Published:Updated:

`` `வசீகரா’ உருவான கதை... கெளதமின் ரசனையும் திறமையும்!" - தாமரையின் `மின்னலே' நினைவுகள்

`மின்னலே' குறித்தும் அந்தப் படத்துக்குப் பாடல்கள் எழுதிய அனுபவம் குறித்தும் கவிஞர் தாமரையிடம் பேசினோம்.

`மின்னலே' வெளியாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இயக்குநராக கெளதம் வாசுதேவ் மேனனும், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜும் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த முதல் திரைப்படம். இதன் கதையும், கதைக்கேற்ற பாடல்களும் படத்துக்கு வலு சேர்க்க, 100 நாள்களை வெற்றிகரமாகத் திரையரங்குகளில் கடந்தது.

கவிஞர் தாமரை
கவிஞர் தாமரை

`இரு விழி உனது', `வசீகரா', `இவன் யாரோ', என இந்தப் படத்தில் கவிஞர் தாமரையின் வரிகளில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

`மின்னலே' குறித்தும், அந்தப் படத்துக்குப் பாடல்கள் எழுதிய அனுபவம் குறித்தும் கவிஞர் தாமரையிடம் பேசினோம். `மின்னலே' நினைவுகளில் மூழ்கியவர் மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

" 'மின்னலே' ரிலீஸாகி 19 ஆண்டுகள் ஆகலாம். ஆனா, படம் வெளிவர்றதுக்கு ஒரு ஆண்டு முன்னாடியே படத்துடைய பாடல்கள் எல்லாம் பதிவு செஞ்சதால, இதை மின்னலேவின் 20-வது ஆண்டுன்னே சொல்லலாம். `மின்னலே' படத்துக்கு கவிஞர் வாலிதான் அந்த சமயத்துல எல்லாப் பாடல்களும் எழுத ஒப்பந்தமாகிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ்னு ஒரு புது இசையமைப்பாளர், ஆஸ்திரேலியாவுல இருந்து வந்திருக்கார், தமிழ் தெரியாது, ஏ.ஆர். ரஹ்மானுடைய அசிஸ்டென்ட் அப்படி, இப்படினு ஏகப்பட்ட வதந்திகள் அந்த சமயத்துல அவரைச் சுத்தி பரபரப்பா போயிட்டிருந்தது. நான் எழுதின `தென்றல் எந்தன்', `மல்லிகைப்பூவே' முதலான பாடல்களைப் பதிவு செஞ்சிருந்த ஒலிநாடாவை கெளதம்கிட்ட கொடுத்திருந்தேன். அவருக்குப் பாடல்கள் பிடிச்சிருந்தாலும், வாலி அவர்கள் எல்லாப் பாடல்களும் எழுத ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்ததாலும், ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லி அனுப்பறேன்னு என்னுடைய எண் மட்டும் வாங்கிட்டார்.

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன்
ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன்

கொஞ்ச நாள் கழிச்சு இரண்டாவது முறை கெளதமை போய்ப் பார்த்தபோது, `உங்க பாடல்கள் எல்லாம் கார்ல போகும்போது கேட்டேன். ரொம்ப வித்தியாசமான வரிகள். நல்லா இருந்தது'னு சொன்னார். ஆனா, அப்பவும் `மின்னலே' படத்துல பாடல்கள் எழுதறதுக்கான வாய்ப்பு உறுதியாகலை. அப்புறம் சில காரணங்களால வாலி அவர்களால் மூன்று பாடல்களுக்குப் பிறகு மற்ற பாடல்களை எழுத முடியாத சூழல் வந்துடுச்சு. அந்த சமயத்துலதான் கெளதம் எனக்கு `மின்னலே'ல எழுத வாய்ப்புத் தந்தார்.

ஹாரிஸ்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். அப்பதான், ஹாரிஸ் தமிழ் நல்லாப் பேசுவார், இங்க பிறந்து வளர்ந்தவர்தான், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் கீ போர்ட் வாசிச்சிருக்கார், இந்த ஆஸ்திரேலியா கதைகள் எல்லாம் சும்மா வதந்திதான்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஹாரிஸ்கிட்ட `ஓ... உங்களுக்குத் தமிழ் தெரியுமா'னு வியந்தது இன்னும் நினைவில இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கெளதம் என்கிட்ட `மின்னலே' படத்துடைய கதையை முழுசா சொன்னார். அந்தக் காலகட்டத்துல, படங்கள்ல வழக்கமான வார்த்தைகளை வைத்து ஒரே மாதிரிதான் பாட்டு எழுதுவாங்க. பெண்ணுடைய பார்வையில காதலை சொல்றதைப் புரிஞ்சுக்கறது பல இயக்குநர்களுக்குக் கடினமான நிகழ்வா இருந்தது. ஒரு பாடலாசிரியரா பாடல் எழுதும்போது எனக்கு இருந்த இந்தச் சிரமங்களை கெளதம்கிட்ட சொன்னேன். ஒரு காதல் பாட்டுல நிலா, மலர், வானவில்னு வழக்கமான வார்த்தைகள் எல்லாம் வராம எழுத ஆசையா இருக்குனு சொன்னேன். `அப்படியா... புதுசா இருக்கே... இந்தப் படத்துலயே நீங்க அப்படி எழுதலாமே'ன்னு உற்சாகப்படுத்தினார்."

தாமரை, கெளதம் மேனன்
தாமரை, கெளதம் மேனன்

அதுக்கப்புறம் எனக்கு ஒரு மெட்டுப் போட்டுக் காண்பிச்சாங்க. அதுதான் `வசீகரா'. ஹாரிஸ் - கௌதமுக்கு நான் எழுதின முதல் பாடலும் அதுதான். அந்த மெட்டைக் கேட்டதுமே, `இந்த மெட்டுக்கு வழக்கமா நிலாவிலே, கனாவிலேன்னுதான் ஆரம்பிப்பாங்க. எனக்கு அதுல விருப்பமில்லை. `மனோகரா, வசீகரான்னு இதுமாதிரியான வார்த்தைகள்ல இருந்து ஆரம்பிக்கறேன்'னு சொன்னேன். அதைக் கேட்டவுடனே அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அந்தச் சமயத்துல கெளதம், ஹாரிஸ் எல்லாருக்கும் முதல் படம்ங்கிறதால புது சிந்தனைகளுக்கும் பரிசோதனை முயற்சிகளுக்கும் தயாரா இருந்தாங்க. இதுதான் வேணும், அதுதான் வேணும்னு எந்த ஒரு முன்முடிவும் இல்லாம இருந்தாங்க. அதனால, என்னாலயும் பாட்டை நான் நினைச்ச மாதிரி எடுத்துட்டுப் போக முடிஞ்சது.

வரிகள், இசைக்கும் காட்சிகளுக்கும் ஏத்த மாதிரி ரொம்பப் பொருத்தமா இருந்தது. எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. `வசீகரா' பாடல், நான் எழுதின முதல் வார்த்தையில இருந்து கடைசி வார்த்தை வரை எந்தவொரு மாற்றமும் இல்லாம, யாருடைய குறுக்கீடும் இல்லாம அப்படியே வந்த என் வகையிலான பாட்டு. வேறொரு இயக்குநரா இருந்தா கண்டிப்பா இது சாத்தியமாகி இருக்காது.

'மின்னலே'
'மின்னலே'
ஐ.பி.எஸ், சுவிட்சர்லாந்து ஷூட், படத்தின் வில்லி? - அஜித்தின் `வலிமை' அப்டேட்ஸ்!

'வசீகரா' பாட்டு அங்க இருந்த எல்லாருக்குமே எந்தக் குறையும் இல்லாம பிடிச்சிருந்ததால, அடுத்த பாட்டான `இவன் யாரோ'வையும், அடுத்து `இருவிழி உனது' பாடலையும் நான் எழுதினேன். வாலி அவர்கள் மூணு பாடல்களை முன்பே எழுதியிருந்தார். என்னுடைய வரிகள்கொண்ட பாடல்களைக் கேட்டதுக்குப் பிறகு வார்த்தைகள், இசைன்னு எல்லாமே புதுசா இருந்தது. இது எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி. அங்கு தொடங்கியது எங்களுடைய இந்தப் பெரும் பயணம்" என்றார் உற்சாகமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு