Published:Updated:

இந்தப் பாடலை எழுதிக்கொண்டிருப்பவர்...

கருணாகரன், முத்தமிழ், மெட்ராஸ் மிரன், தமிழணங்கு, கதிர்மொழி
பிரீமியம் ஸ்டோரி
கருணாகரன், முத்தமிழ், மெட்ராஸ் மிரன், தமிழணங்கு, கதிர்மொழி

‘டசக்கு டசக்கு’ முதல் ‘புளி மாங்கா புளிப்’ வரை நம்மையறியாமல் நாம் முணுமுணுக்கும் பல பாடல்களை எழுதியவர்கள் இவர்கள்.

இந்தப் பாடலை எழுதிக்கொண்டிருப்பவர்...

‘டசக்கு டசக்கு’ முதல் ‘புளி மாங்கா புளிப்’ வரை நம்மையறியாமல் நாம் முணுமுணுக்கும் பல பாடல்களை எழுதியவர்கள் இவர்கள்.

Published:Updated:
கருணாகரன், முத்தமிழ், மெட்ராஸ் மிரன், தமிழணங்கு, கதிர்மொழி
பிரீமியம் ஸ்டோரி
கருணாகரன், முத்தமிழ், மெட்ராஸ் மிரன், தமிழணங்கு, கதிர்மொழி

என்னதான் எழுத்து வன்மையும் படைப்புத் திறமையும் இருந்தாலும் கம்பெனி கம்பெனியாக ஏறியிறங்கி ஏங்கித்தவித்த காலம் மாறிவிட்டது. தமிழ்ச்சினிமாவின் இறுக்கம் தளர்ந்திருக்கிறது. பேரரசுகள் நடைபோட்ட ராஜபாட்டை, இன்று பின்புலமில்லாத எளிய மனிதர்களையும் அரவணைத்து வாய்ப்புகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்ச்சினிமா.

கருணாகரன், முத்தமிழ், மெட்ராஸ் மிரன், தமிழணங்கு, கதிர்மொழி... அப்படி வெவ்வேறு நிலத்திணைகளிலிருந்து சினிமா என்ற ஒற்றைக்கனவில் சென்னை வந்து வாய்ப்புகளைப் பற்றி அடையாளம் பெற்ற பாடலாசிரியர்கள். ‘டசக்கு டசக்கு’ முதல் ‘புளி மாங்கா புளிப்’ வரை நம்மையறியாமல் நாம் முணுமுணுக்கும் பல பாடல்களை எழுதியவர்கள் இவர்கள். பெயரிட்டது, இடாததென ஐவர் கையிலும் வகைவகையாகப் படங்கள்.

மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். போலியோ கால்களைத் தின்றுவிட, நம்பிக்கை பற்றி நடக்கிறார். வல்லவன் படத்தில், ‘காதல் வந்தாலே மனசு ஏங்கித்தவிக்கும்’ பாடல் வழி அறிமுகம் பெற்றவர். யுவன் ஆரம்பித்து, தேவி பிரசாத், பிரேம்ஜி, தமன், தரண், கோபி சுந்தர், அஷ்வந்த் என பலரையும் வசீகரித்திருக்கிறார். அனிருத் இசையில் ‘மாஸ்டர்’ படத்திலும் இவர் பாடல் இருக்கிறது. ஜெயில், எப்.ஐ.ஆர், ஏஞ்சல் என வரிசையாகப் படங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பாடலை எழுதிக்கொண்டிருப்பவர்...

“மதுராந்தகம்தான் எங்க பூர்வீகம். அப்பா துறைமுகத்துல வேலை செஞ்சதால சென்னைக்கு வந்துட்டோம். பள்ளியில தமிழாசிரியரைக் கிண்டல் பண்ணி கவிதை எழுதி மாட்டிக்கிட்டேன். அந்தநாள்ல இருந்து ‘நீ சினிமாவுக்குப் பாட்டெழுதப் போனா நல்லா வருவேன்’னு ஆசிரியர்களும் பசங்களும் தூபம் போட, பெரிய கனவா அது மனசுக்குள்ள விழுந்திருச்சு. கண்ணதாசன், வைரமுத்து சாரோட கவிதைகளையும் பாடல்களையும் கேட்டுக்கேட்டு வளர்ந்தேன். வாய்ப்புத்தேட ஆரம்பிச்சப்போ முதல்ல நான் தேடிப்போனது யுவன் சாரை. என்னை அழைச்சுப் பேசின யுவன் சார், ‘சிம்பு படம் பண்றார்... அவரைப் போய்ப் பாருங்க’ன்னு வழிகாட்டினார். சிம்பு சார், ஒரு சகோதரனைப் போல என்னை சுவீகரிச்சுக்கிட்டார். ‘வல்லவன்’ படத்துல எழுதின பாடல் நல்ல அறிமுகம் கொடுத்துச்சு.

அடுத்த கட்டத்துல எஸ்கேப் மதன் சார் ஆதரவா நின்னார். அவர் மூலம், ‘வாரணம் ஆயிரம்’ ஷூட்டிங்ல கௌதம்மேனன் சாரைப் பார்த்து வாய்ப்பு கேட்டேன். அவர் சூர்யா சார்கிட்ட என்னை அறிமுகம் செஞ்சார். அவர் மூலம் ‘அலெக்ஸ் பாண்டியன்’ல பாட்டு எழுத வாய்ப்பு தந்தார் கார்த்தி சார். ராம் சாரைச் சந்திச்சு, ‘உங்க படத்துல வாய்ப்பு கொடுங்க’ன்னு கேட்டேன். ‘முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வந்து பிரிஞ்சுட்டோம்னா உன்னை அழைக்கிறேன்டா’ன்னு சொன்னார். ‘அப்படி ஒரு சம்பவம் நடக்கவே வேண்டாம் சார்’ன்னு சொல்லிட்டு வந்தேன். முத்தண்ணா காலமான பிறகு என்னைக் கூப்பிட்டு ‘பேரன்பு’க்கு எழுதச் சொன்னார். ‘செத்துப் போச்சு மனசு’ன்னு ஒரு பாட்டு எழுதினேன். சினிமா பத்தி நிறைய எதிர்மறையான விஷயங்களை வெளியில பேசக் கேட்டிருப்பீங்க. ஆனா, நான் சந்தித்த எல்லா மனிதர்களும் தம்பியா, நண்பனா என்னை ஏத்துக்கிட்டு அவங்களால முடிஞ்ச வழிகாட்டுதலைத் தந்திருக்காங்க. என் வளர்ச்சியில யுவன் சாருக்கு பெரிய பங்கிருக்கு” - புன்னகைக்கிறார் கருணாகரன்.

‘மூக்குத்தி மூக்குத்தி’, ‘சிக்கனு மட்டனு’, ‘ஸ்டவ் மேல கடாயி’ என ஹிட் கானாக்களை எழுதியவர் மெட்ராஸ் மிரன். சென்னை ரத்தன் பஜார் பிளாட்பாரத்தில் வசிக்கிற மிரன், மீன்பாடி வண்டி ஓட்டுகிறார். சென்னை வாழ்வியலை நன்கு கற்றுணர்ந்த மிரனுக்கு இரஞ்சித் அறிமுகம் கிடைத்தது நல்வாய்ப்பு.

“நிறைய கானாப் பாடல்கள் எழுதியிருந்தாலும் பாடினவங்களுக்குக் கிடைச்ச வெளிச்சம் எழுதின எனக்குக் கிடைக்கலே. ரஞ்சித் அண்ணனைப் பார்த்தபிறகுதான் எனக்கு உலகம் புரிஞ்சுச்சு. முதல் சினிமா வாய்ப்பு, ‘அசால்ட்’. அந்தப் படத்துல எல்லாப்பாட்டையும் நான்தான் எழுதினேன். அடுத்து, ‘ஐபிசி 376’-னு ஒரு படத்துக்கு எழுதினேன். ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்துல எல்லாப் பாடலும் எழுதுற வாய்ப்பு கிடைச்சுச்சு. சுரேஷ்கிருஷ்ணா சார் இயக்குற ‘மாமா மாப்ளே’ படத்திலயும் எழுதியிருக்கேன். ரஞ்சித் அண்ணா, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில வாய்ப்புத் தந்திருக்கார். புதுசா நிறைய வாய்ப்புகள் வருது” என்கிற மெட்ராஸ் மிரன், “சென்னை மொழிதான் எனக்கான அடையாளம். இங்க ஒரு கலப்பு மொழி இங்கேயிருக்கு. மூர் மார்க்கெட், பர்மா பஜார், ரத்தன் பஜார், கொத்தவால் சாவடி... இங்கெல்லாம் போனா விதவிதமா வார்த்தைகளைக் கேட்கலாம். அதையெல்லாம் சேகரிச்சு வச்சுத்தான் பாட்டு எழுதுறேன்...” என்கிறார்.

தமிழணங்கு திருவாரூர் பொண்ணு. அப்பா ‘மருதம்’ மாறன் பெரியார் பெருந்தொண்டர். ஃபேஷன் டெக்னாலஜியும் பியூட்டிஷியன் கோர்ஸும் முடித்துவிட்டு திருவாரூரில் பார்லர் நடத்தியவருக்கு சிறு வயதிலிருந்தே கவிதை ஈர்ப்பு. சமூக ஊடகங்களில் எழுதும் கவிதைகளை ஃபாலோயர்கள் பாராட்டி, ‘நீங்க சினிமாவுக்குப் போகலாம்’ என்று ஊக்கப்படுத்த, எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி வாய்ப்புகளை எட்டிப்பிடித்திருக்கிறார்.

“அம்மாவுக்கு என்னைப்பத்தி நிறைய கவலை. ஆனா அப்பா, ‘நிச்சயம் நீ ஜெயிப்பேம்மா... தைரியமா முயற்சி பண்ணு’ன்னு உற்சாகப்படுத்தினார். சென்னைக்கு வந்து உறவினர் வீட்டுல தங்கி வாய்ப்பு தேடினேன். எட்டு வருடங்கள் தேடல்லயே ஓடிடுச்சு. சினிமாவும் வேணாம், சென்னையும் வேணாம்னு முடிவு செஞ்ச நேரத்துல ‘வல்லவன்’ சந்திரசேகர் சார் ‘பட்டிப்புலம்’ படத்துல வாய்ப்பு கொடுத்தார். ரொம்ப மன முடைஞ்சிருந்த நேரத்துல விஜய் ஆண்டனி சார் கூப்பிட்டு, ஒரு பழைய டியூன் கொடுத்து ‘அரைமணி நேரத்துக்குள்ள எழுதிக்காட்டுங்க’ன்னு சொன்னார். பத்து நிமிஷத்துல எழுதி அனுப்பிட்டேன். அது கொடுத்த நம்பிக்கையில காளியில வாய்ப்பு கொடுத்தார். அடுத்து விவேக் சார் நடிச்ச ‘எழுமின்’ படத்துல ஒரு பாடல் கிடைச்சுச்சு. இறந்த மகனை நினைச்சு அப்பா பாடுற பாட்டு... ஒரு தலையணையைக் குழந்தையா மடியில போட்டு ஒப்பாரி வச்சு மொபைல்ல ரெக்கார்டு பண்ணி அதைவச்சு அந்தப் பாட்டை எழுதினேன். தனுஷ் சார் பாடினார். கௌதம் சாரோட படத்துல ஒரு பாட்டாவது எழுதிடணும்னு ஆசை. ஆனா, ‘தாமரைதான் அவங்க படத்துக்கு எழுதுவாங்க. உங்களுக்கெல்லாம் வாய்ப்பு தரமாட்டார்’னு சொன்னாங்க. அவர் நம்பர் வாங்கிப் பேசினேன். பாக்கலாம்னு சொல்லிட்டு வச்சுட்டார். திடீர்னு ஒருநாள் ‘வாங்க, ஒரு பாட்டு எழுதணும்’னு கூப்பிட்டு ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வுல எழுத வாய்ப்பு கொடுத்தார். இப்போ பேச்சிலர், சினம்ன்னு சில படங்களுக்கு எழுதியிருக்கேன். கொஞ்சமா எழுதினாலும் திருப்தியா பண்ணியிருக்கோம்னு தோணுது”- சிரிக்கிறார் தமிழணங்கு.

கதிர்மொழி, ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியை. திருச்செங்கோட்டுக்கு அருகிலிருக்கும் வையப்பமலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

இந்தப் பாடலை எழுதிக்கொண்டிருப்பவர்...

“இளங்கலையில கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவ நான். கவிதை ஆர்வத்துல சென்னைக்கு வந்து எம்.ஏ. தமிழ் சேர்ந்தேன். அறிவுமதி அண்ணனும் பாக்யராஜ் சாரும் சந்தத்துக்கு எழுதப் பயிற்சி தந்தாங்க. ‘ரசிகர் மன்றம்’ படத்துல பாடல் எழுதுற வாய்ப்பு கிடைச்சுச்சு. திருமணம் முடிஞ்சு நிறைமாதமா இருந்த சமயம். ‘உச்சிதனை முகர்ந்தால்’ படத்துக்குப் பாட்டெழுத இமான் சார் அழைச்சார். பாட்டை எழுதிக் கொடுத்ததும் பிறக்கப்போற குழந்தைகளுக்கு டிரஸ்ஸெல்லாம் எடுத்துக் கொடுத்து அனுப்பினார். வாய்ப்புத்தேட வசதியா என் கணவர் பெங்களூருவிலிருந்து பணிமாறுதல் வாங்கிட்டு என்னையும் சென்னைக்கு அழைச்சுட்டு வந்தார். ஒரு பக்கக்கதை, தம்பி ராமையா சாரோட பையன் நடிச்ச தண்ணி வண்டின்னு தொடர்ந்து எழுத ஆரம்பிச்சேன். ஜிப்ரான் சார் இசையில விரைவில் வெளிவரப்போற பகைவனுக்கு அருள்வாய், கொற்றவை படங்களிலும் எழுதியிருக்கேன்...” என்கிற கதிர்மொழிக்கு இரண்டு குழந்தைகள்.

‘டசக்கு டசக்கு’ பாடல் மூலம் கவனம் ஈர்த்த முத்தமிழ், பாடகர், ரிதம்பேட் பிளேயர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டும்கூட. திருச்சியைச் சேர்ந்த இந்தப் பொறியாளர் கல்லூரியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் சீனியர்.

“கல்லூரியில கல்ச்சுரல் இன்சார்ஜ் நான். சந்தோஷும் சேர்ந்து நானும் கல்லூரியிலேயே நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கோம். படிப்பை முடிச்சுட்டு பிஹெச்எல்-ல சப் கான்ட்ராக்ட்ல வேலை செஞ்சேன். ஆனா, ரொம்பநாள் தாக்குப்பிடிக்க முடியலே. கைத்தட்டலும் பாராட்டுகளும் காதுகள்ல ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதுல கிடைச்ச கைத்தட்டல்கள் சென்னைக்குத் துரத்துச்சு. முதல்ல நடிக்க வாய்ப்பு தேடினேன். கிடைக்கலே. பாட வாய்ப்புத் தேடினேன். அதுவும் சாத்தியமாகல. சந்தோஷும் அப்போ வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தார். அவர் டெமோ டியூன் போட, நான் பாட்டு எழுத ஆரம்பிச்சேன். அதை வச்சு ரெண்டு பேரும் வாய்ப்பு தேடினோம். மணிகாந்த் கதிரி சார் இசையமைச்ச ‘உதயன்’ படத்துல முதல் பாட்டு எழுதினேன்.

இந்தச் சூழல்லதான் சந்தோஷுக்கு ‘அட்ட கத்தி’ படம் வந்துச்சு. அதுல முதல் பாடலே என்னை எழுத வச்சார். ‘ரூட்டுதல’ பாட்டு எனக்கு நல்ல அறிமுகம் தந்துச்சு. அதுக்கப்புறம் பீட்சா, சூது கவ்வும், இறைவின்னு கலவையா அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துச்சு. ஷான் ரோல்டன், முண்டாசுப் பட்டியில அஞ்சு பாடல்களையும் எழுத வச்சார். ‘வாயை மூடி பேசவும்’ படத்துலயும் என்னைப் பயன்படுத் தினார் ஷான். சந்தோஷ் கொடுத்த இன்னொரு வாய்ப்பு இறுதிச்சுற்று. ‘வா மச்சானே’ பாட்டும் பெரிய ஹிட். அதுக்கப்புறம் ஷாம்.சி.எஸ் கொடுத்த வாய்ப்புதான் ‘டசக்கு டசக்கு.’ சினிமாவுல ஒரு பாட்டாவது பாடிடணும்னு ஆசை... காலா படத்துல தெருவிளக்கு பாட்டைப் பாட வச்சார் சந்தோஷ்.அடுத்து இசையமைப் பாளராகணும்னு ஆசைப்பட்டேன். ‘சீயான்கள்’னு ஒரு படத்துல அந்தக் கனவும் நிறைவேறிடுச்சு. இசையமைச்ச முதல் படமே நல்ல அங்கீகாரம் பெற்றிருக்கிறது உற்சாகத்தைத் தந்திருக்கு. இப்போ நிறைய படங்களுக்குப் பாடல்களும் எழுதுறேன்...” என்கிறார் முத்தமிழ்.

தேடலும் தீவிரமும் வழிதிறந்து கனவுக்கு உயிர் தந்திருக்கின்றன. ஆளுமையும் தனித்தன்மையும் அடையாளமாகட்டும். வாழ்த்துகள் கவிஞர்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism