Published:Updated:

மருதகாசி 100 - `ஓ... இந்தப் பாடல்களை எழுதினது கண்ணதாசனோ, பட்டுக்கோட்டையோ இல்லையா?'

மருதகாசி
மருதகாசி

மருதகாசி, எழுத்துகளின் வழியே இன்றைக்கும் மக்கள் மத்தியில் தம் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார். அவர் மரபிலக்கியச் சாயல்களையும் தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் கொண்டுவந்தவர்.

நன்றாகக் கவனித்தால் ஒருவிஷயம் தெளிவாகப் பிடிபடுகிறது. கண்ணதாசனைவிடவும் எம்.ஜி.ஆர் தனது ஏற்றமான பாடல்களுக்குப் பட்டுக்கோட்டையையும் மருதகாசியையுமே நாடியிருக்கிறார். ஒருவர் இடதுசாரியாகவும் மற்றொருவர் தமிழரசுக் கழகத்தவராகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

மாற்றுக் கருத்துடனும் மாற்றுக் கொள்கையுடனும் இயங்கிவந்த மருதகாசியையே அழைத்து, 'விவசாயி' திரைப்படத்தில் 'கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் / கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் / பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி / உழைத்தால் பெருகாதோ சாகுபடி' என்று எழுத வைத்திருக்கிறார். 'கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்' என்னும் வரிகள் போகிறபோக்கில் எழுதப்பட்ட வரி அல்ல.

மருதகாசியின் வரிகளை பட்டுக்கோட்டையின் வரிகளாகவும் கண்ணதாசனின் வரிகளாகவும் நம்மில் பலபேர் எண்ணியிருக்கிறோம். குறிப்பாக 'மனுசன மனுசன் சாப்புடுறாண்டா தம்பிப் பயலே' என்றதும் யோசிக்காமல் பட்டுக்கோட்டையாரே அப்பாடலை எழுதியதாகக் கருதுகிறோம். ஆனால், அப்பாடல் 1956இல் வெளிவந்த 'தாய்க்குப் பின் தாரம்' படத்திற்காக மருதகாசியினால் எழுதப்பட்டது. எம்.ஜி.ஆர் தன்னை ஒரு புரட்சிக்காரராகத் திரைப்படத்தில் நிறுவிக்கொண்ட முதல் பாடலாக அப்பாடலைக் கருதலாம்.

மருதகாசி 100 - `ஓ... இந்தப் பாடல்களை எழுதினது கண்ணதாசனோ, பட்டுக்கோட்டையோ இல்லையா?'

அதேபோல, 'வசந்தமுல்லை போலே வந்து / அசைந்து ஆடும் பெண்புறாவே' என்னும் பாடல் கண்ணதாசன் எழுதியதாகப் பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. உண்மையில், அப்பாடலை எழுதியவரும் மருதகாசிதான்.

'தென்றல் உறங்கிய போதும் / திங்கள் உறங்கியபோதும் / கண்கள் உறங்கிடுமா / காதல் / கண்கள் உறங்கிடுமா?' என்று அவர் எழுதிய வரிகள், எத்தனை பாடலாசிரியர்களின் வரிகளில் தென்படுகின்றன என்பதை நீங்களே யூகிக்கலாம். காதல்பாடல்களை எடுத்துக்கொண்டாலும், சமூகப்பாடல்களை எடுத்துக்கொண்டாலும் அவர் வரிகள் தனித்துத் தெரிகின்றன. முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2TBygn1

இன்றுவரை 'சமரசம் உலாவும் இடமே' பாடலுக்கு இணையான ஒரு பாடல் திரைப்படத்தில் வரவில்லை. சித்தர்களின் சொற்களை உள்வாங்கி, மரணத்தின் வலி நிறைந்த சூழலைக் கொண்டாடும்படி எழுதியிருக்கிறார்.

அவரே 'மனமுள்ள மறுதாரம்' என்ற திரைப்படத்தில் 'தூங்கையிலே வாங்குற மூச்சு / இது, சுழி மாறிப் போனாலும் போச்சு' என்றும் கூறியிருக்கிறார். அதையெல்லாம்விட, 'ஏர்முனைக்கு நேர் இங்கே' என்னும் பாடலில், விளைந்து நிற்கும் கதிருக்கு ஓர் உவமை சொல்லியிருக்கிறார். அதற்கு நிகரான ஒரு கற்பனையை இதுவரை யாருமே சிந்திக்கவில்லை. 'வளர்ந்துவிட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா / தலை வளைஞ்சு சும்மா பாக்குறியே தரையின் பக்கமா?' என்று ஒரு திரைப்பாடலைக் காவியப் பண்பு நிறைந்ததாக அவரால் மட்டுமே எழுத முடிந்திருக்கிறது.

மருதகாசி 100 - `ஓ... இந்தப் பாடல்களை எழுதினது கண்ணதாசனோ, பட்டுக்கோட்டையோ இல்லையா?'

சொல்லாட்சிகளே திரைப்பாடல்களைப் புதிதாகக் காட்டுகின்றன. மருதகாசியை முந்தைய தலைமுறைப் பாடலாசிரியராக நான் கருதியதில்லை. ஏனெனில், அவர் பாடல்களை ஊன்றி வாசிக்கையில் இன்றைப் பிரதிபலிக்கின்றன. காலம் கடந்தும் நிற்கக்கூடியவை மட்டுமல்ல, காலத்தை ஒட்டியும் நிற்கக்கூடிய பாடல்களை எழுதியிருப்பவரே மருதகாசி.

- இந்த ஆண்டு பாடலாசிரியர் மருதகாசியின் நூற்றாண்டு. இதையொட்டி, ஆனந்த விகடன் இதழில் கவிஞர் யுகபாரதி எழுதிய 'வசந்த முல்லை மேலே மொய்த்த வண்டு!' எனும் கட்டுரையின் சிறு பகுதிதான் இது. மருதகாசியின் பின்புலம், திரைத்துறையில் இரண்டாம் இன்னிங்ஸ் சாத்தியமான கதை, இவர் மீது எம்.ஜி.ஆர் கொண்ட ஈர்ப்பு... இவை அனைத்தையும்விட மருதகாசியின் எழுத்தின் வல்லமையைச் சொல்லும் அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/arts/literature/know-about-the-lyricist-and-writer-marudhakasi

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு