Published:Updated:

``ரெண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள், வரலாற்று ஃபேன்டஸி..!" ராஜ மெளலியின் `RRR' கதை சொல்லும் மதன் கார்க்கி

` `பாகுபலி' பார்க்கும்போது பத்து பதினைஞ்சு இடங்கள்ல சிலிர்க்கும்ல... இந்தப் படம் ஆரம்பத்துல இருந்து முடியுற வரை அப்படித்தான் இருக்கும்.’

`பாகுபலி' படத்தில் எந்த வசனம் பாப்புலரானதோ இல்லையோ... காளக்கேயர்கள் பேசும் வசனம், எல்லா மொழி மக்களையும் இம்ப்ரஸ் செய்தது. அந்த மொழிக்குப் பெயர், `கிளிக்கி'. இந்தப் படத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட அந்த மொழிக்கென்று நிறைய ஆராய்ச்சிகள் செய்து, தனி வெப்சைட் ஆரம்பித்து, அதை கற்றுக்கொள்ள வழிவகையும் செய்து அசத்தியிருக்கிறார் மதன் கார்க்கி. அவரிடம் 'கிளிக்கி' உருவான விதம், ராஜமெளலியுடனான நட்பு, தற்போது வசனம் எழுதிவரும் முக்கிய படங்களின் அப்டேட் எனப் பல விஷயங்களைக் கேட்டறிந்தோம்.

``பாகுபலியில் பயன்படுத்திய கிளிக்கி மொழி முழுசா ரெடி!" - மதன் கார்க்கி ஷேரிங்ஸ்

`பாகுபலி' படத்துல காளக்கேயர்களுடைய மொழி இப்படித்தான் இருக்கணும்னு உங்ககிட்ட எப்படிச் சொன்னார்?

``படத்துக்காக கேரக்டர்களை உருவாக்குறதுல இருந்தே நான் ராஜமௌலி சார்கூட பயணிச்சிட்டிருக்கேன். பொதுவா, இந்த மாதிரி வில்லன்களைக் காட்டும்போது, தமிழ்ப் படங்கள்ல அவங்க தெலுங்கு பேசுற மாதிரியும், தெலுங்குப் படங்கள்ல அவங்க தமிழ் பேசுற மாதிரியும் வெப்பாங்க. ஆனா, `இந்த கேரக்டர்களை ரொம்பக் கொடூரமானவங்களா காட்டப்போறோம். அதனால வேற மொழி பயன்படுத்தினா அவங்களை தப்பா காட்டுறமாதிரி இருக்கும். அதனால ஃபாரின் மொழி மாதிரி பாருங்க இல்லைனா புது மொழியைக்கூட உருவாக்கலாம். இதுக்கு நான் சப் டைட்டில் பண்ணமாட்டேன். அவங்க பேசுறதை வெச்சே அவங்க கோபத்தை மக்கள் தெரிஞ்சுக்கட்டும்'னு சொன்னார், ராஜமெளலி சார்.

ஒரு முறை ஆஸ்திரேலியாவுல குழைந்தைங்களோட விளையாடிட்டிருந்தேன். அப்போ நான் சினிமாவுல இல்லை. விளையாடிட்டு இருக்கப்ப, புதுசா ஒரு மொழி உருவாக்கலாம்னு சும்மா எண்களுக்கு பெயரையும் உருவத்தையும் கொடுத்து எழுதி விளையாடிட்டு இருந்தோம். அதுக்கு, `க்ளிக்'னு பெயர் வெச்சது ஞாபகம் வந்து லேப்டாப்பை எடுத்துப் பார்த்தேன். ஆனா, அது இதுக்கு செட்டாகலை. அதை அடிப்படையா வெச்சுக்கிட்டு புதுசா வொர்க் பண்ணேன். சொற்களுடைய ஒலியும், அதோட பொருளும் எந்த வகையில பொருந்திப்போகுதுனு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். பெரும்பாலான மொழிகள்ல அப்படியில்லை. உதாரணத்துக்கு, `சர்க்கரை'ங்கிற வார்த்தை ரொம்ப கரடுமுரடா இருக்கு. ஆனா, அது இனிக்கும். `நிலவேம்பு' ரொம்ப சாஃப்டா இருக்கு. ஆனா, கசக்கும். அப்படியில்லாம, இனிமையா இருக்கிற சொற்களுக்கு சாஃப்டான  ஒலியும் உக்கிரமா இருக்கிற சொற்களுக்கு கடினமான ஒலியும் வெச்சு பிரிச்சுட்டு, இதுக்கான வேலையை ஆரம்பிச்சேன். இதை வெச்சு ரெண்டு மூணு வாக்கியத்தை எழுதி ராஜமெளலி சார்கிட்ட படிச்சுக் காட்டினேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். அவங்க அப்பா ராஜேந்திர பிரசாத் சாரை கூப்பிட்டு சொன்னதும் அவரும் அதைக் கொண்டாடிட்டார். இப்படித்தான் ஆரம்பிச்சது `கிளிக்கி'."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை எப்படி காளக்கேயரா நடிச்சிருந்த பிரபாகருக்கு சொல்லிக்கொடுத்தீங்க?

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

``இந்த மாதிரி ஒரு மொழியை உருவாக்கியிருக்கோம்னு அந்த டீம்ல எங்க மூணு பேரைத் தவிர யாருக்கும் தெரியாது. பிரபாகருக்கு நான், அவர் என்ன பேசுணும்கிறதை ரெக்கார்ட் பண்ணி அனுப்பினேன். அதைக் கேட்டு பயிற்சி எடுத்துக்கிட்டு டேக்ல பேசினார். அவர் பேசுறதைப் பார்த்துட்டு, நாசர் சார், பிரபாஸ், ராணா, சத்யராஜ் சார், ரம்யா கிருஷ்ணன் மேம்னு எல்லோரும் அவர் என்ன பேசுறார்னு தெரியாம ஷாக்காகிப் பார்த்தாங்க. சென்சார்லகூட அதைப் பத்தி ரொம்ப ஆச்சர்யமா கேட்டாங்க."

ஒரு மொழியை உருவாக்கி, அதுக்கான எழுத்துகள், உச்சரிப்புகள் இப்படித்தான் இருக்கணும்னு வடிவமைச்சது எவ்வளவு சவால்? எப்படி சாத்தியப்பட்டுச்சு?

``ஒரு படத்துக்காக அல்லது ஒரு நாவலுக்காகன்னு உருவாக்கப்பட்ட மொழிகள் நிறைய இருக்கு. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' - டொத்ராக்கி, `ஸ்டார் ட்ரக்' - கிலிங்கான், `லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' - எல்விஷ், `அவதார்'ல ஒரு மொழினு  எனக்கு முன்னாடி நிறைய பேர் இதைப் பண்ணியிருக்காங்க. அந்த மொழிகள் எல்லாத்துக்கும் எழுத்து வடிவம் இருக்கானு தெரியலை. கிளிக்கில நிறைய புது ஒலிகள் இருந்தது. அந்த ஒலிகளை எப்படி எழுத்தா மாத்துறதுனு தெரியலை. எண்கள்ல இருந்து அதோட வடிவத்தை அமைக்க ஆரம்பிச்சேன். எளிமையா மனசுல நிக்கிற மாதிரி அதை அமைச்சுக்கிட்டு எழுதினேன். என் பையனுக்கு சொல்லிக்கொடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு ஒண்ணுல இருந்து ஒன்பது வரை கிளிக்கில எழுத சொன்னதும் உடனே யோசிக்காம எழுதிட்டான். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.

ஆங்கிலத்துக்கு 52 சிம்பல்ஸ் தெரியணும். தமிழுக்கு 110 சிம்பல்ஸ் தெரியணும். ஆனா, ரொம்பக் குறைவான சிம்பல்ஸை வெச்சு எவ்ளோ எளிமையா கத்துக்க முடியுமோ அந்த அளவுக்கு உருவாக்கியிருக்கேன். எழுத்துல இருந்து ஒலி பிறந்து, அந்த ஒலியில இருந்து சொற்களை உருவாக்கணும்னு நினைச்சேன். `பாகுபலி' படம் முடிஞ்சப்ப 700 சொற்கள் இருந்தன. இப்போ 3000 சொற்கள் ஆங்கிலம் - கிளிக்கி அகராதியில இருக்கு. அந்த 3000 சொற்களையும் எப்படி சொல்லணும்னு என் குரல்ல பதிவு பண்ணியிருக்கேன். நீங்க kiliki.in வெப்சைட்டுக்குள்ள போனாலே தெரிஞ்சுக்கலாம். உதயன்னு ஒரு நண்பர் இருக்கார். அவர்கிட்ட கொடுத்து `கிளிக்கி'க்கு ரெண்டு மூணு கம்ப்யூட்டர் ஃபான்ட்டும் ரெடி பண்ணிட்டேன்."

`நிம்டா தொஸ்ரஸ் டெல் மீ...'னு கிளிக்கியில காளக்கேயர் பேசுறதுக்கு என்ன அர்த்தம்?

ராஜமெளலி - மதன் கார்க்கி
ராஜமெளலி - மதன் கார்க்கி

``அதுக்கு என்ன அர்த்தம்னு இங்க சொல்ல முடியாது. ஏன்னா, ரொம்ப ஆக்ரோஷமா கடினமான வார்த்தைகள்ல மகிழ்மதி சாம்ராஜ்யத்தையும், அங்க இருக்கிறவங்களையும் திட்டுறதுக்கான வார்த்தை. அவ்ளோதான்."

ராஜமெளலி, இந்த வெப் சைட்டை அறிமுகப்படுறதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஒரு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்கன்னு அவருக்குத் தெரியுமா?

`` 'பாகுபலி'க்கு அப்புறம் அவர்கிட்ட இதைப் பத்தி பேசலை. அவருக்கு நான் கொடுத்த சர்ப்ரைஸ் இது. இந்த வேலைகள் எல்லாம் முடிஞ்ச பிறகு அவருக்கு போன் பண்ணி, `உங்களைப் பார்க்க வரணும்'னு சொன்னேன். அவரும் வரச் சொன்னார். `RRR' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் பார்த்துட்டு, 25 நிமிஷம் நான் என்னென்ன பண்ணியிருக்கேன்னு போட்டுக்காட்டினேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். அவரால நம்பவே முடியலை. `Only you can do this Karky'னு சொன்னார். அப்புறம் லேப்டாப்ல அவர் பெயரை டைப் பண்ணி கிளிக்கில எப்படியிருக்குனு பார்த்தார். அவர்கிட்ட நீங்கதான் லான்ச் பண்ணணும்னு கேட்டவுடனே ரொம்ப ரொம்ப சந்தோஷமா அதை அறிமுகப்படுத்தி வெச்சார். கடைசியா வரும்போது, அவர் பெயரை கிளிக்கில பெரிசா பிரின்ட் பண்ணிட்டுப் போனதை அவருக்கு கிஃப்ட் பண்ணிட்டு வந்தேன்."

`கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' மூலமா நிறைய விஷயங்கள் பண்ணிட்டு இருக்கீங்க. இப்போ என்னென்ன விஷயங்கள் போயிட்டிருக்கு?

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

``எங்களோடது ரொம்ப சின்ன டீம்தான். 20 பேர் இருக்கோம். ரொம்ப ஆர்வமா தமிழ், தெலுங்குனு சில இந்திய மொழிகளுக்காக வேலை பார்த்துட்டு இருக்கோம். `சொல்' (தமிழ்-ஆங்கிலம்-தமிழ் இணைய அகராதி) 5 லட்சம் சொற்கள் இதுல இருக்கு.`ஜன்னல்'னு அதுல டைப் பண்ணா, அதோட தமிழ்ப் பெயர், வட்டார வழக்குப் பெயர்னு எல்லாமே காட்டும், `ஒலிங்கோ' (ஒலிபெயர்ப்புக் கருவி), `பெயரி' (தமிழ் ஆண்/பெண் பெயர்களைக்கொண்ட கருவி), `எமோனி' (எதுகை,மோனை போன்றவற்றைக் கண்டறியும் கருவி), `குறள்' (திருக்குறளுக்கான ஓர் இணையதளம்), `எண்' (எண்களை எழுத்துகளாக மாற்றும் ஒரு கருவி), `பாடல்' (பாடல் வரிகளை ஆராய்வதற்கும் வாசிப்பதற்கும் தமிழ்ப் பாடல் வரிகளைத் தொகுத்துத் தரும் ஓர் இணையதளம்), `ஆடுகளம்' (சொல் விளையாட்டுகளுக்கான ஓர் இணையதளம்)னு இது மாதிரியான விஷயங்களை உருவாக்கியிருக்கோம். `பிரிபொறி'னு ஒரு கருவியை உருவக்கினோம். தமிழ்ல என்ன சொல் கொடுத்தாலும் அதைப் பிரிச்சு பொருள் கொடுத்திடும். அது, போன வருஷம் தமிழ்நாடு முதலமைச்சர் விருது வாங்குச்சு. மொழி நிபுணர்கள், புரோகிராமர்கள்னு எல்லோரும் எங்க டீம்ல இருக்காங்க. எல்லோரும் சேர்ந்து நிறைய புராஜெக்ட்ஸ் பண்றோம். `பயில்'னு ஒரு பாடத்திட்டம் அறிமுகப்படுத்துறோம். தமிழை எவ்வளவு எளிமையா சொல்லிக்கொடுக்கலாம்கிறதுக்காகத்தான் இது. எங்க சென்டர்ல ரெண்டு ஃபாரினர்ஸ் தமிழ் பேச, எழுத, படிக்க கத்துட்டிருக்காங்க. மதுரையில ஒரு பள்ளி, எங்களோட சிலபஸை பயன்படுத்த இருக்காங்க. அதோட ரிசல்ட் என்னன்னு பார்த்துட்டு, அடுத்தடுத்து இதை உலகமெல்லாம் எடுத்துட்டுப் போகணும். தமிழுக்கான இன்டர்நேஷனல் சிலபஸ் அது. தவிர, நிறைய புது புராஜெக்ட்டுகள் ஆரம்பக்கட்ட பணிகள்ல இருக்கு."

இந்த மாதிரியான விஷயங்களுக்கு உங்க அப்பாகிட்ட இருந்து என்ன ரெஸ்பான்ஸ் வரும்?

``ரொம்ப சந்தோஷப்பட்டு என்னை இன்னும் என்கரேஜ் பண்ணிக்கிட்டே இருப்பார். எனக்கு வர்ற சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது அவர்தான்."

`RRR' எப்படி வந்துக்கிட்டு இருக்கு?

``சூப்பரா வந்துட்டிருக்கு. `பாகுபலி' பார்க்கும்போது பத்து பதினைஞ்சு இடங்கள்ல சிலிர்க்கும்ல... இந்தப் படம் ஆரம்பத்துல இருந்து முடியுற வரை அப்படித்தான் இருக்கும். ரொம்ப எமோஷனலான கதை. நிச்சயமா ரொம்ப அருமையான படமா இருக்கும். ரெண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பத்தின கதை இது. அவங்க ரெண்டு பேருடைய வாழ்க்கையில ஒரு பகுதி மட்டும் என்ன நடந்ததுனு யாருக்கும் தெரியலை. குறிப்பிட்ட சமயத்துல ரெண்டு பேரும் எங்க இருந்தாங்க, என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னு தெரியலை. இங்க இருந்திருக்கலாம்கிற தகவல் மட்டும்தான் இருக்கு. அப்படி அந்த இடத்துல அவங்க இருந்திருந்து, அவங்க சந்திச்சிருந்தாங்கன்னா என்ன நடந்திருக்கும்கிறதுதான் கதை. வரலாற்றுப் பின்னணியில ஒரு ஃபேன்டஸி."

`RRR', `தலைவி', `பொன்னியின் செல்வன்' அனிமேஷன் வெப் சீரிஸ் இந்த மூணு பெரிய புராஜென்ட்லயும் ஒரே நேரத்துல வேலை செய்றது எப்படி இருக்கு?

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

`` 'தலைவி' படத்துல நம்ம மதிக்கிற தலைவர்களுடைய வாழ்க்கையில பர்சனலா என்ன நடந்ததுங்கிறதைப் பத்தி சொல்றோம். அது என்னதான் ஒரு கற்பனைக் கதைனு போடப்போறாங்கன்னாலும், நாம என்ன சொல்ல வர்றோம்னு எல்லோருக்கும் தெரியும். அதனால, ரொம்ப நேர்மையான கவனம் இருக்கணும். இப்படி ஒரு சந்தர்பத்துல அவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு யாருக்கும்  தெரியாது. நம்மளோட கிரியேட்டிவிட்டியைக் காட்டணும்னு அதுல வொர்க் பண்ணக் கூடாது. அவங்க ஸ்டைல்ல என்ன, இந்த சூழல்ல இப்படி பேசியிருக்கலாம்னு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டு, அதுக்குள்ள வொர்க் பண்றது சவாலா இருந்தது. `RRR' படத்துக்கான டிராஃப்ட்டை முழுசா பண்ணிக்கொடுத்துட்டேன். அதுக்கு `பாகுபலி' மாதிரி முதல்ல தமிழ்ல எழுதலை. அவங்க தெலுங்குல ரெடி பண்ணிக்கொடுத்துடுவாங்க. நான் தமிழ்ப்படுத்தித்தரணும். அதுக்கான வேலைகள் இனிதான் ஆரம்பிக்கும். ஒரு பாடல் மட்டும் ஒலிப்பதிவு பண்ணிட்டோம். `பொன்னியின் செல்வன்' அனிமேஷன் வெப் சீரிஸ் பண்ற தவச்செல்வன், என் ஃப்ரெண்டுதான். கம்ப்யூட்டர் சயின்ஸ் புரொஃபசரா இருக்கார். இந்த வெப் சீரிஸுக்காக ஏற்கெனவே நாலு வருஷம் அவங்க வொர்க் பண்ணியிருக்காங்க. அவங்க அனிமேஷன் எல்லாம் முடிச்சுட்டுதான் வசனம் எழுத சொல்லி என்கிட்ட வந்தாங்க. ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. வந்தியத்தேவனா எம்.ஜி.அர் அவர்களையும் குந்தவையா ஜெயலலிதா அவர்களையும் பாரக்கவே அழகா இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை அது. அதனால ரொம்ப சந்தோஷமா வொர்க் பண்ணேன். அனிமேஷன்ல சின்னச்சின்ன திருத்தங்கள் போயிட்டிருக்கு. சீக்கிரமா ரிலீஸாகிடும்."

அடுத்து என்ன ப்ளான்?

``இதுவரைக்கும் ஒரு படத்துக்கு வசனம் எழுறதுன்னா அந்த இயக்குநர்கூட உட்கார்ந்து அந்தச் சூழலுக்குத் தகுந்த வசனம் எழுதுவேன். இல்லைன்னா, அவங்க சொல்ற சூழலுக்கு வீட்டுக்கு வந்து வசனம் எழுதி அனுப்புவேன். இப்போ, ஒரு படத்துக்கு நானே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்னு எல்லாத்தையும் எழுதி முடிச்சிருக்கேன்.  ஜியோ ஸ்டூடியோஸ் அந்தப் படத்தைத் தயாரிக்கிறாங்க. எல்லோருக்கும் பரிச்சயமான இயக்குநர் அதை இயக்குறார். ஒரு கொரியன் படத்தை தழுவப்பட்ட படம் அது. அதுக்கான அறிவிப்பு சீக்கிரமே வரும். மார்வெல் யுனிவர்ஸ் மாதிரி தமிழ்ல ஒரு யுனிவர்ஸ் உருவாக்கி, அதுக்கு நிறைய கதைகள் ப்ளான் பண்ணி எழுதிக்கிட்டிருக்கேன். அந்த யுனிவர்ஸை அமைச்சு, அதுல முதல் மூணு கதைகளை முடிச்சு ரெஜிஸ்டரும் பண்ணிட்டேன். இன்னும் 20 கதைகள் இருக்கு. எல்லாமே சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்ஸ்."

அப்போ, சீக்கிரமே மதன் கார்க்கியை இயக்குநரா பார்க்கலாம் போலிருக்கே?

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

``இல்லை. படம் இயக்குறதுல ஆரம்பத்துல ரொம்ப ஆர்வம் இருந்துச்சு. இப்போ கதைகள், திரைக்கதைகள் எழுதுறதுதான் பிடிச்சிருக்கு. டைரக்ட் பண்ண போயிட்டேன்னா, அந்த விஷயத்தை மட்டும்தான் பண்ணமுடியும். இப்போ நான் இயக்கப்போறேன்னா, என் இயக்குநர் நண்பர்கள்கூட போய் உட்கார்ந்து அந்த ப்ராசஸை தெரிஞ்சுக்கிட்டு, அதுக்குப் பிறகு படம் இயக்கணும். ஆரம்பத்துல டைரக்‌ஷன்ல பெரிய ஆர்வம் இருந்தது. அப்பவே பண்ணியிருக்கணும். ஆனா, பண்ணாம விட்டுட்டேன்."

ஹைக்கூ எப்படி இருக்கார்? அவர் தமிழைக் கையாளுறது எப்படியிருக்கு?

``அவனுக்கும் தமிழ் ரொம்பப் பிடிக்கும். அவனுடைய தமிழுக்கு நான்தான் பொறுப்பு. நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கேன். மத்த சப்ஜெக்ட் எல்லாம் என் மனைவி பார்த்துக்குவாங்க. தவிர, ஸ்கூல்ல சொல்லித்தராத விஷயங்களை நானும் அவனும் கத்துக்கிட்டடிருக்கோம். இப்போ அவன்கூட சைக்காலஜி படிச்சிட்டிருக்கேன். பெயின்டிங்ஸ் மேல பெரிய ஆர்வம் உண்டு. சிறந்த ஓவியங்களை எடுத்துவெச்சு அதை கொஞ்ச நேரம் கவனிச்சுட்டு, அப்புறம் என்னென்ன கவனிச்சோம்னு பேசுவோம். நைஃப் பெயின்டிங் கத்துட்டிருக்கோம். வீக் எண்டுல அவனுக்கு புரோகிராமிங் கத்துக்கொடுப்பேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் பார்க்காத தமிழ்ப் படங்கள், இல்லை ரிலீஸாகி இருக்கிற புதுப்படங்கள் பார்ப்போம். கேட்ஜெட்ஸ் அவனுக்கு கொடுக்கிறதில்லை. வாரத்துக்கு ஒரு நாள் ஐபேட்ல கேம் விளையாடுவான், அவ்ளோதான்."

மதன் கார்க்கி மக்களுக்கு பரிச்சயமானதே பாடல்கள்ல வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தித்தான். இப்போ, அந்த விஷயத்தை விவேக் பண்ணிட்டிருக்கார். `சிம்டாங்காரன்', `வெய்யோன் சில்லி'னு அவர் பயன்படுத்துற தமிழை எப்படிப் பார்க்குறீங்க?

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

``விவேக் ரொம்ப நல்ல ரைட்டர். அவருடைய முதல் பாடல் வெளி வந்ததுல இருந்து அவரை கவனிச்சிட்டு வர்றேன். சில வருஷத்துக்கு முன்னாடி `Lyric Engineering'னு ஒரு வொர்க் ஷாப் பண்ணேன். அதுல அவர் கலந்துக்கிட்டார். அப்போ அவர் சினிமாவுக்கு வந்த புதுசுனு நினைக்கிறேன். அந்த வொர்க் ஷாப்லயே அவர் பயன்படுத்தின சொற்கள் எல்லாம் வித்தியாசமாவும், அழகாவும் இருந்தன. அப்போ இருந்தே எங்களுக்குள்ள நல்ல பழக்கம். ஃபேமிலி ஃப்ரெண்ட். அப்பப்போ வீட்டுக்கு வருவார். அவர் எழுதிய பாடல் கேட்டுட்டு நான் போன் பண்ணிப் பேசுவேன். `வெய்யோன் சில்லி' எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதைக் கேட்டுட்டு அவர்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். அவருக்குனு ஒரு ஸ்டைலை உண்டாக்கியிருக்கார். தான் எழுதுற வித்தியாசமான சொற்களை எந்த இடத்துல வெச்சா ரீச்சாகும்னு தெரிஞ்சு எழுதுறார். தவிர, அவருடைய எண்ணமும் அழகா இருக்கு."

`மாஸ்டர்' படத்தோட `Let me sing a Kutti Story' பாடல் கேட்டீங்களா? எப்படி இருக்கு?

``ரொம்ப க்யூட்டான பாடல். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுல சொல்ற விஷயங்களும் அழகா இருந்தது. அது, நமக்குத் தேவையான விஷயமும்கூட. தமிழ்ல இருந்திருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த ட்யூனுக்கு விஜய் குரல் செம க்யூட்டா இருந்தது" என்றவரிடம் பஸா (கிளிக்கி மொழியில் டாடா) சொல்லி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு