Published:Updated:

`கேன்ஸ், பெர்லின், டொரான்டோ...!’ -இணையத்தில் களைகட்டவிருக்கும் திரைப்பட விழாக்கள்!

கேன்ஸ் திரைப்பட விழா
கேன்ஸ் திரைப்பட விழா ( Flickr )

திரைப்பட விழாக்களில் வெளிவராத முக்கியப் படங்களையும் திரையிடுவது வழக்கம். இந்த முறை, இணையம்மூலம் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் இவை வெளியிடப்படுமா என்பது சந்தேகமே.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் லாக்டௌன் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் என அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள 20 திரைப்பட விழாக் குழுவினர், தங்களது திரைப்பட விழாவை யூடியூப் மூலம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை ட்ரைபேகா என்டர்பிரைசஸ் (Tribeca) நிறுவனமும் யூடியூபும் வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள திரைப்பட விழாக்கள் அனைத்தும் ஒன்றாக 10 நாள்களுக்கு இணையம் மூலம் நடைபெறவுள்ளன. இதில், உலகின் முக்கியத் திரைப்பட விழாக்களான பெர்லின், சுண்டேன்ஸ், டொரான்டோ, ட்ரைபேகா மற்றும் வெனிஸ் ஆகியவையும் அடங்கும். இதோடு, உலகின் இதர சிறந்த திரைப்பட விழாக்களான ஜெருசலம், மும்பை, சாராஜேவோ, சிட்னி, டோக்கியோ மற்றும் லண்டன் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

திரைப்பட விழா
திரைப்பட விழா
Flickr

ஆனால், இந்த இணையத் திரைப்பட விழாவிற்கான நிகழ்ச்சிகள் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. திரைப்பட விழாக்களில் வெளிவராத முக்கிய படங்களையும் திரையிடுவது வழக்கம். இந்த முறை இணையம் மூலம் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில், இவை திரையிடப்படுமா என்பது சந்தேகமே.

திரைப்பட விழாவில், எப்போதும்போல படங்கள், ஆவணப்படங்கள், இசை மற்றும் விவாதம் ஆகியவை இடம்பெறும். கேன்ஸ், வெனிஸ் மற்றும் டோரான்டோ ஆகிய முக்கிய திரைப்பட விழாக்கள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதே, இந்த முடிவு எடுக்கப்பட முக்கியக் காரணம். இதில், வெனிஸ் மற்றும் டொரான்டோ திரைப்பட விழாக்கள் எப்போதும் செப்டம்பர் மாதம் நடப்பவைதான் என்றாலும், அவையும் நடைபெற வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஸ்டூடியோக்கள், தங்களது படங்களை இணையம் மூலம் மக்களிடம் கொண்டுசேர்க்க முடிவுசெய்துள்ளனர். இணையம் மூலம் இலவசமாக இந்த விழா நடத்தப்பட்டாலும், பார்வையாளர்கள், கொரோனாவிற்காக சிறிய நிதியை உலக சுகாதார மையத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.

Vikatan

இதுபற்றி பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவின் அமைப்பினர் கூறுகையில், ``யூடியூப் மூலம் சிறந்த திரைப்படங்களையும், திறமைகளையும் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம். இதன்மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் திரைப்படக் கதை சொல்லுதலின் நுட்பங்களையும், கலை ஆளுமைகளையும் அறிந்துகொள்ள முடியும்" என்றனர்.

மேலும், இதுகுறித்து ட்ரைபேகா திரைப்பட விழாவின் இணை நிறுவனர் ஜேன் ரோசென்தால் கூறுகையில், "ஊரடங்கின்போது மக்களை ஊக்கப்படுத்தவதும், ஒன்று திரட்டுவதுமே எங்களின் எண்ணம். உலகம் முழுமைக்கும் தற்போது ஒரு நல்ல மாற்றம் தேவைப்படுகிறது. அந்த புத்துணர்ச்சியை இந்த விழாக்கள் தரும் என நம்புகிறோம்" என்றார்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்கள், விழாக்களில் திரையிடப்படவிருக்கும் படங்களை வீட்டிலிருந்தபடியே காணலாம்.

அடுத்த கட்டுரைக்கு