Published:Updated:

3 ரோஜா பூ மட்டுமே மாலை; விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஆட்கள்! -லாக் டவுனால் நடிகருக்கு நேர்ந்தசோகம்

சசி கலிங்கா
சசி கலிங்கா

`பின்னர் ஒரு நண்பர் ஒருவர் உதவியுடன் சசியேட்டன் வீட்டுக்குச் சென்றேன். வீட்டை அடைந்தபோது, ​​எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் பெரிய முற்றத்தில் ஒரு மேஜையில் சசியேட்டன் இறந்துகிடந்தார்.'

21 நாள் லாக் டவுனில் இந்தியாவில் பல்வேறு துயரச் சம்பவங்கள் நடக்கவும் தவறவில்லை. சமீபத்தில் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நடிகர் சேது மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். லாக் டவுன் காலத்தில் நடந்த இந்த இறப்பு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலகில் நிறைய நண்பர்களைச் சம்பாதித்துள்ள சேது, பல பிரபலங்களுடன் நெருங்கிப் பழகி வந்தார். எனினும், தற்போதுள்ள ஊரடங்கு காரணமாகப் பல்வேறு பிரபலங்கள் சேதுவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பல நடிகர்கள் தங்கள் வேதனையை வலைதளங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

சசி கலிங்கா
சசி கலிங்கா

இதேபோன்று ஒரு நிலையைத் தற்போது மலையாளத் திரையுலகம் எதிர்கொண்டுள்ளது. மலையாளத் திரையுலகில் காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம்வந்தவர் சசி கலிங்கா. நாடக நடிகராக இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் மோகன்லால், மம்மூட்டி, சீனிவாசன் எனப் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சைடு ரோல்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 250 படங்கள் வரை நடித்துள்ள இவரின் உடல்நிலை சமீபத்தில் சரியில்லாமல் போனது. இதையடுத்து தனது சொந்த ஊரான கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென மரணமடைந்தார்.

`கொரோனா விழிப்புணர்வு; இரவில் திடீர் மாரடைப்பு..' -நடிகர் சேதுராமன் மரணத்தால் கலங்கும் நண்பர்கள்

இதையடுத்து அவரது உடல் கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவருக்கு அஞ்சலி செலுத்திய மற்றொரு குணச்சித்திர நடிகரான வினோத் கவூர், அப்போது நடந்த நிகழ்வுகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ``காலையில் மரண விவரம் அறிந்தவுடன் எனக்குத் தெரிந்த சினிமா நண்பர்களிடத்தில் இந்த விஷயத்தைச் சொன்னேன். ஆனால் லாக் டவுன் சூழ்நிலையால் யாரும் வெளியே வர பயந்தார்கள். ஆனால் எப்படியாவது எனக்கு சசியேட்டனை கடைசியா ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமெனத் தோன்றியது. உடனே சூழ்நிலை குறித்து அம்மா (மலையாள நடிகர் சங்கம்)வுக்குத் தெரியப்படுத்தினேன். ``யாருக்கும் வர முடியாத சூழ்நிலை. உன்னால் போக முடியும் என்றால் சங்கம் சார்பில் ஒரு மாலை வாங்கி அவருக்கு அஞ்சலி செலுத்திவிடு" என்று எனக்கு பதில் கொடுத்தார்கள்.

மோகன்லால் படத்தில் சசி கலிங்கா
மோகன்லால் படத்தில் சசி கலிங்கா

பின்னர் நண்பர் ஒருவர் உதவியுடன் சசியேட்டன் வீட்டுக்குச் சென்றேன். வீட்டை அடைந்தபோது, ​​எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் பெரிய முற்றத்தில் ஒரு மேஜையில் சசியேட்டன் இறந்துகிடந்தார். சுற்றும் முற்றும் பார்த்தேன். 250 மலையாளப் படங்கள், ஹாலிவுட் (டாம் குரூஸ் படம் ஒன்றில் சிறிய ரோலில் நடித்துள்ளார்) படங்களில் நடித்த ஒரு நடிகரின் இறுதிச் சடங்கில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஆட்கள் இருந்தனர். எல்லாவற்றுக்கும் காரணம் கொரோனா என்னும் விபத்துதான். இந்த விபத்து மட்டும் நமக்கு வரவில்லை என்றால், இந்நேரம் சசியேட்டன் உடலுக்கு சூப்பர் ஸ்டார்கள், ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்திருப்பர்.

`லீ-க்கு பக்கபலமாக இருந்த மருத்துவர்'- ஜாங்மிங் மரணத்தால் கலங்கும் சீனா #CoronaVirus

அம்மா சங்க நிர்வாகிகள் சொன்னவாறு மாலை வாங்குவதற்கு எந்தக் கடையும் இல்லை. இதனால் அவரின் வீட்டில் முற்றத்தில் மூன்று ரோஜாக்களைப் பறித்து அதை நாரில் மாலையாகக் கோத்து, `இது மட்டுமே கிடைத்தது சசியேட்டா' என்று உயிர் இல்லாமல் இருந்த அவரது உடலிடம் சொல்லிவிட்டு சங்கம் சார்பில் வைத்துவிட்டு வந்தேன். லாக் டவுன் மட்டும் இல்லையென்றால், கேரளத் திரையுலகம் மொத்தமும் சசியேட்டனுக்காக இந்நேரம் கோழிக்கோட்டில் குவிந்திருக்கும். உண்மையில் சசியேட்டன் ஒரு துரதிர்ஷ்டஷாலி" என லாக் டவுனால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நிலைக்கு மலையாளத் திரையுலகினர் தள்ளப்பட்டதை எடுத்துரைத்துள்ளார்.

சசி கலிங்காவுக்கு அஞ்சலி செலுத்தும் வினோத்
சசி கலிங்காவுக்கு அஞ்சலி செலுத்தும் வினோத்

தமிழ், மலையாளத் திரையுலகில் மட்டுமல்ல கொரோனாவால் உலகம் முழுவதும் இதே நிலைதான். கொரோனா என்னும் இந்தக் கொடிய வைரஸால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பது ஒரு பக்கம் என்றால் அப்படி இறப்பவர்கள் இறுதியாக தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்கக் கூட முடியாத நிலை ஏற்படுவது இறப்பையும் தாண்டிப் பெரும் சோகமாக உருவெடுத்துள்ளது.

`நிறைந்த கல்லறைகள்; சாலையில் வைக்கப்படும் உடல்கள்‘ - ஈக்குவேடார் சோகம் #Corona
அடுத்த கட்டுரைக்கு