சினிமாத்துறைக்குள் 'மின்னலா'கத் தன் பயணத்தை ஆரம்பித்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் 20 ஆண்டுகளைக் கடந்து 'துருவ நட்சத்திரமா'கத் திரையில் தனக்கான இடத்தை வெற்றிகரமாகத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர், பாடகர், இசை வெளியீட்டாளர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவின் முக்கியத்துறைகளில் முத்திரை பதித்து, தற்போது OTT தளத்திலும் தடம் பதித்திருக்கிறார்.

கெளதம் மேனன் படங்களில் இசையும் காதல் பாடல்களும் எப்பொழுதுமே ஸ்பெஷல். அவருடைய பெரும்பாலான படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றிய கவிஞர் தாமரையிடம் கெளதம் மேனனின் 20 ஆண்டுத் திரைப்பயணம் குறித்தும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதல் சந்திப்பு எப்படி நடந்தது?

"'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தொடங்கி, சுஹாசினி அவர்கள் அப்போ தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துட்டு இருந்தாங்க. அந்தக் காலகட்டத்துல அவருடைய தொடர்களுக்கான தலைப்புப் பாடல் நான்தான் எழுதிட்டு இருந்தேன். அதற்காக அடிக்கடி அவர்கள் அலுவலகம் போய்வருவேன். அந்த சமயம், மணிரத்னம் மாதவன்ங்கற புதுமுகத்தை வைத்து 'அலைபாயுதே' எடுத்துகிட்டிருந்தார். ஒருமுறை 'மெட்ராஸ் டாக்கீஸ்' அலுவலகத்துக்குப் போயிருந்தபோது, `டாக்டர் முரளி மனோகர் தயாரிப்புல, புதுமுக இயக்குநர் கெளதம்னு ஒருத்தரோட இயக்கத்துல, மாதவன் நடிக்க இருக்கார். தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு நீங்க போய்ப் பாருங்க'ன்னு சொன்னாங்க. 1997-ல இருந்தே நான் பாடல்கள் எழுதிட்டு இருந்தாலும், திரைத்துறையில அந்த சமயத்துல போராடிக்கிட்டுதான் இருந்தேன். நான் 20 பாடல்களுக்கும் மேல எழுதி இருந்தாலும் 12 பாடல்கள்தான் வெளிவந்திருக்கும். டாக்டர் முரளி மனோகரின் அலுவலகத்துக்குப் போய், அவர் சொல்லி அங்கேயே கௌதமை சந்திச்சு என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். ஒரே ஊர்க்காரங்க வெளிநாட்டுல சந்திச்சிகிட்டா எப்படி ஒரு மகிழ்ச்சி வருமோ அந்த மாதிரி நாங்க ரெண்டு பேரும் பொறியாளர்கள் அப்படிங்கறதால எங்களுக்குள்ள ஒரு புன்னகை அங்கயே ஆரம்பமாகிடுச்சு. அவர் படிச்ச படிப்பு தொடர்பா எங்கயும் வேலை செய்யலை. ஆனா, நான் ஏழு ஆண்டு ஒரு பெரிய தொழிற்சாலைல வேலை பார்த்துட்டுத்தான் வந்தேன். 'I have an Engineer inside me Gautam'ன்னு சொல்வேன். `மின்னலே'ல பாடல்கள் எழுத எனக்கு வாய்ப்புக் கொடுக்க திடீர்னுதான் கௌதமுக்கு சூழல் ஏற்பட்டது. ஏன்னா வாலி அவர்கள்தான் எல்லாப் பாடல்களையும் எழுதறதா இருந்தது. பிறகு நான் மூன்று பாடல்கள், வாலி மூன்று பாடல்கள்னு மாறிச்சு.
இப்படி ஆரம்பிச்ச எங்க நட்புதான் கெளதமோட அடுத்த படமான 'காக்க காக்க'ல பெண் பாடலாசிரியரை நம்பி முழுப்படத்துக்கும் எல்லாப் பாடல்களையும் எழுதறதுக்கு வாய்ப்புக் கொடுக்கறதுல போய் முடிஞ்சது.''
கெளதம் மேனனின் தமிழ் ஆர்வம் பற்றிச் சொல்லுங்க?

"ஆங்கிலமும் இந்தியும் முதல் இரண்டு மொழியா எடுத்து படிச்சிருந்ததால, கௌதமுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா, தமிழ் நல்லா பேசுவார். அவர் மலையாளியாக அறியப்பட்டிருந்தாலும், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்ங்கறதாலயும் அம்மா தமிழர்ங்கறதாலயும் தமிழராகத்தான் இருக்கிறார். அவர் தமிழ்ல துளிக்கூட மலையாள வாடை அடிக்காது. பழைய பாடல்கள்ல ரொம்ப ஆர்வம். தமிழ் திரைக்கதையைக் கூட அப்படியே ஆங்கிலத்துல எழுதி வச்சிருப்பார். அதுமாதிரிதான் நான் எழுதற பாடல்களையும் உதவி இயக்குநர் மூலமா, ஆங்கிலத்துல எழுதிப் படிச்சு பாடிலாம் பார்த்து, தெரியாத வார்த்தைகளுக்கு என்கிட்ட பொருள் கேட்டுத் தெரிஞ்சுக்குவார்.
முதல் படம் முடிச்சு இரண்டாவது படம் ஆரம்பிக்கும்போதெல்லாம் கெளதமும், ஹாரிசும் நல்லாவே தமிழ் வாசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இவங்க இரண்டு பேரோட தமிழ் பெருமளவு முன்னேற்றம் அடைஞ்சதுல என்னுடைய பங்கு பெரிதுன்னு பெருமைப்பட்டுக்கலாம். நான் பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காம நல்ல தமிழ்ல மட்டும்தான் பேசுவேன். அதைக் கிண்டல் பண்ணாம ரசிச்சுக் கேட்பாங்க. நான் எழுதக்கூடிய பாடல்களும் அப்படித்தான். கொள்கை முடிவுன்னு நான் சொன்னபோது எந்த ஒரு மறுப்பும் இல்லாம, என்னுடைய கொள்கைக்கு மரியாதை கொடுத்து அப்படியே பண்ணுங்கன்னு சொன்னார். இந்த மாதிரி ஒரே அலைவரிசை அரிதாகதான் அமையும். நாங்க சேர்ந்து வேலை பார்த்த படங்கள்ல பாடல்கள் சிறப்பா வர்றதுக்கு இது முதன்மையான காரணம். அதனால, ஒரு பாடலாசிரியரா நான் பணிபுரியறதுக்கான சிறந்த இயக்குநர்னா முதலிடம் கெளதமுக்குத்தான் தருவேன். நானும் சரி, ஹாரிஸும் சரி, பாடல் விடயத்துல எல்லாமும் சரியா இருக்கணும்னு எதிர்பார்ப்போம். இதை கௌதம் நல்லா புரிஞ்சு வெச்சிருந்ததால அதுக்கான வழிவகைகளைச் செய்து கொடுத்துருவார். அதனால் பாடல்கள் தரமா, தனித்தன்மையோட இருக்கும்."
கெளதம் மேனன் தமிழ்ல இயக்கின பல படங்கள்ல வேலை பார்த்த அனுபவம்?

"தமிழ்ல கெளதம் இயக்கி வெளியான 11 படங்கள்ல, நான் 9 படங்களில் எழுதியிருக்கேன். அடுத்து வெளிவர இருக்கிற 'துருவ நட்சத்திரம்'லயும் எழுதியிருக்கேன். அவர் இயக்கின 'நடுநிசி நாய்கள்' படத்தில் பாடல்கள் இல்லை. 'நீதானே என் பொன்வசந்தம்'ல வழக்கம்போல் நான்தான் எழுதறதா இருந்தது. கௌதமும் அதைத்தான் விரும்பினார். ஆனா, சில காரணங்களால அது நடக்காமப் போயிருச்சு."
கெளதம் மேனன் படங்கள்ல எழுதின எந்தப் பாடலுக்கு குறைவான நேரம், அதிக நேரம் எடுத்துக்கிட்டது?

" 'வேட்டையாடு விளையாடு' கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளா அலைக்கழிச்ச படம். வெளிய வருமா இல்லையாங்கற சூழல்ல போயிட்டு இருந்தது. அந்தப் படத்துல வர 'வெள்ளி நிலவே' பாடல் எழுத ஆறு மாசம் எடுத்துக்கிட்டேன். பின்ன... பல்லவி கொஞ்சம், சரணம் கொஞ்சம், தூண்டில் வரி கொஞ்சம்னு மூணுமாசத்துக்கொரு தரம், மெட்டு வரும் போதெல்லாம் எழுதினா.... பெரும்பாலும், பாடல் வரிகளை சரின்னு சொல்லத் தாமதம் ஆகுதுனா அதுக்குக் காரணம் ஹாரிசாதான் இருக்கும் (சிரிக்கிறார்).
'இரு விழி உனது' பாடல் அவசரமா வேணும்னு திடீர்னு கேட்டுக்கிட்டதால சீக்கிரமே முடிச்ச பாடல்! அதேமாதிரி 'வாரணம் ஆயிரம்' படத்துல வர 'என் காதல் பொய்யும் இல்லை' பாடலும் சீக்கிரமா முடிச்சாச்சு. ஏன்னா, காட்சிப்படுத்தின பிறகு எழுதின பாடல் அது. படமாக்கின பிறகு, அந்த இடத்துல ஒரு பாடல் இருக்கணும்னு கெளதம் விரும்பினார். காட்சிகளை எங்ககிட்ட கொடுத்துட்டார். படப்பிடிப்பு இருந்ததால பாடல் எழுதற சமயத்துல அவரால இருக்க முடியல.
'இயக்குநர் இல்லாம இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் எப்படி ஒரு பாடல் செய்யறீங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கும் ஆர்வமா இருக்கு. ஒரு பார்வையாளரா எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்க'னு சொன்னார். ஹாரிஸ் இந்தப் பாடலுக்காகப் போட்ட மெட்டு ஆகா ஓகோ. பாடலையும் இசையையும் கேட்டுட்டு கெளதம் என்ன சொல்லப் போறார்ன்னு காத்திருந்தது ஞாபகம் இருக்கு. பாடல் கேட்டுட்டு செல்பேசியில கூப்பிட்டு, 'கார்ல திரும்பத் திரும்ப இந்தப் பாட்டைக் கேட்டுட்டுப் போயிட்டு இருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்கீங்க?'ன்னு ரொம்பவே ரசிச்சு சொன்னார்."
சூழலை ரசிச்சு எந்தப் படத்துக்காகப் பாடல்கள் எழுதினீங்க?

”எல்லா பாடல்களுக்குமே எதாவதொரு வித்தியாசமான களம் கொடுப்பார். 'காக்க காக்க' படத்துல வர்ற 'உயிரின் உயிரே' பாடல் அனுபவம் மறக்க முடியாதது. கதாநாயகன் வில்லனால சுடப்பட்டு தண்ணிக்குள்ள இருக்கும்போது பாடல் ஆரம்பமாகுதுனு ஒரு புது களம் கொடுத்தார் கெளதம். கதாநாயகன் தண்ணிக்குள்ள சாகற சூழல் அப்போ காதலியை நினைக்கிறார். இங்க பாட்டு வேணும்னு கேட்கும்போது எனக்கு மலைப்பா இருந்தது. என்ன எழுதறதுன்னு யோசிக்க வேண்டியதா இருந்தது. நாயகன் இரண்டு மூன்று நிமிடங்கள்தான் தண்ணிக்குள்ள இருந்திருப்பான். ஆனா ஒரு முழு வாழ்க்கையையும் அதுக்குள்ள நடக்கற மாதிரி தோற்றம் கொடுக்கணும். அதுல ஊக்கம் வந்துதான், 'தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும்' போன்ற வரிகளை எழுதினேன்."
பாடல்கள் மூலமும் கதை சொல்லக்கூடியவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி இருக்கும் போது அது உங்களுக்கு சவாலான விஷயமா இருந்ததா இல்லை சுவாரஸ்யமா இருந்ததா?

"சவால்களைச் சந்திக்கறதே சுவாரஸ்யம்தானே? அதனால, கெளதம் படத்தில காட்சிகளுக்கு ஏற்ற பாடல்கள் எழுதறதுங்கறது சுவாரஸ்யமானதா இருக்கும்.
'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்துல வர 'கரு கரு விழிகளால்' பாடல் நான் எழுதினதுலயே வித்தியாசமான சூழல் அமைஞ்ச ஒண்ணு. படத்துல அந்தப் பொண்ணு மோசமானவங்கன்னு எங்களுக்குத் தெரியும், பார்வையாளர்களுக்குத் தெரியாது. படத்தின் பிற்பகுதியில்தான் தெரியும். அதனால அதை மறைமுகமா உணர்த்தற மாதிரி, 'தாமரை இலை நீர் நீதானா... புயல் தரும் தென்றல் நீதானா?' மாதிரியான வரிகள் பாடல்ல வரதைக் கவனிச்சா தெரியும்.
சில படங்கள்ல, 'நீங்க பாடல் எழுதுங்க, அதுக்கேத்த மாதிரி பாடல் காட்சிகள் அமைச்சிக்கலாம்'ன்னு சொல்வார். 'வாரணம் ஆயிரம்' படத்துல கதாநாயகன் ரயில்ல ஒரு பொண்ணைப் பார்த்து அவளோட அழகுல பிரமிச்சிருவான். அந்த இடத்துல பாடல் தொடங்குது. அந்தப் பாடல்ல காட்சிகள் எப்படி இருக்கப் போகுதுனு தெரியாது. அழகு வர்ணனை அவ்வளவுதான். நான் சுதந்திரமா எழுதினதுக்கேத்த மாதிரி காட்சிப் படுத்திகிட்டார்.
அதே மாதிரிதான், 'காக்க காக்க'ல 'ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி' பாடலும். கதாநாயகி ஒரு ஆசிரியை, பள்ளிக்குப் போவாங்க, குழந்தைங்களோட இருப்பாங்க, கிட்டார் வாசிப்பாங்க இப்படி அவங்களோட குணாதிசயங்களை எல்லாம் என்கிட்ட சொல்லிட்டாங்க. அதை வைத்து வர்ணனையா எழுதிட்டேன். ஆனா, அதைக் காட்சியாய் எப்படி எடுத்துக் கோக்கப் போறார்னு எனக்குத் தெரியாது. பாடல் நான் எழுதினதுக்குப் பிறகுதான் படமாக்கப்பட்டது. அந்தப் பாடல்ல 'மரகத சோம்பல் முறிப்பாளே'னு ஒரு வரி வரும். அதுக்கு என்ன பொருள்னு கெளதம் படப்பிடிப்பு தளத்திலிருந்து தொலைபேசி பண்ணிக் கேட்டார். 'அடுத்தவரி 'புல்வெளி போலே சிலிர்ப்பாளே'னு வரும். பனியில் நனைஞ்ச ஒரு மரகதப் புல்வெளி மாதிரி, தூங்கி எழும்போது உற்சாகமா இருக்கக்கூடிய பெண் அவள்'ங்கற பொருள்ல நான் எழுதிருக்கறதைச் சொன்னேன். அதுக்கேத்த மாதிரி காட்சிப்படுத்தினார் கெளதம். இது மாதிரி நிறைய நிகழ்வுகள்."
கெளதம் மேனன் படங்கள்னாலே இசை ஹாரிஸும், பாடல்கள் தாமரையும்னு இயல்பாவே ஒரு எதிர்பார்ப்பு வருதே?

"தொடர்ந்து எங்கள் கூட்டணிப் பாடல்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதால அப்படியொரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருச்சு."
"கௌதம்கூட தொடர்ந்து 20 ஆண்டுகளா வேலை செய்றீங்களே எப்படி ?"
"கெளதம் பொதுவா எளிமையாப் பழகக் கூடியவர். அவருடைய படங்கள் தொடர்பா நாம சொல்ற கருத்து சரியா இருந்தா அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் உள்ளவர். அதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த இயக்குநர்கள் கிட்ட இருந்து வேறுபட்டவர் கெளதம். ஒரு படைப்பாளியோட கற்பனையில் குறுக்கீடு இல்லாம இருக்கும்போதுதான் அந்தப் படைப்பு முழுமையா இருக்கும்னு நினைக்கிறவர். ஒரு பாடலாசிரியருக்கோ, இசையமைப்பாளருக்கோ 'இப்படித்தான் இருக்கணும்'னு நெருக்கடி கொடுக்கவே மாட்டார். காட்சியைச் சொல்லிக் கற்பனையை எங்கிட்ட விட்டுருவார்.
'நீங்க எழுதினதுல எது உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு?'னு எங்கிட்ட கேட்பார். இந்த மாதிரி பொதுவா தமிழ் சினிமால பாடலாசிரியரையும் இசையமைப்பாளரையும் அணுக மாட்டாங்க. கௌதம் முழுச் சுதந்திரம் தர்றதால ஹாரிசும் சரி நானும் சரி படத்துல அந்தச் சூழலுக்கு எங்களுடைய சிறந்ததைத் தரணும்னுதான் நினைப்போம். ஏன்னா அது எங்களுடைய பாடல் ஆகிருதில்ல? பெரும்பாலும் கெளதம் படத்துக்கு நான் எழுதின பாடல் வரிகள் எந்த மாற்றமும் இல்லாம அப்படியேதான் வந்திருக்கு. இதனாலதான், ஒரு இயக்குநரா கெளதம் கூட வேலை பார்க்கறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விடயம். முன்னுரிமையும் அவர் படங்களுக்குத்தான் தருவேன்.
அவர் ஒரு இயக்குநர்ங்கற அதிகாரம் காட்டவே மாட்டார். இயக்குநர் என்ன சொல்வாரோங்கற பதற்றமோ அழுத்தமோ இருக்காது. நண்பர்களோட சேர்ந்து வேலை செய்யற மாதிரிதான் இருக்கும். ரசனையானவரா, படைப்பாளிக்கு முழுச் சுதந்திரம் குடுக்கக் கூடியவரா இருக்கறதுனாலதான் 20 ஆண்டுகளா எந்தவொரு மனத்தடையும் இல்லாம அவர் கூட பாடல் பயணம் செய்ய முடியுது.
தன்னுடைய படத்துக்குப் பொருத்தமான ஆட்கள் யாருன்னும் சரியா கணிக்கக் கூடியவர் கெளதம். அவரோட படத்துக்கு ஒளிப்பதிவாளர்களை மட்டும் மாத்திக்குவார். ஆஸ்தான எடிட்டர் ஆண்டனி, ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஆஸ்தான பாடலாசிரியர் நான், ஆஸ்தான நடனமைப்பாளர் பிருந்தா, ஆஸ்தான கலை இயக்குநர் இராஜீவன். சூழ்நிலை அழுத்தம் இருந்தால்தான் வேற யாரிடமாவது போவார். இப்படி அவர் கூட வேலை பார்க்க அவருக்குச் சிறந்தவங்களா தேர்ந்தெடுத்து வேலை செய்யறதாலதான் படமும், பாடல்களும் இந்த அளவுக்கு மக்களால ரசிக்கப்படுது."