சினிமா
தொடர்கள்
Published:Updated:

“பிரிவின் வெற்றிடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதானதல்ல!”

 கபிலன்
பிரீமியம் ஸ்டோரி
News
கபிலன்

மகள் பிறந்தால் தூரிகை என்ற பெயர்தான் வைக்க வேண்டும் என அவ்வளவு ஆசையுடன் முடிவு செய்தோம். மகளே பிறந்தாள். இந்த அறை, அவள் வடிவமைத்ததுதான்.

`மனைவி இறக்கி

வைத்ததிலிருந்து

நான்தான்

சுமந்துகொண்டிருந்தேன்...

கடைசியாய் சுமந்த தீச்சட்டி வரை!’

சமீபத்தில் மரணித்த தன் மகளின் நினைவுகளைக் கவிதைகளாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் கபிலன். மகளின் புகைப்படம், மகள் பயன்படுத்திய பொருள்கள், புத்தகங்களைத் தன் அலுவலகத்தில் அடுக்கிக்கொண்டிருந்தவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டுப் பேசினோம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடல் எழுதிக்கொண்டிருப்பவரிடம் உரையாடியதிலிருந்து...

தூரிகை
தூரிகை

``பாடலாசிரியராக 20 வருடங்களைக் கடந்திருக்கிறீர்கள்...’’

``நான் வளர்ந்தது முழுக்க வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதிதான். அப்பா திராவிட இயக்கப் பின்புலத்தைச் சேர்ந்தவர். நாடகங்கள், பாடல்கள் எழுதுவார். அம்மாவின் இட்லிக்கடை எங்கள் வறுமையையும், மீந்துபோன இட்லிகள் பசியையும் விரட்டின. எங்கள் பகுதியில் யார் இறந்தாலும் கட்சிப் பாகுபாடின்றிக் கலந்துகொள்வார்கள். அவர்களுக்காக இரங்கல் கவிதை வாசிக்கப்படும். நூலகம், வாசிப்பு, யாப்பிலக்கணம் என இருந்த நான், 14 வயதில் இரங்கல் கவிதை எழுதி வாசித்தேன். அங்கு தொடங்கியதுதான் எல்லாம்.

பாஸ்போர்ட் ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். என் கையெழுத்து அழகாக இருக்கும். வி.ஐ.பி-களின் பாஸ்போர்ட்டையெல்லாம் என்னைத்தான் எழுதச் சொல்வார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, கமல்ஹாசன், யுவன் ஷங்கர் ராஜா எனப் பலரின் பாஸ்போர்ட்களை எழுதியிருக்கிறேன். ரஹ்மான் சாருக்கு பாஸ்போர்ட் ஆபீஸில் வேலை செய்த கபிலனை முன்பே தெரியும். என் முதல் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு கமல் சார் அதை வெளியிட்டார். கமல், ரஹ்மான் இருவரின் ‘தெனாலி’ படத்தில்தான் முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் எழுத முடியவில்லை. தரணியின் ‘தில்’ படத்தில் `உன் சமையலறையில்...' பாடல் முதல் பாடலானது. விஜய்க்கு ‘யூத்’ படத்தில் எழுதிய `ஆல்தோட்ட பூபதி நானடா' பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்தது. வித்யாசாகர், ரஹ்மான் சார் எனத் தொடர்ந்து பல நல்வாய்ப்புகள் கிடைத்தன. ஷங்கர் சாரின் `பாய்ஸ்' பட வாய்ப்பால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரப் பாடலாசிரியராகும் நம்பிக்கை வந்தது.’’

``ஹீரோ அறிமுகப் பாடல்களில் பறை இசை குறித்தெல்லாம் எழுதியது எதன் தாக்கத்தால்?’’

``அதற்குக் காரணம் என் நிலம். நான் வாழ்ந்த வடசென்னைப் பகுதி மக்களின் இசைக்கருவி பறைதான். சொற்ப வருமானத்துக்கு இறுதி ஊர்வலத்தில் அதை வாசிப்பர். அந்த உலகம் வேறு. அரசியல் சண்டை, குழுச் சண்டை இருந்ததே தவிர இதுவரை அங்கு சாதிச் சண்டையைப் பார்த்ததில்லை. பீடி சுற்றும் இஸ்லாமியர் வீட்டு பிரியாணி, கிறிஸ்துமஸ் கேக் என சமத்துவமான கொண்டாட்ட வாழ்வுதான். இத்தனை சாதிகள் இருப்பதே கல்லூரிக்குச் சென்றபின்புதான் தெரியும். கவிதைப் போட்டியில் வென்றபோது நண்பர்கள் சிலர் கோபமாகப் பார்த்ததன் காரணம் தெரிந்தது. அதன் பிறகுதான் அரசியல் சார்ந்த புத்தகங்கள் வாசித்தேன். நான் வளர்ந்த சூழலில் நிலவிய திராவிடச் சிந்தனை என்னுள் மேலோங்கியது. சரியான பாடல்களில் முற்போக்குச் சிந்தனையுடைய வரிகளைப் பயன்படுத்தினேன். ‘போக்கிரி’ உள்ளிட்ட பல படங்களின் பாடல்களில் அதைப் பயன்படுத்தினேன். விஜய் சாரும் பாராட்டினார். ‘என்னோடு நீ இருந்தால்’, ‘வாராயோ வாராயோ’, ‘மோகத் திரை’ எனக் காதல் பாடல்களின் ஊடே இதுவும் நடக்கும்.’’

“பிரிவின் வெற்றிடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதானதல்ல!”

``நிறைய கானாப் பாடல்கள் எழுதியிருக்கிறீரகள். தற்போது சென்னை நிலப்பரப்பு சார்ந்த கானாப் பாடல்கள் அதிக அளவில் வருவதை கவனிக்கிறீர்களா..?”

``கானா என்பது வரிகளை அடிப்படையாகக் கொண்டதில்லை. வார்த்தைகளை ஸ்லாங்காக இழுத்துப் பாடுவது. உன்னிகிருஷ்ணன் பாடும் பாடலை தேவா பாடினால் அது கானாவாக மாறும். அது அந்த வட்டாரத்தின் மொழி. சென்னையின் கானாவைத் தமிழ்த் திரையிசையில் பயன்படுத்தியதில் இசையமைப்பாளர் தேவாவின் பங்கு அளப்பரியது. அவர் மீனவப் பகுதியிலிருந்து வந்ததால், மக்களின் கலை அவருக்குத் தெரிந்திருந்தது. அது அவருக்கு வெற்றியையும் கொடுத்தது. ரஹ்மான், இளையராஜா போன்றவர்களுக்கு மத்தியில் தேவாவின் தனித்துவமாகவும் அது அமைந்தது. பள்ளிகளில் சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டு அதுகுறித்த கட்டுரை எழுதச் சொல்வார்களே அப்படித்தான் எனக்கு சென்னையைப் பற்றி எழுதுவது. ‘மெட்ராஸ்’ படத்தின் `சென்னை வடசென்னை' பாடல் சென்னையிலுள்ள உழைக்கும் மக்களின் தொழில், இசை, விளையாட்டு, உழைப்பு, வாழ்வு குறித்த பதிவு. நான் எழுதியதில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல். அந்தப் பாடல், 35 ஆண்டுகள் நான் வாழ்ந்த வாழ்வின் சாட்சியம்.’’

``பா.இரஞ்சித், மிஷ்கின் படங்களில் பணியாற்றிய அனுபவம்?’’

``மற்றவர்கள் படங்களில் பாடல் எழுதும்போது, `வேணாம்' எனச் சில வரிகளைச் சொல்வார்களோ என்ற தயக்கம் இருக்கும். இரஞ்சித்திடம் அது இருக்காது. அவரின் முதல் படத்துக்கு கானாப் பாடலை சற்று அழுத்தமான வரிகளோடு எழுதிக்கொடுத்தேன். `சூப்பர்ண்ணா...' என்றார். தொடர்ந்து அவர் படங்களில் எழுதி வருகிறேன். மிஷ்கின் உதவி இயக்குநராக இருந்தபோதே எனக்கு அறிமுகம். அவருடன் பணிபுரிவது நூலகத்தில் அமர்ந்து எழுதுவதுபோல இருக்கும். `சைக்கோ' படத்தில் எனக்காக இளையராஜாவிடம் வாதம் செய்து என் பாடல் வரிகளைப் பயன்படுத்தினார்.’’

``புரொமோஷன் பாடல்கள் அதிகமாக வெளியாகி வெற்றியடைகின்றன. பாடலற்ற படங்கள் வருகின்றன. பாடலாசிரியர்களுக்கான காலம் இப்போதும் இருக்கிறதா?’’

``நாம் தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள். கதையோ, படமோ தனக்கான பாடலைக் கேட்கும். ஏனென்றால், பாடல்கள்வழி உருவான சமூகம் இது.’’

``மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணியுடன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நீங்களும் இணைந்திருக்கிறீர்கள்...’’

``ரஹ்மான் சார் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது. எனக்கு அவ்வளவு எளிமையான நட்பை, அன்பைக் கொடுக்கக் கூடியவர். கோவிட் காலத்துக்கு முன்பொரு நாள் ஸ்டூடியோவுக்கு அழைத்தார். அங்கு மணிரத்னம் சாரும் இருந்தார். அப்போதுதான் பொன்னியின் செல்வனுக்குப் பாட்டெழுத அழைக்கப்பட்டது தெரிந்தது. கம்சன் குறித்த கூத்துப்பாடல். அர்ஜுனன் தபசு படித்த பிறகு `ராட்சஸ மாமனே' பாடல் எழுதிக்கொடுத்தேன். அடுத்த பாகத்தில் மற்றொரு பாடலும் எழுதியிருக்கிறேன். என் தமிழுக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பு அது. மகளின் மறைவால் இன்னும் நான் படத்தைப் பார்க்கவில்லை.’’

 கபிலன்
கபிலன்

``உங்கள் மகள் தூரிகை...’’

``மகள் பிறந்தால் தூரிகை என்ற பெயர்தான் வைக்க வேண்டும் என அவ்வளவு ஆசையுடன் முடிவு செய்தோம். மகளே பிறந்தாள். இந்த அறை, அவள் வடிவமைத்ததுதான். அவளின் ஞாபகங்கள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. தூரிகை பவுண்டேசன், தூரிகை பதிப்பகம் எனத் தொடங்கவிருக்கிறேன். பதிப்பகம் என் எழுத்துகளைப் பதிப்பிக்க, பவுண்டேசன் எளியவர்களுக்காக எனத் திட்டமிட்டுள்ளேன். பிரிவின் வெற்றிடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதானல்ல.’’