Published:Updated:

கடவுளின் தேசத்து கண்மணிகள்!

கல்யாணி பிரியதர்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி பிரியதர்ஷன்

சினிமா

கடவுளின் தேசத்து கண்மணிகள்!

சினிமா

Published:Updated:
கல்யாணி பிரியதர்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி பிரியதர்ஷன்
புகழ் வெளிச்சம் திடீரென எந்த ஹீரோயின் மீதும் விழும். சிலர் அந்த வெளிச்சத்திலேயே உச்சத்துக்கு வருவார்கள். சிலர் திடீரென காணாமலும் போவார்கள். நடிப்பும் அர்ப்பணிப்புமே இதை முடிவு செய்யும். இப்போது மலையாள சினிமாவில் அப்படியான நடிகைகள் யார் யார், அவர்களின் கரியர் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

ரஜிஷா விஜயன்

நயன்தாரா, நஸ்ரியாவைத் தொடர்ந்து, டி.வி ஆங்கராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்த மலையாள நடிகைகளில், இன்றைய டாப் சென்சேஷன் ரஜிஷா விஜயன். `அனுராகக்கரிக்கின் வெள்ளம்' படத்தில் இவர் நடிப்புக்கு ஏராளமான விருதுகள் குவிந்தன. முதல் படத்திலேயே அனைவரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது. `ஜார்ஜேட்டன் பூரம்', `ஒரு சினிமாக்காரன்' ஆகிய படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்தை செவ்வென செய்திருந்தார். `ஜூன்' திரைப்படத்தில் இவரது நடிப்புதான் மொத்தப் படத்தையும் தாங்கிச் செல்லும். இது சூப்பர்ஹிட்டாக, `ஃபைனல்ஸ்', `ஸ்டாண்ட் அப்', `கோ- கோ' என இவரை மையப்படுத்திய கதைகள் நிறைய வரத் தொடங்கின. மலையாளத்தில் இவரது நடிப்பைக் கண்டு தமிழில் வாய்ப்புகள் குவிந்தன. தனுஷுடன் `கர்ணன்' படத்தில் நம்மைக் கவர்ந்தவர், தற்போது சூர்யாவுடன் `ஜெய் பீம்', கார்த்தியுடன் `சர்தார்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தவிர, ஃபகத் பாசிலுடன் இவர் நடித்த `மலையன்குஞ்சு' என்ற படத்தில் இவரது கதாபாத்திரத்தைக் காண மல்லு ரசிகர்கள் வெயிட்டிங். மல்லுவுட், கோலிவுட்டில் இவ்வளவு பிரபலமான இவரை டோலிவுட் விட்டுவைக்குமா என்ன? ரவிதேஜாவின் `ராமாராவ் ஆன் டூட்டி' படத்தில் இவர்தான் நாயகி!

ரஜிஷா விஜயன் - நிமிஷா சஜயன்
ரஜிஷா விஜயன் - நிமிஷா சஜயன்

நிமிஷா சஜயன்

மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நிமிஷாவின் பூர்வீகம் கேரளம்தான். திலீஷ் போத்தன் இயக்கத்தில் உருவான `தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்' படம்தான் இவரின் அறிமுகப்படம். `ஈடா' படத்தில் கல்லூரி மாணவி; `மாங்கல்யம் தந்துனானேனா' படத்தில் திருமணமான பெண்; `ஒரு குப்ரசித்த பையன்' படத்தில் வழக்கறிஞர் என நிமிஷா சஜயன் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்துக்குப் படம் மாறுபடும். சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வெளியான `சோலா'-வில் இவரது நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. ஒரு பக்கம் `மாலிக்', `நாயாட்டு' மாதிரியான அரசியல் படங்களில் தன்னுடைய அழுத்தமான நடிப்பைப் பதிவுசெய்யும் நிமிஷா, `தி கிரேட் இந்தியன் கிச்சன்' மாதிரியான குடும்பப் படங்களில் யதார்த்தத்தின் உச்சியில் நிற்பார். நடித்தால் ஹீரோயின்தான் என்றில்லாமல், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிக்ஸர் அடிக்கும் அசத்தல் ஆர்ட்டிஸ்ட், நிமிஷா.

ஐஸ்வர்யா லட்சுமி

`நண்டுகளுடே நாட்டில் ஓரிடவெளா' படத்தில், சின்ன கதாபாத்திரத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, அடிப்படையில் ஒரு மருத்துவர். `மாயநதி' இவர் கரியரில் மட்டும் மிக முக்கியமான படமல்ல, டொவினோ தாமஸுக்கும்தான். அதைத் தொடர்ந்து, ஃபகத் பாசிலுடன் `வரதன்', தெலுங்கில் ஹிட்டான `பெல்லிச்சுப்புலு' படத்தின் மலையாள ரீமேக், காளிதாஸ் ஜெயராமுடன் `அர்ஜென்டினா ஃபேன்ஸ் காட்டூர்கடவு' என அடுத்தடுத்து முன்னணி நாயகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. விஷாலுடன் `ஆக்‌ஷன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவருக்கு வெற்றியாக அமையவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக `ஜகமே தந்திரம்' படத்தில் நடித்த இவருக்கு அடித்தது ஜாக்பாட். மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் ஏராளமான வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காமல், மலையாளத்தில் தனக்கு வரும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். நிவின் பாலியுடன் `பிஸ்மி ஸ்பெஷல்', `அர்ச்சனா 31 நாட் அவுட்', `குமாரி' என இவர் லைன்-அப்பில் இருக்கும் படங்கள் அனைத்தும் இவரை மையப்படுத்திய கதைகள்தான்.

ஐஸ்வர்யா லட்சுமி - அன்னா பென்
ஐஸ்வர்யா லட்சுமி - அன்னா பென்

அன்னா பென்

ஃபேஷன் டிசைனிங் முடித்த கையோடு மலையாள சினிமாவில் அடியெடுத்துவைத்த அன்னா பென்னுக்கு அசுர வளர்ச்சி. `கும்பளங்கி நைட்ஸ்' படத்தைப் பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது. படத்தில் அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும், அன்னா பென் கவனிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, `ஹெலன்', `கப்பேலா', `சாரா'ஸ்' என தன் கரியரின் தொடக்கத்திலேயே மொத்தப் படத்தையும் தாங்கிச் செல்லுமளவுக்கு கதைகள் அமைந்தன. கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டு, முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அன்னா பென், மலையாளத் திரையுலகின் நல்வரவு. இவருக்காகவே கதை எழுதத் தொடங்கிவிட்டார்கள். மலையாள சினிமாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் அன்னா பென், சிறந்த நடிகைகளுக்கான சினிமா வரலாற்றில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தர்ஷனா ராஜேந்திரன்

லண்டனில், பொருளாதாரப் படிப்பை முடித்த தர்ஷனா, மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் விஷ் லிஸ்ட்டில் இருக்கிறார். 2014-ம் ஆண்டிலேயே தனது கரியரைத் தொடங்கியிருந்தாலும் சமீபமாகத்தான் தர்ஷனாவின் எழுச்சி ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்த தர்ஷனாவுக்கு, இப்போதுதான் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் வரத் தொடங்கி யிருக்கின்றன. ஓடிடி-யில் வெளியான `சி யூ சூன்', `இருள்' இரு படங்களிலும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்திருந்தார். குறிப்பாக, `இருள்' திரைப்படத்தில் ஃபகத் பாசில், செளபின் சாஹிர் என இரு நடிப்பு அரக்கர்களுக்கு மத்தியில், தர்ஷனா அடித்த எதிர்நீச்சல் பேசப்பட்டது. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தன்னை அர்ப்பணிக்கும் நாயகிகளுள் தர்ஷனா மிக முக்கியமானவர்.

தர்ஷனா ராஜேந்திரன் - கல்யாணி பிரியதர்ஷன்
தர்ஷனா ராஜேந்திரன் - கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன்

இயக்குநர் பிரியதர்ஷனின் மகள். நியூயார்க்கில் ஆர்க்கிடெக்ட் டிசைனிங் முடித்தவர், நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் தியேட்டர் ப்ளே கற்றுக்கொண்டார். சினிமாவில் எடுத்தவுடன் நாயகியாக வரவில்லை, கல்யாணி. உதவி கலை இயக்குநராக சாபு சிரிலுடன் `க்ரிஷ் 3' படத்தில் பணியாற்றியிருக்கிறார். பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்த விக்ரம் குமார், கல்யாணி பிரியதர்ஷனை `ஹலோ' படத்தில் அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் மூன்று படங்கள் நடித்து முடித்த பிறகு, `ஹீரோ' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தற்போது, `மரக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்', `ஹிருதயம்', `மாநாடு' என தமிழ், மலையாளத்தில் செம பிஸி. மூன்று மொழிகளுக்கும் கல்யாணி பரிச்சயம் என்பது இவரது ப்ளஸ்.