Published:Updated:

கோட்டையில் கொடியாய்ப் பறந்துகொண்டிருந்த சினிமாவை, வீட்டுத்திண்ணைக்குக் கொண்டுவந்தவர் மகேந்திரன்! #HBDMahendran

மகேந்திரன் 25
மகேந்திரன் 25

சினிமாவை, கரிசல்காடு, பொட்டல்காடு, சோளக்காடு, வயக்காடு எனப் பல காடுகளுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் இழுத்துவந்து விட்டவர் பாரதிராஜா என்றால், அதே நிலப்பரப்பில் பல கதைகளைச் சொன்ன இயக்குநர் மகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள்.

கலைஞர்கள், சமூகத்தின் கண்ணாடியாக இருப்பவர்கள். தன் நிலம் சார்ந்த மக்களின் இன்பங்களின், இடர்களின் பிம்பத்தைத் தங்கள் படைப்புகளில் காட்சிப்படுத்திப் பதிவுசெய்பவர்கள். மன்னர்கள், நில உரிமையாளர்கள் என வெறும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை, ஒரு தீரா மாயையாக மட்டுமே நீண்டகாலத்துக்கு படம்பிடித்துக்கொண்டிருந்தது தமிழ் சினிமா. அப்படியே ஓர் ஏழையின் குரலாக ஒரு படம் உருவாகிறதென்றாலும் அதில் உண்மைத்தன்மைக்கான வழிவகை மிகக் குறைவாகவே இருந்துவந்தது. நிலம், ஊர், வட்டாரம் என எந்தவொரு குறிப்பிட்ட வகைமையிலும் உள்ளடங்காது, பொதுமைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பிலேயே சினிமா இயங்கிக்கொண்டிருந்தது.

மகேந்திரன்
மகேந்திரன்

அப்படி இருந்த செயற்கைத்தனமான சினிமாவை, அதன் ஆதியுகத்திலிருந்து மீட்டு, இயல்புக்குள்ளும் எளிய மனித சமூகத்துக்குள்ளும் இழையோடவிட வந்தது ஒரு படைப்பாளிக்கூட்டம். ஆதியுகத்திலிருந்த சினிமாவை, அடுத்த யுகமான மறுமலர்ச்சி யுகத்திற்கு அதை மாற்றி வடிவமைப்பதில் அதீத தீவிரம் காட்டிய இயக்குநர்களில் ஒருவர், மகேந்திரன். சினிமாவை, கரிசல்காடு, பொட்டல்காடு, சோளக்காடு, வயக்காடு எனப் பல காடுகளுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் இழுத்து வந்துவிட்டவர் பாரதிராஜா என்றால், அதே நிலப்பரப்பில் பல கதைகளைச் சொன்ன இயக்குநர் மகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள்.

வியந்து பார்க்கப்பட்ட கதாநாயகர்களும் நாயகிகளும் மட்டுமே தோன்றிய திரையில், பக்கத்துவீட்டு இளைஞனைப் போன்ற ஒருவனைக் காட்டி, அவன் வாழ்வு, அவன் தங்கை, அவன் காதல், அவன் பகை, அவன் அகம்பாவம் என எல்லாவற்றையும் சேர்த்த காளியை, தன் 'முள்ளும் மலரும்' படத்தில் அறிமுகப்படுத்தியபோதே, கோட்டைகளில் கொடியாய்ப் பறந்துகொண்டிருந்த சினிமாவை, தமிழர்களின் வீட்டுத் திண்ணைக்குக் கொண்டுவந்தார் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', அவருடைய முதல் படமென்றாலும், அதற்கு முன்பே பல படங்களுக்கு கதை எழுதியிருந்தார். 'தங்கப்பதக்கம்', 'காளி', 'கங்கா' எனப் பல புகழ்பெற்ற படங்களுக்கு கதை எழுதியவர், மகேந்திரன். அதுபோக சில படங்களுக்குத் திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியிருக்கிறார்.

Mullum Malarum
Mullum Malarum

என்றாலும், அவர் சொல்ல விரும்பிய கதைகளை, தான் இயக்கிய படங்களில்தான் காட்சிப்படுத்தினார். அண்ணன்-தங்கை இடையே இருக்கும் உணர்வுப் பரிமாற்றங்களைப் பற்றிய படங்களில் 'முள்ளும் மலரும்' படத்துக்கு ஒரு தனி இடமுண்டு. அதற்குக் காரணம், அந்தப் படத்தில் வந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்புதான். குறிப்பாக, ரஜினி ஏற்று நடித்த காளி பாத்திரத்தின் வடிவமைப்பு. முன்கோபம், முன்முடிவு, தீர்க்கம் உள்ளிட்ட குணங்களோடு இருக்கும் காளி, படத்தின் கதைப்படி முரடனாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும், அடிப்படையில் யாருக்கும் தீங்கு விளைவிக்காத நல்லவனாகத்தான் இருப்பான். அவனை, ஒரு வட்டத்துக்குள் அடைப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், ஒரு முழு நீளப் படத்தில் காளியின் இந்த அரிய பண்புகளைவைத்தே கதை சொல்லி, இறுதிக்காட்சிவரை அதைக் கடத்தியிருப்பார். அந்த கதாபாத்திரத்தைப் பற்றி மகேந்திரனே 'கெட்டபய சார் இந்த காளி' என்ற வசனத்தையும் வைத்திருப்பார்.

தமிழ் சினிமாவில் நாவல்களோ, சிறுகதைகளோ படமாக்கப்பட்டபோதெல்லாம் பெரும்பாலும் தோல்வியே விளைவாக வந்துள்ளன. ஒரு முன்னூறு பக்கக் கதையானாலும் சரி, ஐந்து பக்கக் கதையானாலும் சரி, 60 முதல் 65 காட்சிகளுக்குள் அடக்கி ஒரு திரைக்கதையாக எழுதுவதில் திரைக்கதை ஆசிரியர்களிடம் அத்தனை சிக்கல்கள் இருந்தன. அதை உடைத்துக்காட்டியவர், மகேந்திரன்.

Vijayan
Vijayan

தன்னுடைய 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தை, புதுமைப்பித்தனின் 'சித்திரன்னை' என்ற நாவலைத் தழுவி எடுத்தார். இந்தக் கதையின் சிறப்பம்சமே அதில் கதாநாயகன் என்ற தனிப் பாத்திரம் இல்லாததுதான். திரைக்கதை இலக்கணத்தில் முதன்மைப் பாத்திரம் ஆணாகவோ, பெண்ணாகவோ, நல்லவராகவோ, கெட்டவராகவோ என, எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் பாத்திரத்தைப் 'ப்ரோட்டோகானிஸ்ட்' என்று சொல்வார்கள். அவன்/அவள் குறிக்கோள் என்ன, அதை அடையும் பாதையில் இருக்கும் தடைகள் என்ன, அந்தத் தடை எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் பெரும்பாலும் படத்தின் திரைக்கதையாக இருக்கும். நீண்டகாலத்துக்கு ப்ரோட்டோகானிஸ்ட்டை நல்லவனாக, மன்னனாக, கடவுளாக, ஊர்த்தலைவனாக, காதலனாக மட்டுமே காட்டிவந்தது தமிழ் சினிமா. அதை உடைத்து, ஒரு கொடியவனை ப்ரோட்டோகானிஸ்ட்டாக வைத்து 'உதிரிப் பூக்கள்' படத்தை இயக்கினார். ஓர் ஊரே வெறுக்கும் ஒரு தன்னலவாதியை இரண்டரை மணிநேரத்துக்கு முன்னணி பாத்திரத்தில் வைத்து படமெடுக்கும் துணிச்சல் அன்றைய காலத்தில் இயக்குநர்களுக்குக் குறைவாகவே இருந்தது.

பாத்திரப் படைப்பில் அவ்வளவு புதுமைகளைக் கையாண்ட மகேந்திரன், திரைக்கதை எழுதுவதிலும் சில நுணுக்கங்களைக் கடைபிடித்தார். அவரது திரைக்கதை ஆற்றலுக்கு பெரிய உதாரணமாகக் கூறவேண்டுமென்றால், அவர் கடைசியாக இயக்கி 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' படத்தைச் சொல்லலாம். தமிழின் முதல் குடிமக்கள் காப்பியமான 'சிலப்பதிகார'த்தை அடிப்படையாகக்கொண்டு அதை நவீனமயப்படுத்தி திரைக்கதை அமைத்துப் படமாக்கினார். அந்தப் படம் வணிக அடிப்படையில் பெரும் வெற்றியடையவில்லை என்றாலும் பல வெளிநாடுகளில், திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதும், இங்குள்ள நிறைய திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருப்பதும் அதன் தரத்துக்கான சான்றுகள் எனலாம்.

Sasanam
Sasanam

இன்றைய நவீனயுக சினிமாவில் உருவாக்கப்படும் பல படங்களில், திரையில் தோன்றும் காட்சிகளிலும் வசனங்களிலும் திரைமொழியின் அடிப்படையில் குறியீடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. படத்துக்கான மையக் கரு அல்லது முகமையான ஒரு முடிச்சு இத்தகைய குறியீடுகளில் மறைத்துவைக்கப்பட்டு, திரைக்கதை எழுதப்படுவது வழக்கம். இதைத் தன் தொடக்க காலத்திலேயே செய்தவர், மகேந்திரன். அவருடைய 'நண்டு' படத்துக்கு ஏன் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்பதை படம் பார்த்து விளங்கிக்கொள்ளலாம்.

ஆதியுகம், மறுமலர்ச்சியுகம், நவீனயுகம் என அன்றுதொட்டு இன்று வரை தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த காலகட்டத்தையும் மூன்று யுகமாகப் பிரித்தால், அதில் மகேந்திரன் தனக்கான ஒரு இடத்தைத் தனக்கென மட்டுமே வைத்திருந்தார். இன்னமும் வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு