Published:Updated:

`சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் அசத்தல் மேக்கிங் வீடியோ!

உ. சுதர்சன் காந்தி.

`சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்தரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான், `சைரா நரசிம்ம ரெட்டி'. சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பொருள் செலவில் தயாராகிவருகிறது. அவரின் மகனும், நடிகருமான ராம் சரண் இப்படத்தைத் தயாரித்துள்ளார். `ரேஸுகுர்ரம்', `துருவா' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி, இதை இயக்கியுள்ளார். சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் என அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'சைரா நரசிம்மா ரெட்டி'
'சைரா நரசிம்மா ரெட்டி'

ஒவ்வொரு நடிகர்களின் பிறந்த நாளன்றும் இந்தப் படத்தில் அவர்களின் லுக் என்ன என்பதை வெளியிட்டுவந்தது, படக்குழு. கடந்த வருடம் சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22-ம் தேதி படத்தின் டீசர் வெளியானது. பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் எனப் பிரமாண்டமாக உருவாகிவருகிறது, `சைரா நரசிம்ம ரெட்டி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகிவரும் இப்படம், அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. ஒன்றரை நிமிடங்கள் உள்ள அந்த வீடியோவில் சண்டைக்காட்சிகள், ஒவ்வொரு கேரக்டருக்கான அறிமுகங்கள் என இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தப் படத்தின் டிரெய்லரை ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியிட உள்ளனர். சிரஞ்சீவி படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனதால், இந்தப் படத்துக்கு மெகா ஸ்டார் ஃபேன்ஸ் வெயிட்டிங்!