கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“இனிமேதான் நிதானமா நடிக்கணும்!!”

ஜோஜு ஜார்ஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோஜு ஜார்ஜ்

அதிகாரத்தோட அழுத்தத்துல பலிகடாவாக்கப்படுற ஒரு போலீஸ் ரோல் அது. அந்த ரோலுக்காக 132 கிலோ வெயிட் போட்டேன். டைரக்டர் மார்ட்டின் பிரக்காத் என் நெருங்கிய நண்பர். அவர் இயக்கிய ‘சார்லி’, ‘உதாரணம் சுஜாதா’ படங்களை நானும்

“ ‘நெய்யப்பம் தின்றால் ரெண்டுண்டு காரியம்’னு மலையாளத்துல பழமொழி சொல்வாங்க. அதாவது செம டேஸ்ட்டா அப்பத்தைச் சாப்பிட்ட பலன் ஒண்ணுன்னா, சாப்பிடறப்போ மீசையில நெய் பட்டு அடர்த்தியா கன்னங்கரேல்னு மீசை வளருமாம். அதான் ரெண்டாவது பலன்!” - மலையாளிகளுக்கு அடர்த்தியாக மீசை வளர்வது பற்றி இப்படிச் சொல்லிச் சிரிக்கிறார் ஜோஜு ஜார்ஜ். இன்றைய தேதியில் நடிப்பில் கோலிவுட் வரை வளர்ந்து நிற்கும் கேரளத்து மீசைக்கார நண்பர்... திறமைசாலி நடிகர்! அவருடன் சம்சாரித்தபொழுது...
 “இனிமேதான் நிதானமா நடிக்கணும்!!”

“ஜோஜு ஜார்ஜைத்தான் தன்னம்பிக்கைக்கு உதாரணமா மலையாள சினிமால சொல்றாங்க. வயசானபிறகு ஹீரோவா நடிச்சதாலா?”

“என் முழுக் கதைய தெரிஞ்சுக்கோங்க. திருச்சூர்தான் பிறந்த ஊர். சின்ன வயசுல இருந்தே சினிமான்னா அவ்ளோ இஷ்டம். திருவிழாக்கள்ல சினிமா பார்க்குறதுக்காகவே பாயும் சைக்கிளுமா ஊரு விட்டு ஊரு போவேன். காலேஜ் முடிச்சப்புறம் உதவி இயக்குநரா வரணும்னு கொச்சின்ல ஏறாத சினிமா கம்பெனி இல்லை. இயக்குநர் சித்திக் தான் ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்துல என்னைச் சேர்த்துக்கிட்டதோட சின்னதா ஒரு ரோலும் கொடுத்தார். அதன்பிறகு நிறைய படங்கள்ல துணை நடிகரா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஊர்ல நண்பர்கள்கிட்ட கெத்தா நானும் ஸ்க்ரீன்ல இருக்கேன்னு காட்டுறதுக்காகவே நிறைய குட்டிக்குட்டி ரோல்ல நடிச்சேன். 2000-த்துல வினயனோட ‘தாதா சாகேப்’ படத்துல மம்மூட்டி சாரோட ஒரு சீன்ல நடிச்சேன். நடிச்சேன்னு சொல்றதைவிட அவர் முதுகுக்குப் பின்னாடி நின்னேன்னு சொல்லலாம். அந்த ஒரு ஃபிரேமுக்காக நண்பர்கள் ஊருல படம் பார்த்துட்டு விசிலடிச்சாங்க. படத்துல ஒரு டயலாக் வேற பேசினதால என்னோட கிராமத்துல போஸ்டர்லாம் அடிச்சிட்டாங்க. என்னமோ மம்மூட்டிக்கு ஈக்வலா நடிச்ச மாதிரி காட்டிக்கிட்டாங்க. இதனாலேயே அடுத்து வெறித்தனமா வாய்ப்பு கேட்டு சுத்த ஆரம்பிச்சேன். அடுத்த வருஷமே மோகன்லாலுக்குப் பக்கத்துல நிக்கிற வாய்ப்பு ‘ராவணபிரபு’ படத்துல கிடைச்சது. ஜென்ம சாபல்யம் அடைஞ்சுட்டேன்னு வையிங்க. அதன்பிறகு 70 படங்கள் அப்படி போலீஸ் ரோல், தபால்காரர் ரோல், வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் ஒருவன்னு வெரைட்டியா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். கிட்டத்தட்ட மலையாள சினிமால எல்லா ஹீரோக்களின் படங்கள்லயும் அப்படி நடிச்சுட்டேன். என்னிக்காச்சும் பெரிய ரோல் வரும்னு காத்திட்டிருந்தப்போதான் கொஞ்சம் கொஞ்சமா முகம் பலருக்குத் தெரிய ஆரம்பிச்சது. ‘ஏய், அந்தப்படத்துல போலீஸ்காரனா நடிச்சது நீதானே?’ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆமா, என் கரியர்ல 40 படங்கள்ல போலீஸா நடிச்சிருக்கேன். ஓரளவு வில்லனா, குணச்சித்திர நடிகரா மெல்லத் தெரிய ஆரம்பிச்சேன். அதுக்குள்ள 20 வருஷம் ஓடிருச்சு. நான் நடிக்க வந்தது 1995. என் பேர் வெளில தெரிஞ்சதே 2015-லதான். அப்போதான் ‘ஒரு செகண்ட் க்ளாஸ் யாத்ரா’ படத்துல நாலு லீடு ரோல்ல ஒருவனாவும், ‘ஆக்‌ஷன் ஹீரோ பைஜு’ படத்துல போலீஸ் ஏட்டாவும் என் பெயர் சொல்றமாதிரி நடிச்சிருந்தேன்..!”

 “இனிமேதான் நிதானமா நடிக்கணும்!!”

“நாயாட்டு (வேட்டை) படம்தான் சமீபத்திய கேரளத்தின் சென்சேஷன் மூவி. அந்த போலீஸ்காரர் மணியன் ரோல் வித்தியாசமா தெரிஞ்சதே?”

“அதிகாரத்தோட அழுத்தத்துல பலிகடாவாக்கப்படுற ஒரு போலீஸ் ரோல் அது. அந்த ரோலுக்காக 132 கிலோ வெயிட் போட்டேன். டைரக்டர் மார்ட்டின் பிரக்காத் என் நெருங்கிய நண்பர். அவர் இயக்கிய ‘சார்லி’, ‘உதாரணம் சுஜாதா’ படங்களை நானும் இணைந்து தயாரிச்சேன். அவர் இயக்கிய ‘ஏபிசிடி’ படத்துக்கு முன்னாடியே ‘எனக்கும் ஒரு ரோல் கொடுப்பா’ன்னு உரிமையா கேட்டேன். ‘உனக்குலாம் என் படத்துல ரோல் இல்லை’ன்னு சொல்லிட்டார். ‘நாயாட்டு’ உனக்கான கதைன்னு அவரே வந்து சொன்னார். கொஞ்சம் முதிர்ச்சியான கேரக்டர். ஒரு போலீஸ்காரனோட வலியை அந்த கேரக்டர் பிரதிபலிக்கும். கதையைக் கேட்டதும் ஓகே சொல்லி அந்த மணியனா மாறிட்டேன். கூட நடிச்ச குஞ்சாக்கோவே, ‘எப்படிங்க கேரள போலீஸ்ல வேலை கீல பார்த்தீங்களா?’ன்னுகேட்டார். படம் பார்த்த எல்லோரும் என் நடிப்பை அவ்ளோ பாராட்டுறாங்க. விருது கிடைக்கும்னு சொல்றாங்க!”

“சினிமால அவ்ளோ வயசான ஆளா தெரியிறீங்க. ஆனா, நேர்ல வயசு கம்மியா தெரியிறீங்களே..?”

“எனக்கு 43 வயசுதான். இயல்புலயே எனக்கு பாம்பு உடம்பு. நல்லா சாப்பிட்டா குண்டா தெரிவேன். சாப்பிடலைனா நார்மலா இருப்பேன். 2018-ல ‘ஜோசப்’ படத்துல ஹீரோவா நானே தயாரிச்சு நடிச்சேன். கதைப்படி நான் ரிட்டயர்டு போலீஸ் ஆபீசர். குடிகாரர் ரோல் வேற. அதனாலயே அப்படி ஒரு தோற்றத்துக்கு மாறி நின்னேன். அடுத்து சனல்குமார் சசிதரனோட ‘சோழா’ படத்தையும் தயாரிச்சு நடிச்சேன். தேசிய விருது சோழாவுக்குக் கிடைச்சாலும் இந்த ரெண்டு படங்கள் மூலமா என் வயசு 50 ப்ளஸ்னு பலர் நினைச்சுட்டாங்க. விழாக்கள்ல நேர்ல பார்க்குறப்ப ‘இவ்ளோ சின்ன ஆளா தெரியிறீங்களே’ன்னு ஆச்சர்யமா கேட்பாங்க. எல்லாம் அந்தந்த கேரக்டர்கள் செய்த மாயம்!”

“25 வருஷமா நடிக்கிறீங்க. இப்ப ஹீரோவா நிறைய வாய்ப்பு வருமே... இனி கேரக்டர் ரோல்ஸ் பண்ணுவீங்களா?”

“அப்படில்லாம் இல்லை. போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். நான் தயாரிச்சு ஹீரோவா நடிச்ச ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’, ‘ஜோசப்’லாம் கதையைக் கேட்டு நானே தயாரிச்சேன். ஷாஹி கபீர்னு முன்னாள் கேரள போலீஸ்காரரோட நட்பு கிடைச்சது. வேலை தந்த அழுத்தம் காரணமா போலீஸ் வேலையை ராஜினாமா பண்ணிட்டு ஒரு அருமையான க்ரைம் திரைக்கதை எழுத்தாளரா மாறியிருக்கார். புனைவு கலந்து அவர் எழுதுன கதைதான் ‘ஜோசப்.’ உறுப்பு தானத்தோட சொல்லப்படாத க்ரைம் பக்கங்களை அலசுச்சு. அந்த ஜோசப் பாத்திரம் நான் நடிச்சா நல்லா இருக்கும்னு கேட்டு நானே நடிச்சேன். கதையை எழுதிய ஷாஹியே, ‘இந்த கேரக்டரை எழுதுனப்போ என்ன மனசுல நினைச்சு எழுதினேனோ அப்படியே இருக்கீங்க’ன்னு சொன்னார். அவர் எழுத்துலதான் ‘நாயாட்டு’ம் வந்திருக்கு. அதான் நேர்த்தியா போலீஸ் கேரக்டரை உள்வாங்கிக்க முடிஞ்சது.

இன்னிக்கு ஹீரோவா வாய்ப்பு வருதேன்னு பணம் மட்டுமே குறிக்கோளா நினைச்சா அடுத்த ரெண்டு வருஷத்துல காணாமப் போயிடுவேன். இருபது வருஷப் போராட்டத்தை டக்குனு நிறுத்திக்க விரும்பல. தவிர, கதைகள் பிடிச்சா என்ன ரோல்னாலும் நடிக்க ஆசை. ஆனா, ஜோஜுவுக்கு அதுல சவால் காத்திருக்கணும். ஒரு காலத்துல மம்மூக்கா பின்னாடி ஃப்ரேம்ல தூரமா நின்னதுக்கே என் நண்பர்கள் ஊருல அமர்க்களப்படுத்திட்டானுங்க. இப்ப அவரோட ‘ஒன்’ படத்துல நண்பனா நடிச்சிருந்தேன். படத்துல அவரை, ‘ஏடா’ன்னு உரிமையா நான் கூப்பிட்டதைப் பார்த்து அதே நண்பர்கள் ‘சிலிர்ப்பா இருக்கு’ன்னு கொண்டாடித் தீர்க்குறாங்க. என்னோட வெற்றியா இதைப் பார்க்குறாங்க. அதனால இனிமேதான் நிதானமா நடிக்கணும். பகத் பாசிலோட ‘மாலிக்’, நிவின்பாலியோட ‘துறமுகம்’, தவிர ‘படா’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட நான்கு படங்களில் கதையின் நாயகனா நடிக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்புல ‘பஃபூன்’ படத்துல முக்கிய ரோல் தமிழ்ல பண்றேன். தெலுங்குல ஒரு மிகப்பெரிய ஸ்டார் படத்துல மிக முக்கியமான ரோல்ல நடிக்கிறேன். அது யார், என்ன படம்னு சஸ்பென்ஸ் இருக்கட்டுமே ப்ளீஸ்..!”

 “இனிமேதான் நிதானமா நடிக்கணும்!!”

“தமிழ்ல நிறைய வாய்ப்புகள் வருதாமே?”

“தமிழ் ஆடியன்ஸ் எப்பவும் மலையாள சினிமா மேல ஒரு பாசம் வெச்சிருப்பாங்க. அதேபோல எப்பவுமே என்னைப்போல மலையாள நடிகர்களுக்கு பெருங்கனவு தமிழ் சினிமா. ஒரு கொண்டாட்டமான சினிமா உலகம் கோடம்பாக்கம். இங்கே பெரிய ஸ்டார்கள் இருக்காங்க. என்னோட முதல் படமே தனுஷுடன் நடிச்சிருக்கேன். கார்த்திக் சுப்புராஜ், நான் நடிச்ச ‘ஜோசப்’, ‘சோழா’ பார்த்துட்டு என்னை நடிக்க அழைச்சார். செம ஜாலியா ‘ஜெகமே தந்திரம்’ல நடிச்சிருக்கேன். தனுஷ் அவ்ளோ அன்பா, மரியாதையா நடத்தினார். ‘நிறைய படங்கள் நாம சேர்ந்து பண்ணலாம் சேட்டா’ன்னு சொன்னார். ‘சோழா’ படத்தைத் தமிழ்ல கார்த்திக் சுப்புராஜோட சேர்ந்து ‘அல்லி’யா மாத்தி ரீமேக் பண்ணிட்டிருக்கோம்! ‘நாயாட்டு’க்குப் பிறகு கதை சொல்ல நிறைய புதுமுக தமிழ் டைரக்டர்ஸ் அப்ரோச் பண்றாங்க. பொறுமையா கதை கேக்கணும்!”

“இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?”

“எதுவுமே சொல்ல விரும்பல. பாருங்க... 20 வருஷமா, ‘சார் தபால்’, ‘ஓ.கே சார்’, ‘அதோ போறாரே அவர்தான்!’ மாதிரி டயலாக் பேசுன ஜோஜுவே ஒரு இடத்தை சினிமால பிடிச்சிருக்கான். அப்போ உங்களால முடியாதா? வாய்ப்பு கிடைக்கலையேன்னு துவண்டு போயிடாதீங்க. எந்த மொமண்ட்ல தங்கம் கிடைக்கும்னு தெரியாது. துவளாம தோண்டிட்டே இருங்க! Strive Hard, strike Gold!”