Published:Updated:

``இந்திய கைத்தறியின் பெருமையை உலகம் முழுதும் சேர்த்தது `மகாநடி'!'' - ஆடை வடிவமைப்பாளர் கௌரங் ஷா

குழந்தை சாவித்திரி முதல் மரணப் படுக்கையில் இருக்கும் சாவித்திரி வரை 'மகாநடி' படத்தில் கீர்த்தி சுரேஷின் ஆடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர் கௌரங் ஷாவுக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு அவரிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

66-வது தேசிய விருது டோலிவுட்டுக்கு மிகவும் ஸ்பெஷல். 29 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகம் வென்றிருக்கிறது. தன் அசாத்திய நடிப்பால் மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக்கான 'மகாநடி' திரைப்படத்தில், சாவித்திரியாக வாழ்ந்த கீர்த்தி சுரேஷ்தான் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.

Gaurang Shah
Gaurang Shah

சாவித்திரியின் தோற்றத்தை அப்படியே கொண்டுவந்த ஆடை வடிவமைப்புக்கும் தேசிய விருது கிடைத்திருக்கிறது. குழந்தை சாவித்திரி முதல் மரணப் படுக்கையில் இருக்கும் சாவித்திரி வரை கீர்த்தி சுரேஷின் ஆடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர் கௌரங் ஷாவுக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு அவரிடம் பேசினோம்.

தேசிய விருது அறிவித்தவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?

Keerthy from Nadigaiyar Thilagam movie
Keerthy from Nadigaiyar Thilagam movie

மிகவும் சந்தோஷமாக இருந்தது. தேசிய விருது நடுவர் மன்றத்தின் இந்தத் தேர்வு, இந்தப் படத்துக்கு மட்டுமல்ல, அனைத்துக் கைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் மிகப் பெரிய கௌரவத்தைக் கொடுத்திருக்கிறது. இது, இந்தியக் கைத்தறி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். என் 20 வருடக் கைத்தறி உற்பத்தி பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், ஃபேஷன் உலகில் கைத்தறி புடவைக்குச் சிறப்பு அங்கீகாரம் பெற உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விருது கிடைக்குமென ஏற்கெனவே நினைத்தீர்களா?

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து சாவித்திரி அம்மாவின் தோற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென என்னிடம் சொன்னபோது, விருது பற்றியெல்லாம் யோசிக்கவேயில்லை. கொடுத்திருக்கும் பொறுப்பைக் குறைகள் ஏதுமில்லாமல் செய்து கொடுப்பதே என் நோக்கமாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் என்னை இணைத்ததற்கான காரணம், நான் கைத்தறி மீது வைத்திருக்கும் அளவில்லாத காதல்தான். அதிலும் என்னுடைய ஃபேவரைட் ஃபேஷன் ஆடையான புடவையை வடிவமைப்பதால் கிடைத்த மன நிம்மதியை அளவிட முடியாது. இது இந்தியக் கைத்தறிக்குக் கிடைத்த விருதாகத்தான் நினைக்கிறேன்.

புதுமையான ஆடை வடிவமைப்பு மற்றவர்களுக்குப் பிடிக்க வைப்பது எவ்வளவு பெரிய சவாலோ அதே அளவு சவால் திரைப்படத்தில் நாம் ஏற்கெனவே கண்ட உடைகளை அப்படியே கொண்டு வருவதிலும் இருக்கிறது.
கௌரங் ஷா

'மகாநடி' திரைப்பட அனுபவம் எப்படி இருந்தது?

Keerthy Suresh
Keerthy Suresh

எந்த ஒரு ஆடை வடிவமைப்பாளரும் கனவு காணும் வாய்ப்பாக இந்தத் திரைப்படம் எனக்கு அமைந்தது. என்னுடைய திறமையை வெளிப்படுத்த எனக்குக் கிடைத்திருக்கும் சரியான சந்தர்ப்பம் என்று முதல் நாளே எனக்குத் தோன்றியது. சாவித்திரி அம்மா வாழ்ந்த காலத்திலிருந்த ஃபேஷன் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆறு மாதங்கள் ஆனது. ஆராய்ச்சி முடிந்த பிறகு, 100 கைவினை கலைஞர்களைக் கொண்டு கீர்த்தி சுரேஷுக்கு சாவித்திரி அம்மாவின் தோற்றத்தைக் கொண்டு வந்தோம். அதற்கு ஒரு வருடம் ஆனது. இந்தப் பயணத்தில் சாவித்திரி அம்மாவைப் பற்றிப் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தெரிந்துகொண்டோம். அவர், எல்லாவற்றிலும் சிறந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுப்பவர்.

அந்தக் காலத்தில் அவர் உடுத்தியிருந்த அனைத்து ஆடைகளும் கைத்தறிதான். ஆனால், இன்று எல்லாமே மின் தறியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் தறியால் செய்யப்படும் துணிவகைகள் நிச்சயம் சாவித்திரி அம்மாவின் தோற்றத்தை ஈடு செய்ய முடியாது. 'மகாநடி', கைத்தறியின் பெருமையை உலகமெங்கும் பரப்புவதற்கு ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதை நன்கு பயன்படுத்தியும் கொண்டது என்று நினைக்கிறேன்.

Keerthy Suresh
Keerthy Suresh
Art By: Sundar

இயக்குநர் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை ஏராளமான விஷயங்களில் உறுதுணையாக இருந்துள்ளனர். எனக்கு முதல் படம் என்பதால் என் பதற்றத்தைத் தணிக்க என்கூடவே அவர்களும் பயணித்து, தன்னம்பிக்கைக் கொடுத்து நிறைய கற்றும் கொடுத்திருக்கிறார்கள்.

படவாய்ப்புகள் வருகிறதா?

நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், நான் கைத்தறி ஆடைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறேன். அதனால், அதற்கேற்றதுபோல் படவாய்ப்புகள் வந்தால் நிச்சயம் பண்ணுவேன். 'மகாநடி' திரைப்படம், கைத்தறி புடவைகள் மீதான என் காதலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த காலத்தின் துணி வகைகளைப் புதுமை கலந்து உற்பத்தி செய்வதிலிருந்த சவால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதுமையான ஆடை வடிவமைப்பு மற்றவர்களுக்குப் பிடிக்க வைப்பது எவ்வளவு பெரிய சவாலோ அதே அளவு சவால் திரைப்படத்தில் நாம் ஏற்கெனவே கண்ட உடைகளை அப்படியே கொண்டு வருவதிலும் இருக்கிறது. கனமான பார்டர்கள் கொண்ட மங்களகிரி மற்றும் கோட்டா புடவைகள், ஆர்கான்சா, கைத்தறியிலான சாட்டின் மற்றும் சிபான் புடவைகள் எனப் புதுமையான ஃபேஷன் ஸ்டேட்மென்டுகளை உருவாக்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Vikatan

ஏராளமான வகைகளில் கைத்தறிகளின் முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். ஆனால், ஒரு திரைப்படம் மூலம் நிறைய முக்கியத்துவத்தைப் பரப்பியதோடு ரசிகர்களையும் சம்பாதித்திருக்கிறோம். இப்படிப்பட்ட வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் நிச்சயம் திரைப்படத்ததுக்காக வேலைசெய்வேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு