Published:Updated:

`'இந்தியன்-2' படத்தை நாங்கள் தயாரிக்கவே இல்லை!' - லைகா நிறுவனத்தின் புதிய ட்விஸ்ட்

லைகா, 2014-ம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் தயாரித்துவருகிறது. புதிய நிறுவனம் என்பதால், ஒரு அனுபவசாலியை ஆலோசகராக வைத்துக்கொள்ளாலாம் என்ற முடிவில் ஐங்கரன் கருணாமூர்த்தியை நியமித்தது.

Indian 2
Indian 2

தங்கள் நிறுவனத்தின் ஆலோசகர் என்ற பெயரில், ஐங்கரன் இன்டர்நேஷனல் கருணாமூர்த்தி, 120 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதாக லைகா நிறுவனம் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குநர் நீலகந்த் நாராயணபூர், அவர்களுடைய சட்ட ஆலோசனைக் குழுவுடன் இன்று சென்னை காவல் ஆணையரைச் சந்தித்து புகார் மனுவைக் கொடுத்தார்.

Lyca Productions
Lyca Productions

அந்தப் புகார் மனுவின்படி, '' லைகா, 2014-ம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் தயாரித்துவருகிறது. புதிய நிறுவனம் என்பதால், ஓர் அனுபவசாலியை ஆலோசகராக வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில், ஐங்கரன் கருணாமூர்த்தியை நியமித்துள்ளது. மேலும், நம்பிக்கையின் அடிப்படையில், கருணாமூர்த்தியிடம் எல்லா முக்கியப் பொறுப்புகளையும் அந்த நிறுவனம் ஒப்படைத்திருக்கிறது. இயக்குநர்களிடம் கதை கேட்பது, படம் ஒப்பந்தம் செய்வது, படக்குழுவுக்கு சம்பளம் கொடுப்பது, வெளிநாட்டு மற்றும் வெளிமாநில திரையரங்க உரிமைகளை விற்பது, எல்லாவற்றுக்கும் மேலாக படங்களைத் தயாரிப்பது என அனைத்து அதிகாரங்களையும் கொடுத்துவைத்திருந்தது.

இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, 'கத்தி', 'கோலமாவு கோகிலா', 'இப்படை வெல்லும்', 'தியா', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', 'எமன்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பிலும், வெளியீட்டிலும் வெவ்வேறு வகையில் பணம் கையாடல் மற்றும் மோசடி செய்திருக்கிறார் கருணாமூர்த்தி என இப்போது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறது லைகா. பானு என்கிற பெண் உட்பட, தன்னுடைய நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்த தன்னுடைய செல்வாக்கையும் பயன்படுத்தி, இந்த எல்லா மோசடிகளையும் அவர் செய்திருக்கிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Karunamoorthy
Karunamoorthy

இதுகுறித்து லைக்கா தரப்பு வழக்கறிஞர் ஷரண்யாவிடம் பேசினோம். ``அவங்க, இதுவரைக்கும் எவ்வளவு பண மதிப்புக்கு மோசடி பண்ணியிருக்காங்கன்னு கணக்கிடவே முடியல. இதுவரை நாங்க கண்டுபிடிச்ச வரைக்கும் 120 கோடி ரூபாய். இவ்ளோ பணத்துக்கும் அவர்கிட்ட கணக்கும் இல்லை. இத்தன வருஷமா எங்களோட நம்பிக்கையைப் பயன்படுத்தி முழுசா ஏமாத்திட்டார்" என்றார்.

Sharanya
Sharanya

மேலும், லைகாவின் அனுமதியில்லாமலேயே சில படங்களைத் தயாரித்திருக்கிறாராம் கருணாமூர்த்தி. ``2018-ம் ஆண்டு வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை எங்கள் அனுமதியில்லாமல் ஒப்பந்தம் செஞ்சு தயாரிச்சு, 14 கோடி ரூபாய் நஷ்டத்துல கொண்டுவந்துவிட்டுட்டார். இப்போ, 'இந்தியன்-2' படத்தையும் எங்கள் அனுமதியில்லாமல் தொடங்கிட்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பாதியில் நின்றதால், 4 கோடி ரூபாய் நஷ்டம் ஆச்சு" என்று அதிரவைத்தார் ஷரண்யா.