Published:Updated:

தமிழக அரசு தந்த `கலைமாமணி' விருதை ஏன் வாங்கவில்லை? - பாடலாசிரியர் யுகபாரதி பதில்

தமிழக அரசின் கலைமாமணி விருதைப் புறக்கணித்தாரா யுகபாரதி?

யுகபாரதி
யுகபாரதி

`எத்தனை சிறந்த தமிழ்ப்படமாக இருந்தாலும் அடுத்த அஞ்சு வருஷத்துக்கு தேசிய விருதை எதிர்பார்க்க வேண்டாம்' - என நேற்று காலையில் நடந்த `கன்னிராசி' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார் பாடலாசிரியர் யுகபாரதி. அன்றைய தினம் மாலையில் தமிழ்நாடு அரசின் `கலைமாமணி' விருது விழா. எட்டு வருட விருதுகள் மொத்தமாக வழங்கப்பட்டன. யுகபாரதிக்கும் 2015-ம் ஆண்டுக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விருதை யுகபாரதி வாங்கவில்லை.

யுகபாரதி
யுகபாரதி

`ஒருபுறம் `விருது தர மாட்டாங்க'னு மத்திய அரசைச் சீண்டிப் பேசறது; இன்னொரு புறம் மாநில அரசு விருது தந்தா, அதை அவமானப்படுத்தற மாதிரிப் புறக்கணிக்க வேண்டியது... இது நல்ல படைப்பாளிக்கு அழகா' என யுகபாரதியை விமர்சித்தும், அதேநேரம் சிலர் அவருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்ப, யுகபாரதியிடமே பேசினோம்.

``தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது விழாவை நான் புறக்கணித்ததா எப்படி செய்தி பரவுச்சுன்னு எனக்குத் தெரியலை. அந்த விழாவை நான் புறக்கணிக்கலை. `விருதுக்குத் தேர்வாகியிருக்கீங்க; அதுக்கான அழைப்பிதழை வந்து வாங்கிக்கோங்க'னு அரசுத் தரப்புல இருந்து என்னைக் கூப்பிட்டுச் சொன்னாங்க. சரியா அந்த நாள்ல நான் சென்னையில இல்லை. வெளியூர் பயணத்துல இருந்தேன். அதனால உடனடியாப் போய் அழைப்பிதழை வாங்கிக்க முடியாத சூழல். அடுத்த சில நாள்ல சென்னை வந்துட்ட போதும், வேலைப்பளு காரணமா அழைப்பிதழைப் போய் வாங்க முடியலை. தவிர, `விருதுக்குத் தேர்வாகியிருக்கிறவங்ககிட்ட அழைப்பிதழைக் கேட்பாங்களா'ங்கிற ஓர் எண்ணத்துல இருந்துட்டேன். ஆனா விழா அன்னைக்குக் காலையில நண்பர்கள் சிலர், `அழைப்பிதழ் இருந்தா மட்டுமே போக முடியும்’னு சொன்னாங்க.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது விழாவை நான் புறக்கணித்ததா எப்படி செய்தி பரவுச்சுன்னு எனக்குத் தெரியலை. அந்த விழாவை நான் புறக்கணிக்கலை.
யுகபாரதி

அழைப்பிதழை வாங்காதது என்னோட தவறுதான்ங்கிறதாலயும், முதலமைச்சர், அமைச்சர்கள்லாம் கலந்துக்கற விழாவுல இருக்கை ஒதுக்கீடெல்லாம் முன்கூட்டியே பக்காவா ஏற்பாடாகியிருக்கும்கிறதாலயும், நாம போய் குழப்பத்தை உண்டாக்க வேண்டாமேன்னும்தான் விழாவுக்குப் போகலை; நடந்தது இதுதான். ஆனா நான் ஏதோ திட்டமிட்டு அரசு விழாவைப் புறக்கணிச்சிட்ட மாதிரி தவறா செய்தியைக் கிளப்பி விட்டுட்டாங்க’' என்றவரிடம்,

`அடுத்த அஞ்சு வருஷத்துக்கு தமிழ்ப் படங்களுக்குத் தேசிய விருதை எதிர்பார்க்க வேண்டாம்'னு பேசியது குறித்தும் கேட்டோம்.

யுகபாரதி
யுகபாரதி

``அதை நான் மறுக்க முடியாது. செய்தியாளர்கள் மத்தியிலதான் பேசினேன். பேசின நிமிடம் தொட்டு அது பத்தி நிறைய பேர் விசாரிச்சிட்டாங்க. திரும்பவும் எதையாவது பேசி அது விவாதமா மாறணும்னு நான் விரும்பலை. அந்த நிமிடத்துல மனசுக்குத் தோணுனதைப் பேசினேன். ஆனா, காலையில அங்க பேசினதைப் பிடிச்சு, மாலையில நான் கலந்துக்காத நிகழ்ச்சியோட கோத்து விட்டதுதான் பெரிய நகைச்சுவை. இந்த ரெண்டு சம்பவங்களுக்கும் தொடர்பே இல்லைங்கிறதை மட்டும் அழுத்தம் திருத்தமாச் சொல்லிக்க விரும்பறேன்’' என முடித்துக் கொண்டார்.