. இந்தக் காட்சியைச் சொல்லித்தான் டியூன் வாங்கினேன். அவரின் கற்பனைதான் பாடலின் வெற்றிக்குக் காரணம். அந்தக் கற்பனைக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. நிச்சயம் அந்த இடத்தில்தான் பாடல் வரும் என்றேன்” என்றார் உற்சாகத்துடன்.

ஊடகத்துறையில் சாதித்த பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு