Published:Updated:

ஆண்ட்ரியா, சின்மயி குரலில் அதிர்ந்த சென்னை! - `மடைதிறந்து’ இசை நிகழ்ச்சி #ChilliPepper

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா, திரைப்படங்களில் தான் பாடிய பாடல்கள் மட்டுமல்லாது, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களைப் பாடி அசத்தினார்.

'நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்' நிறுவனம், `மடைதிறந்து’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது. #ChilliPepper என்ற பெயரில் அதன் முதல் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திரையிசைப் பின்னணிப் பாடகிகளான ஆண்ட்ரியா மற்றும் சின்மயி ஆகியோர் கலந்துகொண்டு பாடினர். ஏறக்குறைய 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் குழுவினர் இசையமைத்தனர்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

பார்வையாளர்களின் கரகோஷங்களிடையே மேடையில் முதலில் தோன்றிய ஆண்ட்ரியா, 'கோவா' படத்தில் இடம்பெற்றிருந்த தனது சிக்னேச்சர் பாடலான `இதுவரை இல்லாத உணர்விது...’ பாடலோடு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். 5 பாடல்கள் என்ற வரிசையில் ஆண்ட்ரியா மற்றும் சின்மயி பாடல்களைப் பாடினர். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் `ஒரு தெய்வம் தந்த பூவே...’ பாடலை சின்மயி, தனது முதல் பாடலாகப் பாடினார். ஆண்ட்ரியா, திரைப்படங்களில் தான் பாடிய பாடல்கள் மட்டுமல்லாது, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களைப் பாடி அசத்தினார்.

அவர் பாடிய பாடல்களில், இளையராஜாவின் `ஆசை அதிகம் வைச்சு...மனச அடக்கிவைக்கலாமா மாமா’, ஏ.ஆர்.ரஹ்மானின் `ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி... கேள்விக்குப் பதில் என்னாச்சு...’, யுவன் சங்கர் ராஜாவின் `ரவுடி பேபி’, 'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றிருந்த `ஹூஸ் த ஹூரோ... ஹூஸ் த ஹீரோ’, 'வடசென்னை' படத்தின் `என்னடி மாயாவி நீ...’, 'ஹேராம்' படத்தின் `நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...’ உள்ளிட்ட பாடல்கள் கவனம் ஈர்த்தன. ஆசை அதிகம் வச்சு பாடல், ஆண்ட்ரியா குரலில் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது.

சின்மயி
சின்மயி

மெலடி, பீட் என வெரைட்டி விருந்து படைத்த சின்மயி, 'வாகை சூடவா' படத்தின் `சரசர சாரக்காத்து’, 'ஆதவன்' படத்தின் `வாராயோ வாராயோ காதல் சொல்ல,’ 'என்னை அறிந்தால்' படத்தின் `இதயத்தை ஏதோ ஒன்று...’, 'ஐ' படத்தின் `என்னோடு நீயிருந்தால்... உன்னோடு நானிருப்பேன்..’ என இசை ரசிகர்களைத் தனது வசீகரக் குரலில் கட்டிப்போட்டார். 'குரு' படத்தில் இடம்பெற்றிருந்த `மய்யா மய்யா’ பாடலை உச்ச ஸ்தாயியில் அவர் பாடியபோது அரங்கமே ஆடியது. அதேபோல், '96' படம் மூலம் இசை ரசிகர்கள் மனதில் தனி இடம்பிடித்த கோவிந்த் வசந்தா இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்தார்.

அவர் முன்னிலையில், '96' பாடல்களை சின்மயி பாடினார். `கொஞ்சும் பூரணமே...’, `காதலே காதலே தனிப்பெரும் துணையே’ `பேரன்பின் காதல்’ என சின்மயியின் குரலில் அந்தப் பாடல்கள் ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளியது. குறிப்பாக, அந்தாதி பாடல் இடம்பெறும் ``ஆஅ...திகம்பர...வலம்புரி..சுயம்பு நீ...நீ.. ஆஅ பிரவாகம் நீ...பிரபாவம் நீ...பிரவாகம் நீ’’ என்ற ஹைபிட்ச் வரிகளின்போது, மொத்த அரங்குமே சேர்ந்து பாடத் தொடங்கியது சிலிர்ப்பூட்டியது. இந்த நிகழ்ச்சியில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் 'பிகில்' படத்தின் டிரெய்லரும் திரையிடப்பட்டது.

இசை நிகழ்ச்சி
இசை நிகழ்ச்சி

இதில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தில் நடித்திருந்த இந்துஜா உள்ளிட்ட, பெண்கள் கால்பந்து அணியினர் கலந்துகொண்டனர். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தப் படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்த சிங்கப் பெண்களை மேடையேற்றி கௌரவப்படுத்தினர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டு முறை பிகில் படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் வி.எஸ். மெடிக்கல் டிரஸ்ட்டுக்கு ரூ.5 லட்சம் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஆண்ட்ரியா மற்றும் சின்மயி ஆகியோர் இணைந்து, அதற்கான காசோலையை அந்த டிரஸ்ட்டின் தலைவரும் புற்றுநோய் மருத்துவருமான சுப்ரமணியத்திடம் வழங்கினர்.

அடுத்த கட்டுரைக்கு