Published:Updated:

`` `அந்தப் பாட்டை கேட்டதும் `உள்ள அப்படியே ஏறுதுப்பா'ன்னார் விஜய்!'' - பாடலாசிரியர் விவேக்

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக் ( தி. ஜீவாகரன் )

பாடலாசிரியர் விவேக் பேட்டி!

கோலிவுட் பாடலாசிரியர்களில் விவேக்தான் இன்றைய சென்சேஷன். 'பேட்ட', 'பிகில்' என மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரு பக்கம், 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' மாதிரியான படங்கள் ஒரு பக்கம் என எல்லா ஏரியாவிலும் கலக்கிவருகிறார். விஜய் - ரஹ்மான் - விவேக் காம்போவிற்கு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். காலை, மாலை, இரவு என எந்நேரமும் பாடல் வரிகளுடனே பயணிக்கும் விவேக்கிடம் நிறைய விஷயங்கள் பேசினோம்.

‘கோச்.... கோச்சுக்காதீங்க  கோச்ச்ச்ச்ச்ச்...!’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்'னு தொடர்ந்து விஜய் - ரஹ்மான் கூட்டணிகூட வேலை செய்றது எப்படி இருக்கு?

"யோசிச்சுப் பார்க்காத பயணமாதான் இதைப் பார்க்கிறேன். இவங்க ரெண்டு பேரும் சேரும்போது, எல்லோருடைய பார்வையும் அந்தப் படத்துமேல வந்திடுது. அந்த மாதிரியான படங்கள்ல நாம வேலை செய்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாம எழுதுற விஷயங்கள் எல்லோருக்கும் போய் சேரணும்னு நினைப்போம். அது, இவங்க இருக்கிறதுனால குறையில்லாம போய் சேருது. அதை ஒரு வரமா பார்க்கிறேன்."

இந்த மூன்று படங்கள்ல நீங்க எழுதின எந்த வரிக்கு ரஹ்மான் பாராட்டினார்?

பாடலாசிரியர் விவேக், ரஹ்மான், விஜய்
பாடலாசிரியர் விவேக், ரஹ்மான், விஜய்

"நிறைய முறை சொல்லியிருக்கார். குறிப்பா சொல்லணும்னா, 'சர்கார்' படத்துல 'ஒரு விரல் புரட்சியே' பாடல்ல, 'ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா'னு நான் எழுதிய வரியைப் பாராட்டினார். அப்புறம், 'மெர்சல்' படத்துல 'மாச்சோ' பாட்டு வித்தியாசமா இருந்ததுனு அதுக்கும் பாராட்டியிருக்கார்."

'OMG பொண்ணு', 'வா ரயில் விட போலாமா', 'வெறித்தனம்', 'மனிதி வெளியே வா'... இந்த மாதிரி பலவிதமான பாடல்களுக்குள்ள உங்களை எப்படி பொருத்திக்கிறீங்க?

"ஒவ்வொரு சூழலுக்குள்ளேயும் பயணிச்சுப் பார்க்கிறதுதான் கலைஞனா இருக்கிறவங்களுக்கான வரம். நாம இல்லாத ஒரு இடத்துக்குப் போய், கொஞ்ச நேரம் இருந்து வாழ்ந்து பார்த்துட்டு வர்றது ஒரு சுகம். அதுதான் என்னை அதுக்குள்ள பொருத்திக்க வைக்குதுனு நினைக்கிறேன். கலை கொடுக்கிற அந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்னு ஆசைப்படுறேன்."

`` `ஏஞ்சல் நயன்தாரா... ஃபேவரிட் ராயப்பன்... 2 சர்ப்ரைஸ் பாடல்கள்!'' - `பிகில்' அட்லி அப்டேட்! #Bigil

'ஆளப்போறான் தமிழன்', 'சிம்டாங்காரன்', இப்போ 'வெறித்தனம்' இந்த மூணு பாடல்கள் எழுதும்போதும் உங்க மனநிலை என்னவா இருந்தது?

பாடலாசிரியர் விவேக், விஜய்
பாடலாசிரியர் விவேக், விஜய்

"ஒரு தமிழன் வெளியூர்ல ஜெயிக்கும்போது வர்ற பாடலா இருக்கு. அதனால, தமிழுடைய பெருமையை வெச்சே எழுதலாம்னு சொன்னேன். அப்படி ரெடியானதுதான் 'ஆளப்போறான் தமிழன்'. 'சிம்டாங்கார'னை பொருத்தவரை, ஏற்கெனவே 'மெர்சல் அரசன்'னு ஒரு பாட்டு பண்ணோம். அதுல இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டலாம்னு நினைச்சு பண்ணது. சென்னைத் தமிழை ஆழமா கொடுக்கலாம்னு நினைச்சேன். அந்தப் பாடல் நல்லாயிருக்குனு சொன்னாங்க. ஆனா, வரிகள் புரியலைனு விமர்சனம் இருந்தது. இந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு எழுதின பாடல் 'வெறித்தனம்'.

'பிகில்' பட பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இந்தப் பாட்டு இந்தளவுக்கு பேசப்படும், பேசப்படணும்னு நீங்க நினைச்சதுண்டா?

"அது, மக்களுடைய ரசனையைப் புரிஞ்சுக்க முயற்சிக்கிறதுதான். இது, இப்படிப் போய் சேரும்னு நினைச்சு சில பாட்டு பண்ணுவோம். இது, இப்படிப் போய் சேரணுங்கிறதுக்காக சில பாட்டு பண்ணுவோம். அதுல ரீச்னு பார்க்கிறதைவிட இந்தப் பாடலுடைய வேலைனு பார்க்கணும். அப்படி ஒண்ணுதான், 'சிங்கப்பெண்ணே'. பெண்கள், அவங்களுக்கான பாடலா இதை கொண்டாடுனா எனக்குப் போதாது. ஆண்கள் இந்தப் பாடலை கனெக்ட் பண்ணிக்கிறது ரொம்ப அவசியம். அதனாலதான் வெவ்வேற வார்த்தைகள் வந்தாலும் பரவாயில்லைனு, 'அன்னை, தங்கை, மனைவி என்று வார்த்தைகளைப் பயன்படுத்தினோம். அந்த எமோஷனை உறவுகளா பார்க்கும்போதுதான், ஓர் ஆண் அந்தப் பாட்டை தன் வாழ்க்கைக்குள்ள பொருத்திப்பார்ப்பான். 'சிங்கப்பெண்ணே' பெண்களுக்கான பாடல் மட்டுமில்ல. ஆண்களுக்கானதும்தான்."

'வாடி ராசாத்தி', 'மனிதி வெளியே வா', 'சிங்கப்பெண்ணே' மாதிரி நிறைய பெண்களை மையப்படுத்திய பாடல்கள் எழுதியிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக்
தி. ஜீவாகரன்

"மூணு பாடல்களையும் ஒரு நூல் கோர்த்துக்கிட்டிருக்கு. அதுல இன்னும் நிறைய பாடல்களைக் கோக்கணும்னு நினைக்கிறேன். இந்தக் காலத்துல யாரும் பெண்களை அப்படி நடத்துறதில்லைனு சொல்றாங்க. ஆனா, அப்படியில்லை. இன்னும் பெண்களுக்கான சுதந்திரம் முழுமையா வழங்கப்படுறதில்லை. சுதந்திரத்தைக் கொடுக்கிற இடத்துல ஆண்களும் இல்லை; அதை வாங்கிக்கிற இடத்துல பெண்களும் இல்லை. ஆணும் பெண்ணும் ஒண்ணுதான் அப்படிங்கிற உணர்வைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கணும். இப்படியான பாடல்கள் ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டணும்னு ஆசைப்படுறேன்."

ரஹ்மான் கூட ரெக்கார்டிங் செஷன் எப்படி இருக்கும்?

"அவர் ஸ்டூடியோவுல எல்லாமே ரொம்ப வேகமா இருக்கும். கம்ப்யூட்டரையே அவ்ளோ வேகமா பயன்படுத்துவாங்க. காரணம், இந்த மாதிரி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தா, கிரியேட்டிவா வேலை செய்றது குறைஞ்சுடும்னு சொல்வார். அவர் சொல்ற சின்னச்சின்ன விஷயங்கள் எல்லாம் அவ்ளோ சூப்பரா வொர்க் அவுட்டாகும். அதுவே, பாடல் வரிகளை மெருகேத்திக்காட்டும். 'நம்மளைச் சுத்தி கல்லை அடுக்கிக்கிட்டே இருப்பாங்க. அதை உடைச்சுக்கிட்டே இருக்கணும்'னு அடிக்கடி சொல்வார். அவர்கூட இருந்தா, அந்த பாசிட்டிவிட்டி நமக்கும் வந்திடும். வாலி, வைரமுத்து மாதிரியான ஜாம்பவான்களோட வேலைபார்க்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துக்குவார். 'செக்கச் சிவந்த வானம்', 'சர்கார்' ரெண்டு படத்துக்கும் ஒரே நேரத்துல வேலை நடந்துக்கிட்டிருந்தது. அப்போ, மணிரத்னம் - ரஹ்மான் - வைரமுத்து இந்தப் பிரமாண்ட கூட்டணி எப்படி வேலை செய்றாங்கங்கிறதை ஒரு கண்ணாடிக்கு அந்தப் பக்கம் உட்கார்ந்து பார்த்து ரசிச்சுக்கிட்டே இருந்தேன்."

அடுத்தடுத்து வெவ்வேற இசையமைப்பாளர்கள், வெவ்வேற சூழல்களுக்குப் பாடல்கள் எழுதுறதுனு ஓடிக்கிட்டே இருக்கீங்க. இதுக்கு எப்படித் தயாராகுறீங்க?

பாடலாசிரியர் விவேக், ரஹ்மான்
பாடலாசிரியர் விவேக், ரஹ்மான்

"கொஞ்சம் கொஞ்சமா எழுத எழுத கத்துக்கிட்டேனானு தெரியலை. இந்தப் பாட்டு சரியான அவுட்புட்டா இருக்கணும்னு நினைச்சு வேலைசெய்றேன். பெரிய படங்களுக்கான பாடல்களோ சின்னப் படங்களுக்கான பாடல்களோ, என் உழைப்பு ஒரே மாதிரிதான் இருக்கும். வெவ்வேற இசையமைப்பாளர்களுக்கு வெவ்வேற சூழலுக்கு பாடலை சரியான நேரத்துல கொடுக்கணுங்கிறதை எனக்கான சவாலா பார்க்கிறேன். ஒரே நாள்ல யுவன் சாருக்கு 'சிந்துபாத்' படத்துக்கு ஒரு பாடல். ஒரு நாள்ல வேணும்னு சொல்லியிருந்தாங்க. அதுக்கு யோசிக்கும்போது, அனிருத் போன் பண்ணி, 'நாளைக்கு காலையில ஒரு பாட்டு வேணும். பண்ணிடலாமா?'னு கேட்டார். 'எந்தப் படத்துக்காக?'னு கேட்டேன். 'சூப்பர்ஸ்டார் படம்'னு சொன்னார். எனக்கு ஒரே ஷாக். ஒரு நாள்ல ரெண்டு பாட்டு முடியுமானு சந்தேகம் இருந்தது. சரி பண்ணிடலாம்னு நம்பிக்கையை வரவெச்சுக்கிட்டு இருக்கிற சமயத்துல, ரஹ்மான் சார் ஸ்டூடியோவுக்கு வரச் சொல்லி கால் வந்தது. 'ரஹ்மான் சார் ஃபாரின் போறார். அதனால, இன்னைக்கே பாட்டை முடிச்சாகணும்'னு சொன்னாங்க. அதுதான் 'ஒரு விரல் புரட்சியே'. இந்தப் பாட்டை எழுதிக்கொடுத்துட்டு, சாயங்காலம் வந்து அனிருத் போன்லேயே ட்யூன் சொன்னார். அவர் ட்யூனுக்கு நானும் உடனே முதல் ரெண்டு வரிகள் சொல்ல உடனே ரெடியானதுதான், 'பேட்ட' படத்துல வர்ற 'மரணம் மாஸு மரணம்'. இதை முடிச்சுட்டு, யுவன் சாருக்கு 'நெஞ்ச உனக்காக' பாட்டை எழுதிக்கொடுத்தேன். அந்த டென்ஷனை என் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன்."

உங்க பாடல் வரிகளுக்கு ரஜினி, விஜய் ஏதாவது சொல்லியிருக்காங்களா?

" 'ஆளப்போறான் தமிழன்' பாட்டை எடுக்கும்போது, நான் ஷூட்டிங் ஸ்பாட் போயிருந்தேன். நீங்க எழுதிய வரிகளைக் கேட்கும்போது, 'உள்ள அப்படியே ஏறுதுப்பா'னு சொன்னார், விஜய் சார். 'வெறித்தனம்' கேட்டுட்டு, 'நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்னு நான் வழக்கமா பேசுற வார்த்தைகளைப் பாடலா எழுதினதுக்கு நன்றி'னு சொன்னார். அது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. 'பேட்ட' ரிலீஸாகி கொஞ்ச நாள் கழிச்சு, அந்த டீம் எல்லோரும் மீட் பண்ணோம். அப்போ ரஜினி சார் என்னைப் பார்த்து, 'அசால்ட்டா எழுதிட்டீங்களே'னு சொல்லி சிரிச்சவர், 'நான் ஆடியோ லான்ச்ல உங்களைப் பத்தி பேசாமவிட்டுட்டேன். நான் பேசியிருக்கணும் விவேக். ஸாரி'னு சொன்னார். 'இதுல என்ன இருக்கு? பரவாயில்லை சார்'னு சொன்னேன். அவசியம் ஒருநாள் வீட்டுக்கு வாங்கன்னு சொன்னார்."

ரஜினி, விஜய் மாதிரியான மாஸ் ஹீரோக்களுக்கு பாடல்கள் எழுதுறதுல என்ன சிரமம் இருக்கு?

பாடலாசிரியர் விவேக், அனிருத்
பாடலாசிரியர் விவேக், அனிருத்

"இதை சிரமமா பார்க்கலை; வரமாதான் பார்க்கிறேன். அவங்க சொன்னா கேக்க தயாரா இருக்கிற மக்களுடைய அன்பை அவங்க சம்பாதிச்சு வெச்சிருக்காங்க. அதை என்னை மாதிரியான ஆட்களுக்கு அன்பளிப்பா கொடுக்கிறாங்க. அந்தக் கதைக்களத்துக்குள்ள நம்ம சொல்லணும்னு நினைக்கிறதை சொல்ல முடியுது. அது, அவங்க குரல்ல வரும்போது, அதுக்கான ரீச் வேற மாதிரி இருக்கு. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக விஜய் சார் குரல் கொடுத்தது, அதுல கலந்துக்கிட்டதுனு அவங்களோட விஷயங்களையும் அந்தப் பாட்டுல சேர்க்கும்போது, அது அடுத்தகட்டத்துக்கு அழைச்சுட்டுப்போகுது. அதனால, அவங்களுக்கு பாடல் எழுதுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு."

'பிகில்' ஆடியோ லான்ச்ல திரையிட்ட மீமுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது, விமர்சனமும் இருந்தது. அதை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?

"அந்த மீமுக்கு சிலர் கோபப்பட்டு பேசுறதுலயும் நியாயம் இருக்கு. வாலி, வைரமுத்து இவங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் மூணு வருஷமா பண்ணிக்கிட்டிருக்கிற வேலையை இதைவிட பிரமாதமா வாலி சார் 50 வருஷமா பண்ணியிருக்காங்க. வைரமுத்து சார் 30 வருஷமா பண்ணிட்டிருக்காங்க. அவங்களோட வரிசையில நானும் ஓரமா இருக்கிறேங்கிறதை நினைச்சே பார்க்கலை. ஆனா, ஒரு பெரிய ஹீரோவோட என் பெயரை வெச்சு பேசுறாங்கன்னு சந்தோஷமா இருக்கு. விஜய் - ரஹ்மான் மாதிரியான நபர்கள்கூட சேர்ந்து வேலை செய்ற இந்த ரியாலிட்டியை நான் என்ஜாய் பண்றேன். ஆனா, வாலி, வைரமுத்து மாதிரி ஜாம்பவான்களோட வரிசையில என்னை சேர்த்துப் பேசுறது தேவையில்லைனு நினைக்கிறேன்."

சந்தோஷ் நாராயணனுக்கும் உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க?

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக்
தி. ஜீவாகரன்

"அவர் என் குடும்பத்துக்கும் மேல. எங்களுக்கான உறவை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அவர்கிட்டதான் நான் அதிகம் சேட்டை பண்ணுவேன். அவர்கூட கிரிக்கெட் விளையாடுறதுதான் எனக்காக ஸ்ட்ரஸ் பஸ்டர். அவங்க ஏரியா பசங்களோட சேர்ந்து விளையாடுவோம். அவர் என் வாழ்க்கையில ஸ்பெஷல்."

தமிழ் சினிமாவுல உங்களுக்கான இடம்னு நீங்க நினைக்கிறது என்ன?

"எனக்கான இடம்னு நான் யோசிச்சதில்லை. என் பாடல் வரிகள்னால ஏதாவது சின்ன மாற்றமாவது நடக்கணும். அதுக்கு 'மனிதி', 'வாடி ராசாத்தி', 'சிங்கப்பெண்ணே', 'ஒரு விரல் புரட்சியே' மாதிரியான பாடல்கள் உதவுதுனு நினைக்கிறேன். அதைச் சுத்தி உள்ள விஷயங்களையும் நான் என்ஜாய் பண்றேன். ஆனா, அது எனக்கான அடையாளமா இருக்கணும்னு ஆசைப்படுறேன்"

100 kmph... துவம்சம் செய்யும் லாரி... டாப் கியருக்கு முன்..?! - கைதி +/- ரிப்போர்ட்

உங்களுக்கான ஆசை என்ன?

"'ஆசை அடக்கிட தெரிஞ்சா எல்லாம் காலடியில் கிடக்கும்'னு 'பேட்ட'யில நான் எழுதின இந்த வரிதான் இந்தக் கேள்விக்கான பதில்."

அடுத்த கட்டுரைக்கு