`சேலஞ்ச்' ஐஸ்வர்யா, `ஜோக்கர்' ஆயுஷ்மான், `இயக்குநர்' ராதிகா ஆப்தே - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup
நடிகை ராதிகா ஆப்தே இயக்குநராகி இருக்கிறார். ஆம் அவர் இயக்கிய குறும்படம் சர்வதேச குறும்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கிறது. ``நான் எழுதி இயக்கிய `The Sleepwalkers' என்ற குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவில் Best Midnight Short என்ற கேட்டகரியில் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி" என்று இதில் பணியாற்றிய அனைவரையும் டேக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தான் ஜோக்கர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ``நான் உண்மையில் ஒரு திட்டத்துடனான நபராக தெரிகிறேனா? நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? நான் கார்களைத் துரத்தும் நாய். ஒன்றைப் பிடித்தால் அதனை என்ன செய்வது என்றே எனக்குத் தெரியாது. நான் குழப்பத்தின் ஏஜென்ட்! அச்சுறுத்தும், தீய, இன்னும் புத்திசாலித்தனமாக, மேதையாக எப்போதும் ஜோக்கர் போன்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க நினைத்திருக்கிறேன். என் மனநிலையை அறிந்து இப்படி என்னை மாற்றியதற்கு நன்றி" எனக் கூறியிருக்கிறார்.
சமீபமாக 50-வது பிறந்தநாளை கொண்டாடிய மாதவன் இன்று தனது திருமண நாளை கொண்டாடியிருக்கிறார். தன் மனைவி சரிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ``நீ எனக்கு கிடைத்திருப்பதால் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதைப் பற்றி சொன்னால் அது போதாது சரிதா" என்று ஹார்ட்டின்களை அள்ளி வழங்கியுள்ளார் மேடி.
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள `பெண்குயின்' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி தமிழ், தெலுங்கிலும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டும் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. அதற்கான எந்தவொரு அறிவிப்பும் வராத நிலையில் இன்று அதற்கான அறிவிப்பு வந்துள்ளது. ஜூன் 8-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என்ற அப்டேட்டை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ், `குடைக்குள் இருப்பது யார்?' என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.
விராட் கோலியைப் போல #Playathome சேலஞ்சை செய்துள்ளார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் இவர் எடுத்த ஸ்கோர் 11. இதில் விளையாட இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இயக்குநர் அருண்ராஜா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நாமினேட் செய்துள்ளார்.
`மீசைய முறுக்கு', `நரகாசுரன்' ஆகிய படங்களில் நடித்த ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக `கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்தவர் கொஞ்சம் மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு வந்தார். தற்போது கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று நினைத்துவிட்டார் போல. நீல நிற உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகர் டோவினோ தாமஸுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. பள்ளி காலத்தில் இருந்து விரும்பிய லிடியாவை 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் டொவினோ. அவருக்கு 2016-ல் இஸா என்ற மகள் பிறந்தாள். தற்போது டோவினோ - லிடியா தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறான்.