கார்த்திக் நரேன், அருண் விஜய் கூட்டணியில் `மாஃபியா'... கதாநாயகி இவர்தான்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் 'மாஃபியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர், இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து, அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா ஆகியோரை வைத்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் சில சிக்கல்களால் திரைக்கு வர தாமதமாகி நிற்கிறது.

இந்நிலையில், கேங்க்ஸ்டர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார், கார்த்திக் நரேன். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'மாஃபியா' என டைட்டில் வைக்கப்பட்டுளது. அருண் விஜய் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கிறார். மேலும் படத்தின் வில்லனாக பிரசன்னா கமிட்டாகியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

ஜூலை 6-ம் தேதி தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை 40 நாள்களில் முடித்து, இந்த வருடத்திற்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது தவிர, 'பாக்ஸர்', 'அக்னி சிறகுகள்' உள்ளிட்ட படங்களிலும் அருண் விஜய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரியா பவானி சங்கருக்கு 'குருதி ஆட்டம்', 'கசட தபற', ஜீவா - அருள்நிதி படம் ஆகியவை உள்ளன.