★ யாரையாவது ஒரு முறை பார்த்து சில நிமிடங்கள் பேசிவிட்டால் போதும் - பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரை திரு. எம்.ஜி.ஆர். சந்தித்தால் மறக்கவே மாட்டார். ``முன்பு ஒரு முறை நாம் இந்த இடத்தில் சந்தித்தோமே, அவர் தானே நீங்கள்?" என்று பளிச்சென்று கேட்பார். அத்தனை ஞாபக சக்தி!
★ ஒருவரோடு இரண்டு மூன்று நிமிடங்கள் பேசினாலும் கலகலப்பாகப் பேசி எதிரே இருப்பவரை எளிதில் கவர்ந்து விடும் சக்தி எம்.ஜி.ஆரிடம் அதிகம் உண்டு.
★ அவர் பத்திரிகையாளர்களுடன் கலகலப்பாகப் பேசுவார். இப்போது எப்படியோ எனக்குத் தெரியாது. ஏனென்றால், அவர் முதலமைச்சரான பிறகு நான் அவரைச் சந்தித்துப் பேசியது கிடையாது.
★ நல்ல கர்நாடக சங்கீதத்தை மனம் விட்டு ரசிப்பார்.

★ ஒரு நாள் இரவு `ஒளி விளக்கு' படப் பிடிப்பின்போது ஷூட்டிங்கின் நடுவில் தான் கொண்டு வந்திருந்த டேப் ரிக்கார்டரைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். பிரபல சங்கீத வித்வான் எம்.டி.ராமநாதன் பாடிய டேப் அது.
★ ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது. நடித்து விட்டு மீண்டும் தன் சீட்டில் போய் உட்கார்ந்து `டேப்' கேட்டார். அந்த நடுநிசியில் அவர் தன் முழு கவனத்தையும் செலுத்தி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தது, அன்று பகலில் ரேடியோவில் ஒலிபரப்பான சிறுவர் நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ பாடிய காந்தி மகான் கதை.
★ இத்தனை பரம சங்கீத ரசிகராக இருப்பதால்தான் இவரது படப் பாடல்கள் பெரும் `ஹிட்' ஆயின.
★ நாடகங்களுக்குத் தலைமை தாங்கி அவை பற்றிப்பேசும்போது சிறுசிறு குறைகளைக்கூடக் குறிப்பாகக் கவனித்துச் சொல்லுவார். அதே போல, சிறு சிறு நல்ல 'பாயிண்டு'களையும் பாராட்டிப் பேசுவார். எப்படி இத்தனை விஷயங்களை இவர் ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுகிறார் என்று வியப்பாக இருக்கும்!
★ உடலைக் கட்டுமஸ்தாக `தொந்தி தொப்பை' இல்லாமல் வைத்திருந்தால் அவர்களைப் பாராட்டுவார்.
★ தன் வீட்டிலிருந்து ருசியாகச் சமைத்துக் கொண்டு வந்து மற்றவர்களுக்குப் போட்டுத் தானும் அவர்களோடு அமர்ந்து சாப்பிடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும்.
★ பழகுவதற்கு மிகவும் நல்லவர். அவரவர்களுக்குப் பிடித்த பொருளைப் பற்றி அவரவர்களோடு பேசுவார். பேசிப் பேசி `போர்' அடிக்க மாட்டார்.
He is a gem of a man.
- பாலா