Published:Updated:

``மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்!" - பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி

நிரஞ்சன் பாரதி
நிரஞ்சன் பாரதி

பாரதியாரின் எள்ளுப் பேரனான நிரஞ்சன் பாரதியுடன் ஒரு சின்ன உரையாடல்!

``அடிப்படையில் இன்ஜினீயரிங் படிச்ச பையன் நான். `வானமே உன் எல்லை என்ன..?'ங்கிற நூல் எழுதியிருக்கேன். சில பத்திரிகை அலுவலகத்திலும் வேலை பார்த்திருக்கேன். இப்போ இதையெல்லாம் விட்டுட்டு இணையத்தில் தமிழ் கத்துக்கொடுக்குறது, சினிமாக்களுக்கு பாடல் வரிகள் எழுதுறதுனு என் போக்கை மாத்திக்கிட்டேன். தவிர `பசுமை கவிஞன்'னு ஒரு யூடியூப் சேனலை நடத்திட்டு வர்றேன்.

`கோவா' படத்தோட ஷூட்டிங் சமயத்துல வெங்கட்பிரபு சார் மூலமா யுவனுடைய அறிமுகம் கிடைச்சது. அப்புறம் `மங்கத்தா' படத்துடைய வேலைகளில் வெங்கட்பிரபு பிஸியா இருந்த சமயம் பாடல் எழுதுறதுக்கான வாய்ப்பு கிடைக்குமானு கேட்டிருந்தேன். உடனே வாய்ப்பும் கொடுத்தார். முதல் படம்ங்கிறதால கொஞ்சம் பதற்றமா இருந்தது. இந்தப் பாடலை எழுதும்போது யுவன், வெங்கட் பிரபு, பிரேம்ஜினு மூணு பேருமே என்னைச் சுத்தி இருந்தாங்க. 3 மணி நேரத்துல வரிகளை எழுதிக் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

பாடல் உருவாகும் விதத்தை வெங்கட்பிரபு முன்னாடியே கற்பனை செய்து வைத்திருந்தார். அதுக்குத் தகுந்த மாதிரி டியூனையும் யுவன் கொடுத்தார். அவர் எப்போதும் எளிமையான வரிகளை விரும்பக் கூடியவர். அதனால இலக்கிய நடை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார். முதல்ல ரெண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். யுவன் திருப்தியாகலை. மூணாவது முறையா `கண்ணாடி நான் கண் ஜாடை நீ'னு வரிகளைக் கொடுத்தேன். உடனே ஓகே சொல்லிட்டார். எழுதிக் கொடுத்த கொஞ்ச நேரத்துல எஸ்.பி.பி சரண் அதைப் பாடினார். அதுக்கு அடுத்த நாள் பவதாரணி பாடினாங்க. என்னுடைய வரிகளை இவங்க பாடும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

இந்தப் படத்துக்காக வாலி மற்றும் கங்கை அமரன் சாரோட நானும் வரிகள் எழுதினது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது. பாடலை எழுதுறதுக்கு முன்னாடி வாலி சாருக்குப் போன் பண்ணி ஆசீர்வாதம் வாங்கினேன். இந்தப் பாட்டு அஜித் சாருக்கு காட்சியமைக்கப்பட்டிருந்தா இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும். படத்துடைய யூனிட்டுக்கு இந்தப் பாட்டை பாரதியாருடைய பேரன் எழுதியிருக்கார்னு தெரியும். அஜித் சாருக்கும் என்னுடைய வரிகள் பிடிச்சிருந்ததா கேள்விப்பட்டேன். ஆனா, அவரைப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கலை.

`` 'லாங் கேப்' அஜித், '15 வருட நட்பு' யுவன், சேரனுக்கு எழுதிய 40 சரணம்!" - பா.விஜய் ஷேரிங்ஸ்

தொடர்ந்து யுவன் பாடல்களுக்கு வரிகள் எழுத ஆரம்பிச்சேன். `சென்னை-28 பார்ட் 2', `வடகறி', `செம போதே ஆகாதே'னு சில படங்களுக்கு வரிகள் எழுதியிருக்கேன். `பியார் பிரேமா காதல்' படத்துல `ஏய் பெண்ணே' பாடலுக்கு வரிகளை நான்தான் எழுதினேன். அதுக்கப்புறம் யுவன், பரீட்சை பேப்பரைத் திருத்துற மாதிரி வரிகளில் சில திருத்தம் செய்தார். சில இடங்கள்ல, `ஏதாவது மேஜிக் பண்ணுங்க பாரதி'னு கேட்டுக்கிட்டார். காட்சியுடைய சூழலுக்குத் தகுந்த மாதிரி இந்தப் பாட்டும் நல்ல முறையில அமைஞ்சது. யுவன் தயாரிக்கிற முதல் படம்ங்கிறதால எதிர்பார்ப்பும் அதிகமா இருந்தது. நினைத்த மாதிரியே படமும், பாடல்களும் ஹிட்டானது. நிறைய ஸ்டேஜ்ல யுவன் இந்தப் பாட்டைப் பாடியிருக்கார். என்னுடைய கரியர்ல இது முக்கியமான பாட்டு. இதுக்கு நான் யுவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவருக்குப் பிடித்த மூன்று பாடலாசிரியர்கள் லிஸ்ட்டுல மூணாவதா என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருந்தார். பெருமையா இருந்தது. தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் பாடல்களுக்கு வரிகள் எழுத முயற்சி பண்ணிட்டிருக்கேன். சரியான தருணம் இன்னும் அமையலை.

``பாரதியாரின் எள்ளுப் பேரனாக, வாய்ப்புகள் கேட்கும்போது எந்த மாதிரியான மனநிலை இருக்கும்?"

நிரஞ்சன் பாரதி, யுவன், வெங்கட்பிரபு
நிரஞ்சன் பாரதி, யுவன், வெங்கட்பிரபு

``பிடிச்சுதான் சினிமாவுக்கு வந்தேன். பாடல்கள் எழுதுறதே முழு நேர வேலையாகத் தேர்ந்தெடுத்ததால சில விஷயங்களை மாத்திக்கிட்டேன். இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள் எழுதுறதை மட்டும் அப்பா தவிர்த்துக்கச் சொன்னார். வாலி சார் சொல்ற மாதிரி இஷ்டப்பட்டுதான் இப்போ கஷ்டப்படுறேன். மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்கணும்; அதையும் எளிமையா கொடுக்கணும்னு சிரத்தை எடுத்துக்கிட்டு வேலை பார்க்கிறேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது. இப்போ நிறைய கத்துட்டு வர்றேன். சமீபத்துல என் வரிகளுக்கு சிம்புகூட ஒரு பாடல் பாடியிருக்கார்."

``உங்க குடும்பம் பற்றி சொல்லுங்க?"

நிரஞ்சன் பாரதி
நிரஞ்சன் பாரதி

``அப்பா பெயர் ராஜ்குமார் பாரதி. கர்னாடகப் பாடகர். சினிமாவுல அதிகமா பாடினதில்லை. கடைசியா `பாரதி' படத்துல `கேளடா மானிடா' பாடலைப் பாடியிருந்தார். 17 வருடங்களுக்கு முன்னாடி ஏற்பட்ட நரம்புப் பிரச்னையால இப்போ பாட முடியலை. அதனால மேடைகள்ல நடக்கிற பரதநாட்டிய கலைக்கு இசையமைக்க ஆரம்பிச்சிருக்கார். கலைமாமணி விருதுகூட வாங்கியிருக்கார். அம்மா டெக்னிக்கல் ரைட்டிங் துறையில் இருக்காங்க. மனைவி, ஐடி துறையில் வேலை பார்க்கிறாங்க. பாரதியாருடைய குடும்பம்னு சொல்றதுல எங்களுக்குப் பெருமையா இருக்கு. அதைத் தாண்டி இதை புண்ணியமா நினைக்குறோம். அவரோட ஆசீர்வாதத்துனாலதான் இன்னைக்கு நானும் பாடலாசிரியரா வந்திருக்கேன்னு சொல்லலாம்."

அடுத்த கட்டுரைக்கு