Published:Updated:

``இது பார்க்கத் தகாத தேவதையின் கதை!'' - கொரியாவுக்குச் செல்லும் தமிழ்ப்படம்!

'பார்க்கவும் தகாதவர்களாக' வாழப் பணிக்கப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தின் பதின்ம வயது பெண்ணின் மறுக்கப்பட்ட வாழ்வையும், கனவையும், காதலையும் பேசியிருக்கிறது 'மாடத்தி'.

மாடத்தி
மாடத்தி

தென்கொரியாவின் பூசான் திரைப்பட விழாவுக்குச் செல்கிறது இயக்குநர் மற்றும் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் படைப்பில் உருவாகியிருக்கும் மாடத்தி. சாதியப் படிநிலைகளில் தீண்டத்தகாதவர்கள் வரை மட்டுமே அறிந்த தமிழ்ச்சமூகத்தில், பார்க்கவும் தகாதவர்களாக இருக்கும் மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் முதல் திரைப்படம். பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சென்ஸார் போர்டின் அனுமதியும் பெற்றுவிட்ட நிலையில், திரைப்பட விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...

லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை

மாடத்தி திரைப்படம் உருவானதற்கான காரணமும் தற்காலத் தேவையும் என்ன? 

காரணமும் தேவையும் கருதி உருவாக்கப்படுவது கலை அல்ல. ஆன்ம உந்துதல் மட்டுமே கலைக்கு வித்தாக முடியும். நான் கேட்டு வளர்ந்த தேவதைக் கதைகளால் உந்தப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். காலத்தால் உறைந்து நிற்பது கதைகள் மட்டுமல்ல, அக்கதைகள் உருவாவதற்குப் பின்னிருக்கும் அநீதியும்தான் என்பது பெருந்துயரம். சாதி அதிகாரத்தால் கட்டப்பட்டிருக்கும் சமூகத்தின் கடைசி அடுக்கில் 'பார்க்கவும் தகாதவர்களாக' வாழப் பணிக்கப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தின் பதின்ம வயது பெண்ணின் மறுக்கப்பட்ட வாழ்வையும், கனவையும், காதலையும் காட்சிக்குக் கடத்தியிருக்கும் பிரதியே 'மாடத்தி' திரைப்படம்.

யார் இந்த மாடத்தி? மாடத்தி தெய்வ வழிபாட்டுக்கும் இந்தத் திரைப்படத்துக்கும் தொடர்பு உண்டா?

நாம் வழிபடும் சிறுதெய்வங்கள் யார்... நம்மிடையே வாழ்ந்த சாதாரண மனிதர்கள்தாம். ஏதோ ஒருவகையில் தான் வாழ்ந்த சமூகத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்கள். அவர்களின் ரெளத்திரத்திற்கு அஞ்சி அவர்களையே வழிபாட்டுக்குரிய காவல் தெய்வங்களாக மாற்றிக்கொண்டது நம் மரபு, வரலாறு. இன்றும் தமிழக கிராமங்களில் வழிபாட்டுத் தலங்களாக இருப்பவை கழுமரங்களும், நடுகற்களும்தான். நாம் தொழும் அம்மன்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள்; நமது கதைகளை நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுப்படுத்திக்கொண்டிருக்கும் அடங்காத ஆன்மாக்கள். அநீதி இழைக்கப்பட்ட ஒரு வண்ணாத்திப் பெண்ணின் ஆன்மா சொல்லும் கதையாகப் படைக்கப்பட்டிருக்கிறது 'மாடத்தி.'

மாடத்தி
மாடத்தி
மதராஸ் மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிர வண்ணார் என்னும் கண்ணால் பார்க்கக் தகாதவர்கள் என்று ஒரு சாதியினர் இருக்கின்றனர். பகல் பொழுதில் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவர்களைக் கண்டாலே தீட்டாகி விடுமாம்.
அண்ணல் அம்பேத்கர்

உருவாக்கத்துக்காக நீங்கள் சென்ற களங்கள், சந்தித்த மனிதர்கள் பற்றி?

மாடத்தி
மாடத்தி

அண்ணல் அம்பேத்கர் புதிரை வண்ணார்களைப் பற்றி பேசியிருக்கிறார்.

மதராஸ் மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிர வண்ணார் என்னும் கண்ணால் பார்க்கக் தகாதவர்கள் என்று ஒரு சாதியினர் இருக்கின்றனர். பகல் பொழுதில் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவர்களைக் கண்டாலே தீட்டாகி விடுமாம். இந்தப் பாவப்பட்ட மக்கள் வளைக்கரடி, கழுதைப்புலி, ஆட்வார்க் என்னும் ஆப்பிரிக்கப் பன்றி ஆகிய விலங்குளைப் போன்று இருட்டிய பிறகே தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியே வரவும் இரவுநேர வாழ்க்கை வாழவும் நிர்பந்தித்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட இன்னல் அவர்களுடையது, வாழ்வில் எந்தளவுக்கு அவர்கள் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்! நிச்சயமாக, வரலாற்றில் எந்த நாகரிகமும் இதைவிட மேலான குரூரத்தைப் புரிந்ததாகக் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

- அம்பேத்கர்.

(நூல் தொகுப்பு 5; அத்தியாயம் 15: நாகரிகம் அல்லது இழிச்செயல்; பக்கம் 139-140)

புதிரை வண்ணார் சமூகத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக அரசுப் பணியிலிருந்து தற்போது தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி அய்யாதான் 'மாடத்தி'யின் ஆதாரம்.

எழுத்தாளர் இமையத்தின் கோவேறு கழுதைகள், பத்திரிகையாளர் ஜெயராணியின் தலித் முரசு கட்டுரை, ஆ.சிவசுப்பிரமணியன், சி, லக்ஷ்மணன், கோ.ரகுபதி மற்றும் தனஞ்செயனின் நூல்கள், கவிஞர் என்.டி.ராஜ்குமாரின் ராப்பாடிகள் பற்றிய கட்டுரை, ஓவியர் சந்துருவின் ஏற்பாட்டின் பேரில் நான் சந்தித்த புதிரை வண்ணார் சமூக மனிதர்கள் என்று மாடத்திக்கான ஆய்வும் வாசிப்பும் விரிவானது. புதிரை வண்ணார் சமூகத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக அரசுப் பணியிலிருந்து தற்போது தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி அய்யாதான் மாடத்தியின் ஆதாரம் எனச் சொல்வேன்.

Vikatan

அவருடன் ஒருநூறு கிராமங்கள் சுற்றி, சமூகத்தின் வெவ்வேறு தலைமுறை மக்களைச் சந்தித்துபேசி, பேட்டிகள் எடுத்த அனுபவம்தான் 'மாடத்தி'க்கு வித்திட்டது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அவ்வனுபவங்களிலிருந்தே படைக்கப்பட்டவை. கவிஞர் யவனிகா ஶ்ரீராமுடன் முதல் இரண்டு பிரதிகள் எழுதி முடித்த நிலையில் அதை முழுமையான திரைக்கதையாக மாற்றியவர் வடகரை ரஃபீக் இஸ்மாயில். திரைக்கதை பிரதியை, மூர்த்தி ஐயா வழிநடத்த பாபநாசம், அணவன் குடியிருப்பு, விக்கிரமசிங்கபுரம் மக்களுடனும், முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களுடனும் பல பட்டறைகள் நடத்தி செம்மைப்படுத்தினோம். வசனப் பயிற்சி, ஒத்திகை படப்பிடிப்பு, சமூகத்துடன் வாழ்ந்து அவர்களின் அன்றாடங்களை படக்குழு கவனித்து பயிலுதல் என்று மாடத்தியின் உருவாக்கம் ஒரு மானுடவியல் பாடமாக, முழுமையான மக்கள் பங்கேற்பு சினிமாவாக அமைந்தது.

பார்க்கத் தகாதவர்கள் (Unseeable) இன்றும், இந்த மண்ணில் இருக்கிறார்களா?

இன்னும் சாதி இருக்கிறதா என்ன என்று கேட்பது போல இருக்கிறது உங்கள் கேள்வி. சுமார் ஒரு லட்சம் புதிரை வண்ணார் குடும்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதியின் அசுரப்பிடிக்குள், தலித்துகளுக்கும் தலித்துகளாக, தீட்டுத்துணிகளையும் மரண வீட்டுத் துணிகளையும் சலவை செய்து கொண்டும், பாடைகள் கட்டிக் கொண்டும், தலைக்கரிசியை வாங்கிக் கொண்டும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் வெட்கக்கேடான உண்மை. 

ஒரே நாடு, ஒரே மொழி... பெரியார் சொன்னது என்ன தெரியுமா?#HBDPeriyar141
மாடத்தி
மாடத்தி
ஒரு வெட்டும் இல்லாமல் படத்தை வெளிக்கொண்டு வருவது படைப்பாளியின் சுதந்திரம் மட்டும் அல்ல; தணிக்கைக்குட்படாத படத்தைப் பார்க்கும் உரிமை பார்வையாளர்களுக்குமானது.
லீனா மணிமேகலை

சர்ச்சையான கதைக்களங்களுக்கு சென்ஸார் போர்டு எளிதாக அனுமதி அளிக்காதே?

சுதந்திரம் பெற்று 70 வருடங்களுக்கும் மேலாகியும் சாதி தொடர்வதுபோல, தணிக்கையும் தொடர்வது பெரும் தலை குனிவுதான். தணிக்கை அமைப்பு என்ற ஒன்று நீடிப்பதே ஜனநாயக பிரஜைகளுக்கு அவமானமான ஒன்று. 18 வயதில் இந்த நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் பிரஜைக்கு எந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்க முடியாதா என்ன? எந்தக் குப்பையையும் நம் தொலைபேசி சட்டகத்தில் வந்து கொட்டிவிடுகிற தகவல் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் தணிக்கையைக் கட்டிக்கொண்டு அழுவதை விட ஒரு முட்டாள்தனம் ஏதும் உண்டா? குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் திரைப்படங்களை  மட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் கிரேடிங் சான்றிதழ்களை தரும் அமைப்பாக மட்டும்தான் இந்தத் துறை செயல்பட வேண்டும்.

நமது அரசியல் அமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டம். அந்தச் சட்டத்தின் வழிகாட்டலில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களுக்குச் சென்று தணிக்கைக்கு எதிராக வழக்காடிதான் என் படங்களை வெளிக்கொண்டு வர வேண்டியிருக்கிறது. 'செங்கடல்' படத்திற்கான தடையை நீக்க நீதிமன்றம் சென்றேன். மீண்டும் 'மாடத்தி'க்கு வழங்கப்பட்ட கடுமையான தணிக்கையை நீக்க நீதிமன்றம் சென்றேன். ஒரு வெட்டும் இல்லாமல் படத்தை வெளிக்கொண்டு வருவது படைப்பாளியின் சுதந்திரம் மட்டும் அல்ல; தணிக்கைக்குட்படாத படத்தைப் பார்க்கும் உரிமை பார்வையாளர்களுக்குமானது.

பூசான் விழாவுக்கு உங்கள் திரைப்படம் செல்கிறது. சர்வதேச அரங்கில் உங்கள் திரைப்படத்துக்கு எந்த மாதிரியான விளைவை எதிர்பார்க்கிறீர்கள்?

மாடத்தி
மாடத்தி

பூசான் திரைப்பட விழா, உலகின் முதல் பத்து முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்று. ஆசியாவின் கேன்ஸ் என்று சொல்பவர்கள் உண்டு. ஒரு திரைப்பட வெறியராக தென் கொரிய திரைப்படங்கள் எனக்குப் பயிற்சிக் கூடம். `மாடத்தி' தன் பயணத்தை தென் கொரிய மண்ணிலிருந்து தொடங்குவது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. படத்திற்கும், படம் பேசும் பொருளிற்கும் பூசான் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தரும். வரும் மாதங்களில் இந்தியாவிலும், தமிழகத்திலும் ஒரு சிறிய அளவிலாவது படத்தை விநியோகிக்கும் திட்டங்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

கமர்ஷியல் வெளியில் வெற்றிகரமான பெண் இயக்குநர்கள் உருவாகுதல் என்பது ஏன் சாத்தியமற்றதாகவே இருக்கிறது?

மாடத்தி
மாடத்தி

டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு வந்திருக்கும் தருணத்தில் இந்தப் பேட்டியும் கேள்வியும் அமைந்திருப்பதனால் சொல்கிறேன். இந்த விழாவும், இதை நடத்தும் கனடா அரசாங்கமும், பெண் இயக்குநர்களுக்கு முக்கியத்துவமும் கவனமும் தர வேண்டும் என்பதைப் பேரியக்கமாகவே நடத்தியதின் விளைவு, இந்த வருடம் பங்குபெற்ற படங்களில் 50 சதவிகித படங்கள் பெண் இயக்குநர்களுடையது. திரைப்பட வரலாறு ஆணுக்குரியதாக இருப்பது தற்செயலானதல்ல. எல்லாத் தளங்களிலும் இருக்கும் பாலின சமன்பாட்டின்மை திரைப்பட துறையிலும் உள்ளது. பாலின சமத்துவமின்மை வெறும் பெண்கள் பிரச்னையல்ல; அது மானுட நெருக்கடி. அரசியலிலும் சமூகத்திலும் கலையிலும் மானுடத்தின் சரிபாதி பெண்களை ஒடுக்குவதை நமது பண்பாடு அனுமதித்துக் கொண்டிருக்கும்வரை மனிதம் தன் கண்களைக் கட்டிக்கொண்டு ஏன் இந்த உலகமே இருளாக இருக்கிறது என்று கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நயன்தாரா, ஜோதிகா, பார்வதி என சூப்பர் ஸ்டார்கள் கொடிக்கட்டிப் பறந்தாலும் கமர்ஷியல் களங்களில் பெண் நடிகர்களுக்கான வெளி அதிகரித்துள்ளதா... அதை அவர்கள் சரிவரப் பயன்படுத்துகிறார்களா?

அம்பேத்கர் சிலை உடைப்பின் பின்னணியில் சாதி மோதல்?! - பதற்றம் தணியாத வேதாரண்யம்

திரைப்படத் துறையில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு, பெண்கள் படைப்பாளிகளாகப் பெரும்படையென ஆக்கிரமிக்க வேண்டும். இயக்குநராக, தொழில்நுட்பக் கலைஞர்களாக, கதாசிரியர்களாக, தயாரிப்பாளர்களாக, பெண்களின் பங்கு அதிகரித்தால்தான் ஸ்க்ரிப்ட், பாத்திரப் படைப்பு, சித்திரிப்பு, உள்ளடக்கம், வடிவம் என எல்லாவற்றிலும் மாற்றங்கள் நடக்கும். இது, தனிநபர் செயல்பாட்டால் நடத்திவிட முடிகிற விஷயமல்ல. சமூகப் பேரியக்கமாக எழுச்சி ஏற்பட்டால் ஒழிய இதற்கு வேறு மார்க்கம் இல்லை. அதுவரை சின்னச் சின்ன விஷயங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கிறது என சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். நடிகைகள் தனிக் கவனம் பெறுவதில் மகிழ்ச்சியே. But what are they actually bringing to my table in terms of cinema?