Published:Updated:

``கெளதம் மேனன் சொன்னா நூறாவது மாடியில இருந்துகூடக் குதிப்பேன்!" - நடிகரானது குறித்து மகிழ் திருமேனி

இயக்குநர் மகிழ் திருமேனி
இயக்குநர் மகிழ் திருமேனி

ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அமலா பால் இணைந்து நடிக்கும் `விஜய் சேதுபதி 33' படத்தில் மகிழ் திருமேனி நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார் கெளதம் மேனன்.

`மீகாமன்', `தடம்' என மகிழ் திருமேனி எடுக்கும் படங்கள் மட்டுமல்ல, மகிழ் திருமேனியே சில முறை நம்மை ஆச்சர்யப்படுத்திவிடுகிறார். பல லேயர் திரைக்கதையோடு படம் எடுத்துக்கொண்டிருந்தவர் திடீரெனப் பின்னணிக் குரல் கலைஞராகி, `இமைக்கா நொடிகள்' படத்தில் திரையில் நடித்து மிரட்டிய அனுராக் காஷ்யப்புக்குக் குரல் கொடுத்து திரைக்குப் பின்னாலிருந்து மிரட்டினார். தற்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி - இயக்குநர் மகிழ் திருமேனி
விஜய் சேதுபதி - இயக்குநர் மகிழ் திருமேனி

விஜய் சேதுபதி, அமலா பால் இணைந்து நடிக்கும் `விஜய் சேதுபதி 33' படத்தின் படப்பிடிப்பு, பழநி, ஊட்டி எனப் படு விரைவாக நடந்துவருகிறது. ஒரு பன்னாட்டுக் கதைக்களம் கொண்ட இந்தப் படம் இசைக் கலைஞர்களின் வாழ்வியலைக் குறித்தது என்பது மட்டும் படக்குழுவினரால் சொல்லப்பட்டது. இந்நிலையில், படத்தில் நடிக்கும் சில கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தில் மகிழ் திருமேனி நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மகிழ், ஏற்கெனவே கெளதமிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவரிடமே கேட்டேன். ``இங்க இப்போ ஷூட்லதான் இருக்கேன்," எனத் தொலைபேசி அழைப்பை எடுத்தவுடன் கூறினார். ``இயக்குநர், டப்பிங் கலைஞர், இப்போ நடிகர், என்ன திடீர் திடீர்னு சர்ப்ரைஸ் பண்ணுறீங்க?", எனக் கேட்டதற்கு, ``இயக்கம்தான் எப்போதுமே என்னோட ஒரே பேஷன். அதுக்காத்தான் சினிமாவுக்கு வந்தேன். அதனால அது எப்போதுமே ஸ்பெஷல். `இமைக்கா நொடிகள்' படத்துல டப்பிங் பேசுனதுக்குக் காரணம் முழுக்க முழுக்க அந்தப் படத்தோட இயக்குநர் அஜய் ஞானமுத்து மட்டும்தான். அந்தப் படத்துல நான் பேசுன ஒவ்வொரு வசனமும், அதோட உணர்வுகள், மிரட்டல்கள்னு எல்லாமே அவர் என்கூடவே இருந்து பாத்துப் பாத்து செதுக்குனது," என்றார்.

#VSP33 cast introduction poster
#VSP33 cast introduction poster

மேலும் தொடர்ந்தவர், ``இப்போ இந்தப் படத்துல நான் நடிக்கிறதுக்குக் காரணம், இதுல எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா இருக்குற குமார்தான். அவர் `இயற்கை' படத்தோட தயாரிப்பாளர், நீண்ட நாள் நண்பரும்கூட. அவர்தான் என்கிட்ட இந்தப் படத்தப்பத்தியும், என் கதாபாத்திரம் பத்தியும் சொல்லி இயக்குநர் ரோகாந்த்தையும் என்னையும் சந்திக்கவெச்சார். ரோகாந்த் என்கிட்ட என்னோட கேரக்டரைப் பத்திச் சொல்லும்போது எனக்கும் பிடிச்சது. நடிக்க ஓ.கே சொல்லிட்டேன்," என்றார்.

இந்தப் படத்துல உங்க கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது எனக் கேட்டபோது, ``எனக்குப் படத்தோட கதை முழுமையா தெரியாது. நான் கேட்டுக்கவும் இல்ல. எனக்கு என்னோட கேரக்டர் வரக்கூடிய சீன்கள் பத்தி மட்டும்தான் தெரியும். அதுவும் அதைப் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது, கூடாது. ரோகாந்த் மட்டும்தான் அதைச் சொல்லவேண்டிய ஒரே ஆள். என்னைப் பொறுத்தவரை, என்னோட கேரக்டர் எவ்வளவு முக்கியமானதுன்னு எனக்கு நல்லா தெரியும்," என்றார் மகிழ்.

Day one shoot of #VSP33
Day one shoot of #VSP33

தொடர்ந்து நடிக்க விருப்பமிருக்கிறதா, வேறு வாய்ப்புகள் ஏதும் வந்துள்ளனவா, எனக் கேட்டதற்கு, ``விருப்பம்னா கண்டிப்பா இயக்கம்தான். நடிப்பு, டப்பிங் எல்லாமே வரும் வாய்ப்பைப் பொறுத்து மாறும்!" என்றார்.

``நடிக்கத் தொடங்கிட்டிங்க, என்னதான் வாய்ப்புகளைப் பொறுத்து விருப்பம் மாறினாலும், சில இயக்குநர்கள் கேட்டா அந்த வாய்ப்பை மறுக்க முடியாதில்லையா. உதாரணத்துக்கு இப்போ கெளதம் மேனன், அவர் படத்துல உங்கள நடிக்கச் சொன்னா என்ன சொல்லுவீங்க?", என்றதற்கு, கொஞ்சமும் யோசிக்காமல், ``கெளதம் என்னை நூறாவது மாடியில இருந்து குதிக்கச் சொன்னாகூட குதிப்பேன். அவர் என் வாழ்க்கையில அத்தனை முக்கியமானவர்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு